கிழக்கு மாகாணத்துக்கு வெளியே நியமனம் பெற்ற
கிழக்கு மாகாண கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் விவகாரம்

கால நீடிப்பு நாள் கல்வியமைச்சால்

உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும்


இவ்வாண்டு கல்வியல் கல்லூரியை பூர்த்தி செய்த மாணவர்கள் தங்களது நியமனக் கடித்தத்தில் எந்தப் பாடசாலை கிடைக்குமோ என்ற பதட்டத்தில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தனர்.இச் சந்தர்ப்பத்தில் மு.காவின் முக்கிய உறுப்பினர்களிடமிருந்து ஒரு அறிவிப்பு வெளியாகிறது.
                                                                                                                           
அறிவிப்பு 1 : கிழக்கு மாகாண ஆசிரியர்கள் கிழக்கு மாகாணத்தினுள்ளே நியமிக்கப்படுவர்.

அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கலானர்.குறித்த நியமனம் வழங்கப்பட்ட நான்காம் திகதி கல்வியல் கல்லூரியை பூர்த்தி செய்தவர்கள் தங்களது நியமனத்தை கையில் பெற்ற போது தான் மு.காவின் இயலாமை வெளிப்பட்டது.அவர்களின் வதனங்களும் வாடின.அந் நியமனங்கள் இலங்கையில் பல பாகங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தன.கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான ஆசிரியர்கள் கிழக்கிற்கு வெளியே நியமிக்கப்பட்டிருந்தார்கள்.இச் சந்தர்ப்பத்தில் மு.காவினர் இது தொடர்பில் தங்களிடம் வாக்குறுதியளித்தவர்களை சுட்டிக்காட்டி கடுமையாக கண்டித்திருக்க வேண்டும்.யாராவது அப்படியான கண்டிப்பு அறிக்கைகளை கண்டீர்களா?

சிறு சலனமும் வேண்டாமென்ற அறிவிப்பை விடுத்த மு.காவினரிடமிருந்து இரண்டாவது அறிவிப்பு வெளியாகியது.

அறிவிப்பு 2 : #### கிழக்கிற்கு வெளியே நியமிக்கப்பட்டவர்கள் யாருமே தங்களது பாடசாலைகளில் இணைய வேண்டாம்.பிரதமர் நாடு திரும்பியதும் இது தொடர்பில் பேச்சு நடாத்தப்படும்.வடக்கு முதலமைச்சருடன் மேற்கொண்ட பேச்சு வார்த்தைக்கு அமைய வடக்கு முதலமைச்சர் அவ்வாறு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.####

தற்போது வடக்கு முதலமைச்சர் பற்றிய கதைகளை எங்குமே காண முடியவில்லை.பிரதமருடனும் முதலமைச்சர் பேச்சு நடாத்தியிருந்தாலும் அது வெற்றி பெற்றதாக அவர்களே எங்கும் குறிப்பிடவில்லை.பிரதமர் இவ்விடயத்தில் கரிசனை கொள்ளாவிட்டால் இதன் வெற்றித் தன்மை...?

அறிவிப்பு 3 : ##  வெளிமாகாணங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு எதிர்வரும் வியாக்கிழமைக்குள் (13-10-2016)  நற்செய்தி.##

வெளிமாகாணங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நற்செய்தி கிடைப்பதாக கூறிய வியாழக் கிழமை கடந்த நிலையில் குறித்த நற்செய்தியை காத்திரிந்து அலுத்துப் போன நிலையில் இருந்தார்கள்.இப்போதும் மு.காவினரிடமிருந்து நம்பிக்கையூட்டும் வசனங்களே வெளியாகின்றன.விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.

அறிவிப்பு 4 : ##அடுத்த வாரம் இறுதி முடிவு அறிவிக்கப்படும்##

இறுதி முடிவை எதிர்பார்த்திருந்த ஆசிரியர்களுக்கு கிழக்கு முதலமைச்சர் ஒற்றைக் காலில் நிற்கும் செய்தி வெளியாகிறது.தற்போதைய நிலை எதிர்வரும் பத்தொன்பதாம் திகதி புதன் கிழமை குறித்த பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பாடசாலைகளில் இணைய வேண்டும் அல்லது அவர்களது நியமனம் செல்லுபடியற்றதாகிவிடும்.

