தீவிரமடையும் உஷ்ண காலநிலை!
மாணவர்களுக்கு கல்வி அமைச்சினால் பல்வேறு அறிவுறுத்தல்கள்
நாட்டில் அதிக வெப்பம் காணப்பட்டாலும் பாடசாலை நேரத்தில் மாற்றமில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக பல்வேறு பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய வளிமண்டலவியல் திணைக்களம், சுகாதார அமைச்சு மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் இந்த நிலைமை குறித்து ஆலோசனைகளையும் பரிந்துரைகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரையில் வெப்ப நிலைமை அதிகளவில் காணப்படும், இந்தக் காலப்பகுதியில் மாணவர்களை பாடசாலையை விட்டு வெளியேற்றக் கூடாது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த நேரங்களில் பாடாசாலை மாணவர்கள் வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடுவதனை தவிர்த்தல், போதிளவு நீரைப் பருகச் செய்தல், பாடசாலை வகுப்பறைகளுக்கு போதியளவு காற்றோட்ட வசதியை ஏற்படுத்தும் வகையில் யன்னல் கதவுகளை திறந்து வைத்தல், பாடசாலையில் போதியளவு நீர் வசதி இல்லாவிட்டால் அதற்கான மாற்று வழிகளை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக மாணவர்கள் தனிப்பட்ட ரீதியில் பின்பற்ற வேண்டிய சில விடயங்கள் பற்றியும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதிகளவு இனிப்பூட்டப்பட்ட பானங்களை அருந்துவதனை தவிர்த்தல், தொப்பி அல்லது குடைகளை பயன்படுத்தல், குடிநீர் போத்தலை எடுத்துச் செல்லல் உள்ளிட்ட சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகள் அதிக வெப்ப நிலை காரணமாக 12.00 மணிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment