மார்ச் 20: உலக சிட்டுக்குருவி தினம்

அழிவின் விளிம்பில் உள்ள அரிய உயிரினத்தை பாதுகாப்போம்

சிட்டுக்குருவி மற்றும் பிற பொதுவான பறவைகள் நகர சுற்றுச்சூழலில் வளர்ப்பதற்கான  விழிப்புணவு மற்றும் குறைந்து வரும் குருவி இனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்பதை நோக்கமாகக்கொண்டும் ஒவ்வொரு ஆண்டு மார்ச் 20ம் திகதி உலக சிட்டுக்குருவி தினம் கடைபிடிக்கப்படுகிறதுசர்வதேச அளவில் கடைபிடிக்கப்படும் இந்த சிட்டுக்குருவி தினத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள், பிரச்சாரங்கள் மற்றும் சித்திர போட்டிகள் ஆகியவை கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் கொண்டாடுவதற்கான காரணம் குருவிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதே ஆகும்.
காலப்போக்கில் வேகமாக அழிந்து வரும் உயிரினமான சிட்டுக்குருவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கமாகவே இவ்வாறு உலகம் முழுவதும் சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. விளைநிலங்களில் இரசாயன கலவையிலான பூச்சிக் கொல்லி மருந்துகள் அடித்து வளரும் தானியங்களை சாப்பிடும் சிட்டுக் குருவிகள் பரிதாபகரமாக  இறந்து விடுகின்றன.
சுமார் 40 அல்லது 50 வருடங்களுக்கு முன் எமது வயல் பிரதேசங்களில் சிட்டுக் குருவிகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து வருவதைக் காணமுடியும். ஏன் எமது பிரதான விதிகளில் உள்ள மின் கம்பிகளில் வரிசையாக அவைகள் அமர்ந்திருந்துப்பதையும் கூடு கட்டியிருப்பதையும் கண்டிருக்கின்றோம்.


சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’, ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா,’ ‘ஏய் குருவி, சிட்டுக்குருவி,’ என்று சிட்டுக்குருவியைப் பற்றி பல பாடல்களை சினிமா பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர்.
அந்த அளவுக்கு பிரபலமான சிட்டுக்குருவிகள் நம்மைவிட்டு படிப்படியாக மறைந்து, அழிவின் விளிம்பில் இருக்கின்றன. மனித சமுதாயத்துக்கு பல வழிகளில் நன்மை பயக்கும் சிட்டுக்குருவியை, உலக சிட்டுக்குருவி தினத்தில் காப்பாற்ற அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொள்ளலாம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நகர்புறங்களில் உள்ள வீடுகளில் கூடுகள் கட்டி, சிறகடித்து பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை இன்று எங்குமே பார்க்க முடியாத வகையில் சிட்டுக்குருவிகள் காணாமல் போய்விட்டன.
சிட்டு போல பறப்பதாலும், உருவில் சிறியதாக இருப்பதாலும் சிட்டுக்குருவி என்ற பெயர் வந்தது.. மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் பயமின்றி வாழும் இந்த சிட்டுக்குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினமாகும்.
இவை நெல், அரிசி, சோளம், மக்காச்சோளம், பயிறு வகைகள், கோதுமை, புல்லரிசி போன்றவை விரும்பி உண்கின்றன. அத்துடன் புழு, பூச்சி, வண்டுகளையும், பூ மொட்டுகளையும் உணவாக உட்கொள்கின்றன.
மக்கள் வசிக்கும் பகுதிகளில் காணப்பட்ட சிட்டுக்குருவிகளை பார்ப்பது இப்போது அரிதாகி வருகிறது. சிட்டுக்குருவி இனத்தை அழியாமல் காப்பாற்றுவதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆண்டுதோறும் மார்ச்-20யை உலக சிட்டுக்குருவி தினமாக அறிவித்து அவற்றை பாதுகாக்க போராடி வருகின்றனர்.

ஒருசில நாடுகள் சிட்டுக்குருவியை போற்றும் வகையில் அஞ்சல் தலைகளையும் வெளியிட்டு பெருமைப்படுத்தி வருகின்றன.
செல்போன் கோபுரங்களில் (டவர்களில்) இருந்து வெளியேறும் மின்காந்த அலைகளின் தாக்கம் சிட்டுக்குருவிகளின் இனபெருக்க மண்டலத்தை தாக்குகின்றன. இதனால் குருவிகள் மலடாகி போவதால் தங்கள் இனத்தை பெருக்க முடியவில்லை.
அதேபோல் பூச்சிக்கொல்லி மருந்து தானியங்கள் பயிர்கள் மற்றும் செடிகளுக்கு தெளிப்பதால், அதனை உண்ணும் சிட்டுக்குருவிகள் முட்டை தோல் கடினத்தன்மை இன்றி எளிதில் உடைந்து விடுவதால் இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
பருந்துகளும் தங்கள் உணவாக சிட்டுக்குருவிகளை அடித்து சாப்பிடுவதாலும் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறது. நீர், நிலம், காற்று மாசுபடுதல், காடுகள் அழிக்கப்படுதல் போன்றவற்றாலும் சிட்டுக்குருவிகள் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டன.
எல்லா உயிரினங்களும் சுற்றுச்சூழலின் உணவுச்சங்கிலியில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இந்தச் சங்கிலியில் ஓர் உயிரினம் அழியும்போது, அந்தச் சங்கிலியின் மொத்த அமைப்பும் சிதைக்கப்படும்.
சிட்டுக்குருவிகள், கொசுக்களின் முட்டைகளை விரும்பி உண்ணும். அவை இல்லாததால், கொசுக்கள் பெருகி நோயைப் பரப்பிவருகின்றன. எனவே, சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியம்.
நம் பகுதியில் சிட்டுக்குருவிகள் தென்பட்டால், அவற்றுக்குத் தூய்மையான நீர், உலர் தானியங்களை வைக்கலாம். வீட்டின் மொட்டைமாடியில் ஓர் இடத்தில் அட்டைப் பெட்டியை வைத்து, அதில் சிறிய துவாரம் இடுங்கள். உள்ளே கொஞ்சம் வைக்கோல் துண்டுகளையும் அரிசி, தானிய வகைகளையும் வையுங்கள். சிட்டுக்குருவிகள் கூடு கட்டத் தேவையான தேங்காய் நார்கள், பயன்படுத்தாத துடைப்பக் குச்சிகள், வைக்கோல் போன்றவற்றையும் வைக்கலாம். வீட்டுக்கு அருகில் செம்பருத்தி, மல்லிகை, முல்லை போன்ற செடிகள் இருந்தால், உங்கள் வீட்டில் விரைவில் சிட்டுக்குருவிகள் குடியேறிவிடும். பின்னர் சிட்டுக்குருவிகளின் இனிமையான கீச்... கீச்... குரலை மீண்டும் நம்மால் கேட்க முடியும்.

உலக சிட்டுக்குருவி தினமான இன்று முதல் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க நாம் உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top