அறிவிப்பு 5 :  ##  கடமைகளை விடுவிக்கும் நாள் அதிகரிக்கப்பட்டுள்ளது  ##

இது தான் மு.காவினரிடமிருந்து வெளியான இறுதி அறிவிப்பு.வெளிமாகாணங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் விடயத்தில்  மு.காவின் எந்தச் செய்திகளும் நம்பிக்கையளிக்கும் வகையில் அமையாத போது யாராவது மு.காவின் இறுதி அறிவிப்பை நம்புவார்களா.நம்புவது தான் அறிவுடமையா? கடமையை பொறுப்பேற்க நாளை மாத்திரமே எஞ்சியுள்ளது.இச் சந்தர்ப்பத்தில் இது தொடர்பான அறிவித்தல் உத்தியோக பூர்வமாக கல்வியமைச்சால் அறிவிக்கப்படல் வேண்டும்.இவர்களின் வாக்குறுதியை நம்பி தங்கள் வாழ்கையை அவ் ஆசிரியர்கள் தொலைக்க முடியாது.தற்போது அவ்வாறு நியமிக்கப்பட்ட ஆசிர்யர்கள் மிகவும் குழப்பமான நிலையில் உள்ளனர்.குறித்த விடயத்துடன் சம்பந்தப்பட்டவர்களை நோக்கிய தொலை பேசி அழைப்புக்கள் விடுக்கப்படுகின்ற போதும் பதில்களில்லை.

நேற்று 17 ஆம் திகதி கல்வியமைச்சில் முதலமைச்சர் ஒற்றைக் காலில் நின்றார்.பதினான்காம் திகதி கிழக்கு முதல்வரை தொடர்பு கொண்ட கல்வியமைச்சின் செயலாளர் வெளி மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும் கிழக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்படுவார்கள் என்ற உறுதி மொழியை வழங்கியதாகவும் உறுதியான அறிவிப்புக்கள் வெளியாகியிருந்தன.ஒரு அமைச்சின் செயலாளர் அவராகவே தொடர்பு கொண்டு இவ் உறுதி மொழியை வழங்கியிருந்தார் செய்யாமல் விட்டிருப்பாரா? அவராகவே அழைப்பை ஏற்படுத்தி உறுதி மொழியை வழங்கிவிட்டு அவ்வாறு செய்யவில்லை என்றால் கிழக்கு அவர் முதலமைச்சரை நையாண்டி பண்ணுகிறாரா? இதன் உண்மைத் தன்மை தான் என்ன?

இது தொடர்பில் மு.கா தலைவரின் நிலைப்பாடு தான் என்ன? கிழக்கு விடயத்திற்கும் அவருக்கும் சம்மதம் இல்லையோ? உங்கள் நகைச்சுவை அறிவிப்புக்களை விட்டு விட்டு சாதித்துவிட்டு மக்கள் முன் தலை நிமிர்ந்து கதையுங்கள்.

இவர்கள் முறையான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.இது தொடர்பில் நான் சில நாட்கள் முன்பு எழுதிய கட்டுரையையும் இத்தோடு இணைக்கின்றேன்.

கல்வியல் கல்லூரி நியமனத்தில் மு.கா மக்களை ஏமாற்றுகிறதா?

கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் ஆசிரியர்களின் தேவை உணரப்படுகிறது.கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தினுள் உள் வாங்குவதன் மூலம் இப் பிரச்சினைகளுக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.அது மாத்திரமல்லாது தூர இடங்களுக்கு நியமனம் பெறுபவர்கள் பொருளாதார ரீதியான சிக்கலுக்கும் ஆளாவர்.இவ்வாறான சிந்தனைகளின் அடிப்படையில் மு.கா நேற்று 4ம் திகதி நியமனம் பெற்ற கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அனைத்து ஆசிரியர்களையும் கிழக்கு மாகாணத்தில் உள் வாங்கும் முயற்சியை செய்துள்ளதாகவும் யாரும் சிறிதேனும் சலனப்பட வேண்டாம் என்ற அறிவிப்பையும் விடுத்திருந்தது.

தற்போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் இலங்கையின் பல பாகங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அப்படியானால் மு.காவின் இம் முயற்சி தோல்வியை தழுவியுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.இவ்விடயத்தில் மு.கா உள ரீதியாக முயற்சி செய்திருப்பின் அம் முயற்சி பாராட்டப்பட வேண்டியதென்பதை மறுப்பதற்கில்லை.இவ்விடயத்தை மு.கா சரியான விதத்தில் சாதிக்க முயன்றுள்ளதா என்பது தான் இங்கு ஆராயத்தக்க விடயமாகும்.இந் நியமன விடயத்தில் மு.கா கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் பேச்சு வார்த்தை நடாத்தியிருக்க வேண்டும்.

