எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு தீர்வு காணவில்லையெனில்

"சார்க்'அழிந்துவிடும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை




எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துக்கு தீர்வு காணப்படவில்லையெனில், சார்க் அமைப்புக்கு எதிர்காலமிருக்காது (அழிந்துவிடும்) என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
டில்லிக்கு அரசு முறைப் பயணமாக இந்தியா சென்ற்ள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேற்று புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது தலைவர்கள் இருவரும், தெற்காசியப் பிராந்திய பாதுகாப்பு நிலவரம், மீனவர் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:
எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். அதுகுறித்து சார்க் அமைப்பு ஆராய வேண்டும். என்ன நடந்தது (சார்க் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டது) என்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் எந்தெந்த பகுதிகளில் சார்க் நாடுகள் இணைந்து செயல்படுவது ஆகியவை குறித்து சார்க் அமைப்பு நாடுகள் முடிவெடுக்க வேண்டியுள்ளது. இவற்றைச் செய்யவில்லையெனில், சார்க் அமைப்புக்கு எதிர்காலம் இருக்காது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்னையால், சார்க் அமைப்பில் இருக்கும் நாடுகள் 2 அணிகளாக பிளவுப்பட்ட காரணத்தால், கடந்த 2 ஆண்டுகளாக எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை.
உரி தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூள வாய்ப்புள்ளதா? எனக் கேட்கிறீர்கள். எந்தவொரு நாடும், போரை உபாயமாக கையாளாது என்று நினைக்கிறேன். இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணிப்பதற்கு பிரதமர் மோடி ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்றார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.
அப்போது அவரிடம், இஸ்லாமாபாதில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த சார்க் மாநாட்டை புறக்கணிப்பதென்று, இலங்கை ஏன் தாமதமாக முடிவு எடுத்தது?, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்று இலங்கை ஏன் கண்டிக்கவில்லை? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
ஆப்கானிஸ்தானும், வங்கதேசமும் தங்களது உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றன. ஆனால், அப்படிவொரு பிரச்னை இலங்கைக்கு கிடையாது. எனினும், சார்க் மாநாட்டை நடத்துவதற்கான உகந்த சூழல் நிலவவில்லை என்று இலங்கை கருத்து தெரிவித்தது. பயங்கரவாதத்தால் இலங்கையும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
சார்க் அமைப்பில் இருந்து ஏதேனும் ஓர் நாடு வெளியேறும்பட்சத்தில், சார்க் அமைப்பை காக்க முடியுமா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "சார்க் அமைப்பில் இருந்து ஏதேனும் ஒரு நாடு விலகும்பட்சத்தில், அது தெற்காசியாவின் அமைப்பாக இருக்காது' என்றார்.
மேலும்:பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:
சார்க் அமைப்பின் முன் இருக்கும் பிரச்னைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், சார்க் அமைப்பு செயலற்றதாகி விடும். இந்த பிரச்னையானது, சார்க் அமைப்பில் இருந்து ஒரு நாடு வெளியேறுவது அல்லது அந்த அமைப்பில் ஓர் நாடு சேருவது சம்பந்தப்பட்டது அல்ல. பிரச்னைகளுக்கு சார்க் அமைப்பு தீர்வு காண வேண்டும். அந்தத் தீர்வு, அனைத்து நாடுகளுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
சீனாவுடனான இலங்கையின் நட்புறவு, பொருளாதாரம் சம்பந்தப்பட்டது ஆகும். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு, ராணுவ ரீதியிலானது அல்ல. இலங்கையில் நடைபெறும் உள்கட்டமைப்பு பணிகளில் சீனா ஈடுபட்டுள்ளது. இந்தியா ஒரு தனித்தன்மை வாய்ந்த நாடாகும். தெற்காசியப் பிராந்தியத்தை இந்தியாவால் சிறப்பான இடத்துக்கு கொண்டு செல்ல முடியும். இதைச் செய்வதா, வேண்டாமா? என்பதை இந்தியாதான் தீர்மானிக்க வேண்டும்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, (தமிழக) மீனவர் பிரச்னை குறித்து மிகவும் கவனமாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது, மீனவப் பிரச்னை குறித்து இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும், மீனவர் அமைப்புகளும் பேச்சுவார்தை நடத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது என்றார்:பிரதமர் ரணில் விக்ரமசிங்க 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top