மஹிந்தவின் உகண்டா பயணத்துக்கு அரசாங்கம் செலவு!
மக்களாலும் ஊடகங்களாலும் விமர்சனங்கள் !!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உகண்டா பயணத்துக்கான முழுச் செலவும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உகண்டாவின் ஜனாதிபதி முசோவெனியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது நெருங்கிய அரசியல்வாதிகள் சிலர் உகண்டாவுக்கு சென்றுள்ளனர்.
இதற்காக முன்னாள் ஜனாதிபதியின் விமானப் பயணம் மற்றும் தங்குமிட வசதிகளுக்கான முழுக்கட்டணமும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அந்தரங்க செயலாளர் உதித லொகுபண்டார கடந்த 11ம் திகதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடம் இது தொடர்பாக எழுத்து மூல கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட அரசாங்கம் கொழும்பு-டுபாய், டுபாய்- எண்டபே (உகண்டா) விமானப் பயணங்களுக்கு முதல் வகுப்பு விமான டிக்கட்டுகளை கொள்வனவு செய்வதற்காக நான்கு லட்சத்தி 25 ஆயிரம் ரூபாவை ஒதுக்கிக் கொடுத்துள்ளது.
ஒருபுறம் மஹிந்தவுக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் அரசாங்கம், இலங்கை நாட்டுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தவகையிலும் நன்மை பயக்காத, நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவரின் தனிப்பட்ட பயணமொன்றுக்கு இந்தளவு தொகையை ஒதுக்கிக் கொடுத்திருப்பது வரையறைகளை மீறிய செயற்பாடாக ஊடகங்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
அத்துடன் மஹிந்த ஆட்சியைப் போன்றே இந்த ஆட்சியிலும் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதற்கு இதையும் ஒரு எடுத்துக்காட்டாக கொள்ள முடியும் என்றும் குறித்த விமர்சனங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 comments:
Post a Comment