வடக்கு,கிழக்கு இணைப்புக்கு நாம் எதிரானவர்கள் அல்ல
புதிய நகர அபிவிருத்தித்திட்டம் பலாத்காரமாகவோ
ஒருதலைப்பட்சமாகவோ நடைமுறைப்படுத்தப்படமாட்டாது.
கல்முனை
தமிழ்
பிரதிநிதிகளுடனான
சந்திப்பில்
ஹக்கீம்
வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு நாம் எதிரானவர்களல்ல.கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கும் எதிரானவர்கள் அல்ல. எனினும் கரையோர மாவட்டம் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அலகு தொடர்பில் நிபந்தனையுடன் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக சம்பந்தன் ஐயாவோடு பேசிவருகின்றோம். அதற்கான நியாயமான தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரவூப்க்கீமுக்கும் கல்முனை தமிழ் சிவில் சமுகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் மாலை கல்முனை எஸ்.எல்.ஆர்.விடுதியில் இடம்பெற்றது. இங்கு கருத்து தெரிவித்தபோது அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கும் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகள் தடையாக இருப்பதாக அறிகின்றோம். இந்நிலையில் எவ்வாறு தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசுவது என தமிழ்த்தரப்பினர் கேள்வியெழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
தமிழ்ப்பிரதிநிதிகள் சார்பில் மாகரசபை முன்னாள் எதிர்கட்சித் தலைவர் கே.ஏகாம்பரம் உறுப்பினர் அ.விஜயரெத்தினம் சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் தலைமையிலான பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கல்முனை மாநகரசபை தமிழ்ப் பிரதேசங்களைப் புறக்கணிக்கும் விடயம், கல்முனை தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல், கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.
கல்முனை மாகர சபை, கல்முனை தமிழ் மக்களைப் புறக்கணிப்பது தொடர்பில் பிரதிநிதி கே.ஏகாம்பரம் எடுத்துரைத்தார்.
கல்முனை மாநகரசபையில் தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சினைகளை கையாள ஒரு மாதத்திற்கு இரு தடவைகள் சந்திப்பொன்றை நடத்துவது என்றும். அதில் தமிழர் பிரதிநிதிகள் நால்வரோடு மாநகர ஆணையாளர் பொறியியலாளர் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசிதீர்க்கலாம் என்றும் பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவித்த ஆலோசனையை அமைச்சர் ஹக்கீம் அங்கீகரித்ததோடு இரு தரப்பினரும் இணக்கம் கண்டனர்.
இக் கலந்துரையாடலின் போது கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படாமல் இழுத்தடிக்கப்படுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் காரணமாக இருப்பதும் கல்முனை தமிழ் பிரதேசங்கள் கல்முனை மாநகர சபையால் புறக்கணிக்கபடுவதும் கல்முனையில் உள்ள வீதிகள் சில திட்டமிட்டு பெயர் மாற்றம் செய்யப்படுவதும் மற்றும் கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தில் கல்முனை பிரதேச தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் தமிழ் தரப்பினர் வாதங்களை முன் வைத்து கேள்விகளை எழுப்பினர்.
கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகம் தரமுயர்த்தல் விடயம் கடந்த 35 வருடகாலமாக முஸ்லிம் தலைமைகளால் வேண்டுமென்றே முட்டுக் கட்டை போட்டு இழுத்தடிக்கப்பட்டுவருவதாக தமிழ் மக்கள் நம்புகின்றார்கள். இந்நிலையில் கல்முனையில் எவ்வாறு தமிழ் முஸ்லிம் மக்கள் இதய சுத்தியுடன் ஒற்றுமையாக வாழலாம்? ஆளை ஆள் ஆக்கிரமித்து ஒற்றுமையை ஏற்படுத்தலாமா?
தமிழ்ப் பிரதிநிதி சந்திரசேகரம் ராஜன் மற்றும் முன்னாள் மாகரசபை உறுப்பினர் அ.விஜயரெத்தினம் ஆகியோர் உரத்த குரலில் உங்களுக்கு கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு விருப்பமில்லையா? அதனை முதலில் கூறுங்கள் என்றனர்.
இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்,
எதையும் நாம் மனந்திறந்து பேசவேண்டும். கல்முனையிலுள்ள இரு பிரதேச செயலகங்களையும் ஒன்றாக இணைத்து இரு இனங்களையும் மோதவிட வேண்டுமென்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கல்முனை பிரதேச செயலகத்திற்கு சிங்கள பிரதேச செயலாளரை நியமித்தார்.
அதிஸ்டவசமாக மஹிந்த தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக அது நிறைவேறவில்லை. கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு நாம் எதிர்ப்பல்ல. ஆனால் அந்தப் பிரச்சினை போன்றே அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம் சமுகத்திற்கும் ஒரு பிரச்சினை உள்ளது.
