ஆயுத பூஜை சிக்கல்..
இரு மதத்தினருக்கிடையே பகைமையை ஊக்குவித்தல்,
சட்டத்துக்கு முரணாக ஆயுதங்கள் வைத்திருத்தல்
இரு பிரிவுகளில் வழக்கு !
தனது வீட்டில் நடந்த ஆயுதபூஜை கொண்டாட்டத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களோடு அர்ஜூன் சம்பத் பூஜை நடத்த, அதுவே சிக்கலாகி உள்ளது. இரு மதத்தினருக்கிடையே பகைமையை ஊக்குவித்தல், சட்டத்துக்கு முரணாக ஆயுதங்கள் வைத்திருத்தல் என இரு பிரிவுகளில் வழக்கு பாய்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை இரு தினங்களுக்கு முன்னர் விமரிசையாக கொண்டாடப்பட்டது. தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், கருவிகளை வைத்து இந்த நாளில் வழிபடுவது வழக்கம். இந்நிலையில், தனது வீட்டில் நடந்த ஆயுதபூஜையில் துப்பாக்கி, வாள், கத்தி போன்ற ஆயுதங்களை வைத்து ஆயுதபூஜை கொண்டாடினார் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத். தனது முகநூல் பக்கத்தில் இந்த படத்தை அர்ஜூன் சம்பத் பதிவேற்ற, அதுவே பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து உடனடியாக அந்த படம் முகநூலில் இருந்து நீக்கப்பட்டது.
இதற்கிடையே இதுதொடர்பாக இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர், ஜெ.அப்துல் ரஹீம் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அர்ஜூன் சம்பத் வழிபாட்டின்போது பயன்படுத்திய துப்பாக்கி அரசு அனுமதி பெற்றதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இன்று கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் பயங்கர ஆயுதங்களை வைத்திருக்கும் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளித்தனர். மறுமலர்ச்சி தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது.
புகாரில் "சமீபத்தில் கோவையில் நடந்த இந்து முன்னணி நபரின் கொலைக்காக இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ள இந்த நேரத்தில், குழப்பத்தையும், அச்சுறுத்தல் சூழலையும் ஏற்படுத்தும் வகையில் இந்த முகநூல் பதிவு உள்ளது. எனவே அவரை கைது செய்ய வேண்டும். படத்தில் உள்ள ஆயுதம் வீட்டு உபயோகத்திற்கோ, விவசாய உபயோகத்திற்கோ பயன்படுத்துபவை அல்ல.இவை கொலைக்கருவிகள் போன்ற ஆயுதங்கள். சட்டஅனுமதியின்றி இவற்றை வைத்திருப்பது தடுக்கப்பட வேண்டும்," என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் மீது இரு பிரிவுகளில் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெவ்வேறு குழுவினருக்கிடையே பகைமையை ஊக்குவித்தல் சட்டத்துக்கு முரணாக ஆயுதங்கள் வைத்திருத்தல் ( ஆயுதச்சட்டம்) ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment