சோமாலிய கடல் கொள்ளையர்கள் கப்பலை
எதுவித கோரிக்கையும் இன்றி விடுவித்தனர்
எண்ணெய் ஏற்றி வந்த 1800 தொன் எடையுள்ள Aris 13 எனும் கப்பல் சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்தது. இந்த கப்பலில் 8 இலங்கையர்கள் சிக்கி இருந்தனர். கப்பலையும் பிணை கைதிகளையும் விடுவிப்பதாயின் பணம் தரவேண்டும் என்பது சோமாலிய கடல் கொள்ளையர்களின் கோரிக்கையாக இருந்தது.
இவர்களை மீட்க சோமாலிய பாதுகாப்பு படையினர் கப்பலில் ஏறி கடல் கொள்ளையர்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.
ஆனால் பணய கைதிகள் தொலைபேசி மூலம் இலங்கை உள்ளவர்களுக்கு தொடர்பு கொண்டு துப்பாக்கி சண்டையை நிறுத்துமாறு கோரி இருந்தனர். இந்த நிலையில் கடல் கொள்ளையர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது.
சோமாலி படையினர் துப்பாக்கி சூட்டை நடத்தாது கப்பலை விட்டு போனால் தாமும் கப்பலை விட்டு போவதாக கடல் கொள்ளையர்கள் கூறியதையடுத்து சோமாலி படையினர் கப்பலை விட்டு அகன்றனர்.
சொன்னபடி சோமாலி கடல் கொள்ளையர்களும் பணம் எதுவும் வாங்காமலே கப்பலையும் பிணை கைதிகளையும் விட்டு விட்டு சென்றுள்ளனர்.
சோமாலி வணிகர் ஒருவரே இந்த கப்பலை வாடகைக்கு எடுத்திருந்தார். அது எங்களுக்கு பின்னர்தான் தெரிய வந்தது. தகவல் தெரிந்தவுடன் நாங்கள் கப்பலை விடுதலை செய்தோம் என்று பின்னர் சோமாலி கடல் கொள்ளையர்கள் மீடியாவுக்கு தெரிவித்துள்ளனர்.
2012 ம் ஆண்டுக்கு பின்னர் சோமாலிய கடல் கொள்ளையர்கள் வர்த்தக கப்பல்கள் எதையும் கடத்தவில்லை. இதனால் சோமாலியா கடலோரம் சற்று அமைதியாக இருந்தது.
இந்த நிலையில் தான் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வர்த்தக கப்பல் வெற்றிகரமாக கடத்தப்பட்டுள்ளது.
சோமாலியாவுக்கும் சொகோர்ட்டா என்ற தீவுக்கும் இடையில் இக்கப்பல் கடத்தப்பட்டுள்ளது. கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகமாக இந்த கடல் பகுதியில் இருக்கின்ற போதும் நேரம் குறைந்த பயண பாதையாக உள்ளதால் பல கப்பல்கள் இந்த வழியை பயன்படுத்துகின்றன. இதனால்தான் Aris
13 இவ்வழியால் சென்றுள்ளது.
அதே நேரம் Aris 13 கப்பல் மிகவும் மெதுவாக மணிக்கு ஐந்து கடல் மைல் வேகத்தில்தான் பயணித்துள்ளது. இந்த வேகம் படகுகளில் வந்து ஏணி மூலம் கப்பலில் ஏறும் கடல்கொள்ளையருக்கு அருமையான வாய்ப்பை வழங்கியிருக்கிறது.
சோமாலியா கடல் கொள்ளையர்கள் வர்த்தக கப்பல்களை கடத்தி கப்பம் பெற்று வந்தனர்.
2011 இல் மட்டும் சோமாலியா கடல் கொள்ளையர்களால் 237 தாக்குதல்கள் இடம்பெற்று நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சுமார் 7 பில்லியன் டொலர்கள் கப்ப தொகையாக கொடுக்கப்பட்டது.
இதையடுத்து கப்பல் முதலாளிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை இறுக்கமாக்கினர்.
அமெரிக்கா, சீனா, மற்றும் ஐரோப்பிய முக்கிய நாடுகள் கடல் கொள்ளையர்களை அடக்க தமது கப்பல் படையை அனுப்பின. இதனால் நிலைமை கட்டுபடுத்தப்பட்டது.
இது ஒருபுறமிருக்க வெளிநாடுகளை சேர்ந்த மீனவர்கள் சட்டவிரோதமாக சோமாலியாவின் கடலில் நீண்ட காலமாக மீன்பிடித்து வருகின்றனர். ஆபத்தான இரசாயன கழிவுகளும் சோமாலிய கடலில் கொட்டப்பட்டன.
இதனால் சிறு வள்ளங்களில் மீன்பிடித்து வந்த சோமாலிய மீனவர்கள் மீன்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.
சோமாலியாவின் கடல் வளத்தை வெளிநாட்டு மீனவர்கள் வாரிச்சென்றதால் மீன்பிடியை நம்பியிருந்த அந்த மக்கள் வறுமையில் வாடினர்.
இதனால் பாதிக்கப்பட்ட சோமாலிய மீனவர்களில் சிலர் கடல் கொள்ளையர்களாக மாறினர்.
பெரும் செல்வந்த நிறுவனங்களின் வணிக கப்பல்களை கடத்தி கப்பம் கேட்டனர்.
பெற்ற பணத்தை சில கடல்கொள்ளையர்கள் மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தனர்.
இதனால் மக்களும் கடல்கொள்ளையர்களை காட்டிக்கொடுக்கவில்லை. அவர்கள் மக்களின் ஆதரவை பெற்றிருந்தனர்.
ஆனால் பேராசை பிடித்த பன்னாட்டு கம்பெனிகள் இந்த உண்மையை மறைத்தன. சோமாலிய கடல் கொள்ளையர்களை பெரும் குற்றவாளிகள் போலவும் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் போலவும் மீடியாக்கள் மூலம் பிரசாரம் செய்தனர். மேலும் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து சோமாலிய கடல்கொள்ளையை அடங்கியிருந்தன.
ஐந்து வருடங்களுக்கு பின்னர் தற்போது இந்த Aris 13 எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டு பணம் எதுவும் வாங்காமலே விடுதலை செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment