ஷாஜஹானின் பிறந்தநாள்:
தாஜ் மஹாலில் கோலாகல கொண்டாட்டம்
பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி

தாஜ் மஹால் என்ற சலவைக்கல் காவியத்தை மனைவி மும்தாஜின் நினைவாக உருவாக்கிய மொகலாய மன்னர் ஷாஜஹானின் 316-வது பிறந்தநாளையொட்டி அவரது சமாதியில் எதிர்வரும் 5-ம் திகதி மலரஞ்சலி செலுத்தப்படுகிறது.
ஷாஜஹானின் பிறந்தநாளையொட்டி நாளை மற்றும் நாளைமறுநாள் (மே 3,4 ) பிற்பகல் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுமக்கள் தாஜ்மஹாலை இலவசமாக சுற்றிப்பார்க்க ஆக்ரா மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அவரது பிறந்தநாளான எதிர்வரும் ஐந்தாம் திகதி ஷாஜஹானின் சமாதி கழுவி, தூய்மைப்படுத்தப்பட்டு, 810 மீட்டர் அளவிலான மலர்போர்வை சமாதியின்மேல் சாத்தப்படுகிறது. இந்த போர்வைக்கான துணிகள், இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், ஜைனர்கள், முஸ்லிம்கள் என பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் சிறு, சிறு துண்டு துணிகளாக அளித்த காணிக்கைகளால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து மதங்களையும் ஒருங்கிணைக்கும் விதமாக ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த உருஸ் விழா எதிர்வரும் ஐந்தாம் திகதியுடன் நிறைவடைகிறது, இதையொட்டி, அன்று முழுவதும் தாஜ் மஹாலை பொதுமக்கள் இலவசமாக சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மூன்று நாட்களிலும் தாஜ் மஹால் வளாகத்தில் ஷெனாய் இசை மற்றும் கவாலி இசை கச்சேரிகள் நடத்த தாஜ் மஹால் பராமரிப்பு கமிட்டி ஏற்பாடு செய்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top