சிரியாவில்பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட

வான்வெளித் தாக்குதலில் 42 பேர் பலி

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலில் 42 பேர் உயிரிழந்ததாகவும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளாகவும் சிரிய மனித உரிமைகள் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

நேற்று அஸர் தொழுகையின்போது, அலெப்போ மாகாண பள்ளிவாசல் மீது அடையாளம் தெரியாத போர் விமானங்கள் அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் பள்ளிவாசலில் இருந்த பொதுமக்கள் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ரமி அப்தல் ரஹ்மான் தெரிவித்தார். சிரியாவில் கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் 3.20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அலெப்போ மாகாணத்திற்கு மேற்கு பகுதியில் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்-ஜினா என்ற கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் தான் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. தாக்குதலில் பள்ளிவாசல் கட்டிடம் இடிந்து நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் உயிரிழப்பு மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுவதாகவும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அல்-ஜினா கிராமத்தை பொறுத்தவரை கிளர்ச்சியாளர்கள் மற்றும் இஸ்லாமிய குழுக்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். எந்தவித ஜிஹாத் தீவிரவாத பிரிவுகளும் அங்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.


பொதுவாக அலெப்போ பகுதியை பொறுத்த வரையில் சிரியா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் போர் விமானங்களே வான்வெளித் தாக்குதல்களில் ஈடுபடும் என்று கூறப்படுகிறது. எனினும் தாக்குதல் நடத்திய விமானம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் கிடைக்கவில்லை.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top