அதன் பிறகு அவர் இவ்விடயத்தில் உறுதிமொழி அளித்த பிறகேநீங்கள் யாரும் சலனப்பட வேண்டாம்என்ற அறிவிப்பை மு.காவினர் விடுத்திருக்க வேண்டும்.கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதில் முரண்பட்டிருப்பின் அதனை அரசின் உயர் மட்டங்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் தீர்த்துக்கொள்ள முயற்சித்திருக்க வேண்டும்.தற்போது மு.காவினர் பிரதமரிடம் இது தொடர்பில் பேசவுள்ளதாக கூறியுள்ளமை இவர்கள் அரசின் உயர் மட்டத்திற்கு இவ்விடயத்தை கொண்டு செல்லாமையை அறிந்துகொள்ளச் செய்கிறது.

கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டிருப்பின் கிழக்கு மாகாண ஆசிரியர்கள் வேறு எங்கும் நியமிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.இவர்கள் இது தொடர்பில் ஜனாதிபதி,பிரதமர் போன்ற அரசின் உயர் மட்டங்களுக்கு கொண்டு சென்றிருப்பின் நிச்சயம் கல்வியமைச்சர் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருப்பார்.இங்கு ஒரு விடயத்தை அறிந்து கொள்ளலாம்.இவர்கள் சரியான முறையில் முயலாது சிறு முயற்சி ஒன்றை செய்துவிட்டு பேஸ்புக்கில் பதிவிட்டு தங்கள் மதிப்பெண்களை அதிகரிக்க முயன்றுள்ளனர்.அல்லாது போனால் அகில விராஜ் காரியவசம் இவர்களை நம்ப வைத்து கழுத்தருத்திருக்க வேண்டும்.இப்படித் தான் கல்முனை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்ட போது வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கொரள தங்களிடம் இது நடைபெறாதென உறுதி மொழி அளித்துள்ளதாக கூறிய மறு கணம் அப் பணியகம் அம்பாறைக்கு சென்ற சிறு பிள்ளைத் தனமான அரசியலைலைத் தான் மு.கா மேற்கொண்டு வருகிறது.

ஒரு அமைச்சரிடம் சென்று ஒரு குழுவினர் ஏதாவதொன்றை கோரும் போது அதனை குறித்த அமைச்சர் செய்து தருவதாக கூறுவது வழமை.இவ்வாறான சமாளிப்புக் கதைகளை நம்பிக்கொண்டு மு.கா இவ்வாறான வாக்குறுதிகளை வழங்குகிறதென நினைக்கின்றேன்.கிழக்கு மாகாணத்திற்கு மொத்தம் 192 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 123பேர் (64வீதம்) தமிழ் மொழி மூல ஆசிரியர்களும்  69 (36வீதம்)சிங்கள மொழி மூல ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழ் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர் எண்ணிக்கை போத்துவிலிலுள்ள ஆசிரியர் எண்ணிக்கையை கூட நிவர்த்திக்காது.கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் விகிதத்தையும் சிங்கள மொழி மொழி பேசும் மக்களின் விகிதத்ததையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இதில் பேரின அழுத்தம் எந்தளவுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.எமது அரசியல் வாதிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்?

தற்போது மு.கா குறித்த நியமனம் பெற்ற ஆசிரியர்களை குறித்த பாடசாலைகளுக்கு சற்று நிதானித்துச் செல்லுமாறு கூறியுள்ளது.பாடசாலைகளில் இணைந்த பின்பு அதனை இன்னுமொரு இடத்திக்கு மாற்றுவதில் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளமை இதற்கான காரணமாக இருக்கலாம்.இந்த நேரத்தில் என் நினைவுக்கு வந்த ஒரு விடயம் தான் அண்மையில் கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு மேல் மாகாணத்தில் நியமனம் வழங்கப்பட்ட விடயமாகும்.இதன் போதும் மு.காவினர் இவ்வாறான வாக்குறுதிகளை வழங்கி அவர்களது தகவல்களை சேகரித்திருந்தனர்.இந்த விடயத்தில் மு.கா எந்த வித முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டதாக அறிய முடியவில்லை.இவ்வாறு மு.கா இந்த விடயத்தை கையாள்கிறதா என்ற சிந்தனையும் வராமலில்லை.எது எவ்வாறு இருப்பினும் இந்த விடயத்தை அனைத்து முஸ்லிம் தரப்புகளும் இணைந்து கையாள வேண்டும்.இவ்விடயத்தை கூட்டாக இணைந்து கையாளாது தனித்தனியாக கையாள நினைப்பதும் இவ்வாறான விடயங்களின் தோல்விக்கு பிரதான காரணமாகும்.###################################

துறையூர் .கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top