நமது கட்சி இன்று நிலை தடுமாறி, இலக்கின்றி

சென்று கொண்டிருக்கின்றது. எனக்கு பதவி வேண்டாம்

அரசியல் கோட்பாடுகள் மட்டுமே வேண்டும்

 முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹஸன் அலி

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எனக்கு இழைத்திருக்கின்ற அநியாயங்களை புனித மக்காவுக்கு சென்று அல்லாஹ்விடம் முறையிட்டுள்ளேன். அதற்குரிய தீர்ப்பை வழங்கும் பொறுப்பை அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டேன்" என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்துள்ளார்.
நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்து அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் என்னையும் முஸ்லிம் சமூகத்தையும் கடுமையாக ஏமாற்றியுள்ளார். இதனால் நான் மிகவும் துன்பப்பட்டேன்.
இந்த அநியாயங்களை உம்ராவுக்கு சென்று புனித மக்காவில் அல்லாஹ்விடம் ஒப்படைத்துள்ளேன். இனி அந்த வல்ல நாயகன் அல்லாஹ் பார்த்துக் கொள்ளட்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தலைமைக்கு அடுத்த அதிகார நிலையில் இருந்த செயலாளர் நாயகம் பதவி இன்று தலைமைத்துவத்தினால் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இப்பதவிக்குரிய அதிகாரங்கள் யாவும் தலைமையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2012' கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது நான் 03 நாட்கள் காணாமல் போனதாக தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நான் அவரிடம் காசு கேட்டு காணாமல் போகவில்லை. இந்த மண்ணில் முஸ்லிம் காங்கிரஸினதும் முஸ்லிம்களினதும் கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே காணாமல் போனேன்.
அன்றைய மஹிந்த அரசாங்கம் தங்களோடு இணைந்து வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று எமது கட்சியை பணித்தபோது ஹக்கீமும் அதற்கு உடன்பட்டிருந்தார்.
இதனை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. மரச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டுமென்று கூறினேன். இதனைச் சாதித்துக் கொள்ளவே காணாமல் போனேன்.
தேர்தலின் பின்னர் பின்னர் 04 பக்கங்களைக் கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றினை செய்வதற்கான ஆவணத்தை தயார் செய்து தலைவரிடம் கொடுத்தேன்.
அதேபோன்று கடந்த 2015' ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிப்பதற்கே ரவூப் ஹக்கீம் தீர்மானித்திருந்தார். நான்தான் பலாத்காரமாக மிகவும் தைரியத்துடன் மைத்திரியின் அணிக்கு கட்சியை இழுத்து வந்தேன்.
இதன் காரணமாகத்தான் தலைவர் ஹக்கீமுக்கும் எனக்குமிடையிலான பிணக்கு ஆரம்பிக்கத்தொடங்கியது.
அதனால்தான் அதிகாரம் கொண்ட செயலாளர் பதவியில் நான் நீடித்தால் தன்னிஷ்டத்திற்கு செயற்பட முடியாதென்பதற்காகவே என்னை அப்பதவியில் இருந்து ஓரங்கட்டியுள்ளார். இன்று கட்சியின் மூத்த போராளிகள் அனைத்து ஊர்களிலும் ஓரங்கட்டப் பட்டிருக்கின்றார்கள்.
ஆகையினால் தற்போது கட்சியில் காணப்படும் தனி மனித சர்வதிகார ஆதிக்கம் இல்லாமல் செய்யப்பட வேண்டும். இதற்காக நாம் மீண்டும் 1986ஆம் ஆண்டிற்கு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் இழந்துள்ள 62ஆயிரம் ஏக்கர் காணி இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை. கோப்பாபுலவு மக்கள் தங்களின் காணியை மீட்டெடுப்பதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான சாத்வீகப் போராட்டத்தினால் தமது காணியை மீட்டெடுத்துள்ளார்கள். அவ்வாறான உணர்வுடன் நாங்களும் செயற்பட வேண்டியுள்ளது.
நமது கட்சி இன்று நிலை தடுமாறி, இலக்கின்றி சென்று கொண்டிருக்கின்றது. இந்த பாதகமான போக்குகளை இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதற்கான போராட்டத்தை இன்று நிந்தவூரில் இருந்து தொடக்கி வைக்கின்றேன்.
இப்போது எனக்கு வயது 72 ஆகும். எனக்கு தலைவர் பதவி வேண்டாம், பாராளுமன்ற உறுப்பினர் பதவி வேண்டாம், அமைச்சர் பதவி வேண்டாம். கட்சியின் இந்த மீட்புப் போராட்டத்திற்கு ஓர் ஆலோசகராக செயற்படவே முன் வந்துள்ளேன்.
இந்தப் போராட்டத்தில் யார் இணைந்தாலும், இணைந்து கொள்ளா விட்டாலும் மக்களின் ஆதரவுடன் தனித்துப் போராடவே எண்ணினேன். ஆனால் இப்போது என்னோடு கட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள் பலர் இணைந்துள்ளார்கள்.
என்னோடு இணைந்துள்ள உயர்பீட உறுப்பினர்களில் பலரை உயர்பீடத்திலிருந்து நீக்கியுள்ளதாக அறிகின்றேன்.
அவர்கள் பல தியாகங்களுக்கு மத்தியில்தான் இந்தப் போராட்டத்தில் என்னோடு கைகோர்த்துள்ளார்கள். மர்ஹூம் அஸ்ரப்பின் காலத்தில் பின்பற்றப்பட்ட யாப்பு, கொள்கை, கோட்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்.
அதற்காகவே எம்.எச்.எம்.அஸ்ரப் காட்டிய நேரிய பாதையில் பயணிக்க அனைவரும் தயாராக வேண்டும்" என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி மேலும் தெரிவித்தார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top