மரத்தில் மோதி கார் தீப்பிடித்த விபத்தில்

பிரபல கார் பந்தய வீரர் அஸ்வின்- மனைவி

உடல் கருகி பலி


சென்னை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகர் அருகே இன்று அதிகாலையில் வேகமாக வந்த சொகுசுகார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த கார் பந்தைய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் மரணமடைந்தனர்.
சென்னை ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்தவர் அஸ்வின் (வயது27). பிரபல கார் பந்தய வீரரான இவர் தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

இவர் நேற்று இரவு மனைவி நிவேதிதாவுடன் தனது பி.எம்.டபிள்யூ காரில் பட்டினம்பாக்கம் எம்.ஆர்.சி. நகர் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். பின்னர் நள்ளிரவு 1.55 மணிக்கு ஓட்டலில் இருந்து இருவரும் காரில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

அஸ்வின் காரை ஓட்டினார். முன்புற இருக்கையில் நிவேதிதா அமர்ந்து இருந்தார்.

பட்டினப்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபம் எதிரில் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அஸ்வினால் காரை உடனடியாக நிறுத்த முடியவில்லை.

இதையடுத்து சாலை தடுப்பில் மோதிய கார் மின்னல் வேகத்தில் சென்று சாலை ஓரமாக இருந்த புளியமரத்தில் அதி பயங்கரமாக மோதியது.

இதில் காரில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்தது. இதனால் கண் இமைக்கும் நேரத்தில் கார் திடீரென தீப்பிடித்தது.

காரில் இருந்த அஸ்வினும், அவரது மனைவி நிவேதிதாவும் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதற்குள்ளேயே காரில் பிடித்த தீ மளமளவென பரவியது. இதனால் கார் கொழுந்து விட்டு எரிந்தது.

இதனால் அஸ்வினும், நிவேதிதாவும் உயிர் பிழைக்க வழியின்றி காருக்குள்ளேயே உடல் கருகி பலியானார்கள்.

நள்ளிரவில் இந்த கோர விபத்து நடந்ததால் தீயை உடனடியாக அணைத்து காப்பாற்றுவதற்கு கூட யாரும் அங்கு இல்லை. இருப்பினும் அந்த வழியாக சென்ற ஒருவர் கார் தீப்பிடித்து எரிவது பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் கார் முழுவதுமாக எரிந்து உருக்குலைந்து போனது.

காருக்குள் அஸ்வினும், நிவேதிதாவும் கரிக்கட்டையாக பிணமாக கிடந்தனர். இது தீயணைப்பு வீரர்களின் கண்களை கலங்க வைத்தது.

அஸ்வினும், நிவேதிதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

நிவேதிதா ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவர்களது திடீர் மரணம் கார் பந்தய விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கார் பந்தயத்தில் சிறந்த வீரராக விளங்கிய அஸ்வின் 10 முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். கடந்த ஒரு ஆண்டாக அவர் எந்த பந்தயங்களிலும் கலந்து கொள்ளவில்லை.


அஸ்வின் மனைவியுடன் காருக்குள் சிக்கி கோரமாக பலியான சம்பவம் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top