வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கக்கோரி

மட்டக்களப்பில் சத்தியாக்கிரக போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு மத்திய அரசும் மாகாண அரசும் நியமனம் வழங்க நடவடிக்கையெடுக்க கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டதைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த சத்தியாக்கிரக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சத்தியாக்கிரக போராட்டத்திற்கு முன்பாக தமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எமக்கான வேலைவாய்ப்பு கிடைக்கும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும், பட்டதாரிகள் தொடர்ந்து வீதியிலா? உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.
பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு தமக்கான நியமனங்கள் வழங்குவது காலம் தாழ்த்தப்படுவதாகவும் இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிசாந்த் தெரிவிக்கையில்,

2012-03-31இற்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4500இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்ற நிலையில் காணப்படுகின்றனர்.
இருப்பினும் எந்த ஒருதீர்வினையும் மத்திய, மாகாண அரசுகள் வழங்காத நிலையில் காலவரையறையற்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு செல்லவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
பட்டதாரிகளின் திறமைகளை போட்டிப் பரீட்சைகள் மூலம் அறிந்து கொள்ள முடியாது. நேர்முகத் தேர்வின் மூலம் பட்டதாரிகளின் நியமனங்கள் பயிற்சி அடிப்படையிலாவது வழங்கப்படவேண்டும்.
பட்டதாரிகளின் நியமனங்கள் அவர்கள் பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையில் வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டத்தில் வேலையில்லா பட்டதாரிகள் உட்பட பச்சிளங்குழந்தைகளுடன் தாய்மார்களும் மற்றும் விசேட தேவையுடையவர்களும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top