கல்முனை நகரத்தை முஸ்லிம்கள் கபளீகரம் செய்தார்கள்

எனக் கூறுவது வேதனைக்குரியது

தமிழ்-முஸ்லிம் ஐக்கியத்தை மேலும் மலினப்படுத்துகின்றது.



கல்முனை நகரம் தமிழர்களுடையது அல்லது தமிழர்களுக்கு மட்டும் உடையது, அதை முஸ்லிம்கள் கபளீகரம் செய்தார்கள் என்று சில அரசியல் வாதிகளினால் ஆதாரமின்றி கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதானது வேதனைக்குரியது என பூர்வீக வரலாறு தொடர்பிலான பிரகடன நிகழ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, பூர்வீகம், பாரம்பரியம் மற்றும் தேசிய அடையாளம் என்பவைகளில் இருந்து பிரிக்க முடியாத தொன்மைமிக்க நகராக கல்முனை இருந்து வருகின்றது. இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்கள், மட்டக்களப்பினை தமிழ் சிற்றரசர்களினை கொண்டும் கல்முனையை முஸ்லிம் சிற்றரசர்களினை கொண்டும் நிர்வகித்து வந்துள்ள வரலாறுகள் உள்ளன.
ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட உள்ளுராட்சி தொடர்பிலான சட்டங்களில் கல்முனை முஸ்லிம்களினுடைய பூர்வீகம் என்ற தொன்மை மிக்க வரலாறு பேணப்பட்டிருந்தது. கல்முனை பிரதேசம் ஒரு நகரமாக உத்தியோகபூர்வமாக அப்போதைய ஆளுநர் சேர் ஜே.ரிட்ச்வேயினால் 1892ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க சிறிய பட்டின சுகாதார சபைகள் சட்டத்தின் பிரிவு - 2 இன் கீழ் 1897 பெப்ரவரி 19 ஆம் திகதி வெளியிடப்பட்ட 5459 ஆம் இலக்க அரச வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்டது. அது முஸ்லிம் பெரும்பான்மையை கொண்டமைந்திருந்தது.

உண்மை இவ்வாறு இருக்க, கல்முனை நகரம் தமிழர்களுடையது அல்லது தமிழர்களுக்கு மட்டும் உடையது, அதை முஸ்லிம்கள் கபளீகரம் செய்தார்கள் என்று சில அரசியல் வாதிகளினால் ஆதாரமின்றி கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதானது வேதனைகுரியது மட்டுமல்லாது, தமிழ்-முஸ்லிம் ஐக்கியத்தை மேலும் மலினப்படுத்துகின்றது.

குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாரளுமன்றத்தில் குறிப்பிட்ட “95 வீதம் தமிழர்கள் வாழ்ந்து வரும் கல்முனை நகரம்என்பது பொய்யாக புனையப்பட்ட எவ்வித ஆதாரங்களும் இன்றி கூறப்பட்ட ஒரு முதிர்ச்சியற்ற கூற்று எனவும் அது அமைதியாக ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம் சமுகங்களை மோதவிட்டு முஸ்லிகளின் பாரம்பரிய வாழ்விடங்களையும் பொருளாதாரத்தினையும் சூறையாடும் நோக்கில் அரங்கேற்றப்பட்டு வரும் சதித்திட்டங்களிள் ஒன்று என்பதையும் இத்தால் மிகவேதனையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

கல்முனை நகரம் முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்டிருந்தாலும் அது ஏனைய தமிழ், சிங்கள மற்றும் பறங்கி குடிமக்கள் அனைவரும் சமாதானமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.


இன அடிப்படையில் துண்டாடப்படாத கல்முனை நகரத்தினுள் எந்த பிரதேச அல்லது எந்த இனத்தில் இருந்து வரும் நேர்மையான நிர்வாகிகளை எங்களின் நிர்வாகிகளாக ஏற்று என்னேரமும் ஒத்துழைப்பு வழங்க கல்முனை நகர முஸ்லிம்களாகிய நாங்கள் தயாராக உள்ளோம் என்கின்ற நல்லெண்ணத் தினையும் நாங்கள் பிரகடனம் செய்கின்றோம்" என்று அந்த பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top