அரச தாபனவிதிக்கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள

நடைமுறையில் இல்லாத சேவை நீடிப்புக்கு

திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்

(அஸ்லம்)


தற்போது அரசாங்க சேவையில் சேவை நீடிப்பு எதுவுமின்றி 60 வயதுவரை ஒரு அரச உத்தியோகத்தர் சேவையாற்ற முடியும் என அரச சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டு அந்நடைமுறை 2012ம் ஆண்டு முதல் அரச திணைக்களங்கள், அமைச்சுக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே, பொது நிருவாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபங்கள், தாபனக்கோவையின் Vம் பிரிவில் 55 வயதுக்கு மேல் சேவையில் இருக்க விரும்பும் ஒரு உத்தியோகத்தர் அவ்வாறான சேவை நீடிப்பொன்றைப் பெறுவதற்காக திணைக்களத்தலைவர் ஊடாக நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற ஒரு நடைமுறை இருந்து வருகிறது. இவ்விதிமுறை அரச சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகள் தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நடைமுறையில் இல்லை என்ற போதும் அரச தாபனக் கோவையில் இது தொடர்பாக மாற்றங்கள் எதனையும் இதுவரை மேற்கொள்ளவில்லையென இலங்கை கல்வி நிருவாக சேவையின் கிழக்கு மாகாண அதிகாரிகள் சங்கச் செயலாளர் .எல்.முஹம்மட் முக்தார் அரச நிருவாக அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சேவை ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.
இதேபோன்று தாபனக்கோவையில் இரண்டாம் தொகுதியின் பாரதூரமான தண்டனைகள் எனும் தலைப்பின் கீழ் 24:3:5 எனும் உபபிரிவில் 'விருப்பத்துடனான ஓய்வுபெறும் வயதிற்குப் பின்னர் சேவை நீடிப்பு வழங்குவதில்லை' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. தற்போது விருப்பத்துடனான ஓய்வுபெறும் வயதென்பது இல்லை என்பதுடன் சேவை நீடிப்பு என்ற ஏற்பாடும் இல்லை என்பதனால் இப்பிரிவினை இரத்துச்செய்ய வேண்டுமென மேற்படி சங்கச் செயலாளர் அரச சேவை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது அரசாங்க சேவையில் செவை நீடிப்பு இல்லை என்பதுடன் 55 முதல் 60 வயது வரை தாம் விரும்பிய நேரத்தில் ஒரு அரச உத்தியோகத்தர் அவரது சுயவிருப்பின் பேரில் 03 மாத முன்னறிவித்தலுடன் சேவையிலிருந்து இளைப்பாற முடியும் என்பதுடன் வினைத்திறனான சேவையின்மை, திருப்திகரமற்ற சேவை என்பனவற்றிற்காக ஒரு அரச உத்தியோகத்தர் 57 வயதுக்குப் பின்னர் 06 மாதகால முன்னறிவித்தல் வழங்கப்பட்டு அவர் மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு ஓய்வுபெற வைக்க முடியும் என்ற விதிகளே தற்போது நடைமுறையில் உள்ளன எனவும் சங்கச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top