அதாவது தமிழ் மொழி வாரியான கரையோர மாவட்டம் உருவாக்குவதுதென்பது நீண்டகால கனவாகும்.
இது தமிழ் பேசுகின்ற இரு சமுகங்களுக்கும் பொதுவானதொரு மாவட்டக் கோரிக்கையாகும். இதனால் இருசாராரும் நன்மை பெறலாம்.
எனவே இந்த மொழி வாரியான கரையோர மாவட்டத்திற்கு உடன்பாடு காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலக தரமுயர்த்தல் என்பது ஒரு பிரச்சனையேயல்ல. அதற்கு நாம் எதிர்ப்புமல்ல. எமது சிவில் சமுகப்பிரச்சினைகளையும் நாம் பார்க்கவேண்டும். இதுதான் யதார்த்தம். என்று பதிலளித்தார்.
இதன்பின்னர் தமிழ் பிரதிநிதிகள்,
கல்முனை பழைய பஸ்தரிப்பு நிலையத்தில் தனியார் வங்கிக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பஸ் நிலையத்திற்கு செல்வதானால் தனியார் பஸ் குறுக்கறுக்கும். மற்றது கல்முனையில் தமிழ் ஆட்டோக்கள் ஓட முடியாது என்ற வகையில் முன்னாள் மேயர் நிசாம் காரியப்பர் காலை மேசைக்குல் போட்டுக்¬கொண்டு அலட்சியமாகச் சொன்னார்.
கல்முனை சந்தாங்கேணி மைதானம் ஒரு பொது மைதானம் என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அதனை ஒரு கழகம் மட்டும் பயன்படுத்தி வருவது
யாருக்கும் தெரியாது
உத்தேச கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம் கல்முனை வாழ் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரித்து முஸ்லிம்களை குடியேற்ற விருப்பதாகவும் எதிர்காலத்தில் இப்பிரதேசம் தாழ்ந்து போகும் ஆபத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
ஒரு மணி நேரம் தமிழ்ப் பிரதிநிதிகள் பேசியவற்றை அவதானித்து அமைதியாக-விருந்த அமைச்சர் ஹக்கீம் பதிலளித்து கூறுகையில்:
எதனையும் பேசித் தீர்க்க முடியும். உங்கள் மாநகர சபை பிரச்சினைகளை அதற்கான உயரதிகாரம் படைத்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆணையாளருடாகக் கையாள்வார். அது பிரச்சினையல்ல. சவக்காலைக்கு காவலாளி போடுவது, வீதி திருத்துவது, வடிகான் அமைப்பது, மின்குமிழ் போடுவது இதெல்லாம் அவர் பார்த்துக்கொள்வார்.
பாரிய அபிவிருத்திப் பணிகள் இருந்தால் என்னிடம் மதிப்பீட்டோடு தாருங்கள் . நாமும் உச்சளவு உதவலாம்.
புதிய நகர அபிவிருத் தித்திட்டம் பலாத்காரமாகவோ ஒரு தலைப்பட்சமாகவோ நடை முறைப்படுத்தப்படமாட்டாது. அதற்கு நான் உத்தரவாதம் தருகின்றேன். பொதுத் தேவைகளுக்காக காணிகள் சுவீகரிக்கப்படுமேயன்றி முஸ்லிம் மக்களை ஒரு போதும் தமிழர் காணிகளில் குடியேற்ற அனுமதிக்க மாட்டோம்.
திட்டத்திற்கான திட்டவரைவு வந்ததும் அனைவருக்கும் காட்டியே அதனை முன்னெடுப்போம்.
எங்காவது எதற்காவது எதிர்ப்பு இருந்தால் அந்த விட-யத்தைச் செய்யமாட்டோம்.
கல்முனை தமிழ் மக்களின் இனப்பரம்பலைப் பாதிக்காத வகையில்தான் புதிய நகர அபிவிருத் தித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கான உபாயங்கள் பின் பற்றப்படும். யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றார்.
:
தொகுதி ரீதியிலான தேர்தல் முறைமை வந்தால் கல்முனைக்கு அதாவது எமக்கு எம.பி.கிடையாது. எனவே இணைந்துதான் செயலாற்ற வேண்டும்.
நாம் சாய்ந்தமருது பிரதே சபை தனியாகப் பிரித்துக் கொடுப்பதற்கு தடையில்லை. அவ்வாறாயின் ஏன் இன்னும் எமது தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நீங்கள் தடையாயிருக்கிறீர்கள்? என்று பிரதிநிதி அ.விஜயரெத்தினம் கேள்வி எழுப்பினார்.
இற்கு பதிலளித்த பிரதியமைச்சர் ஹரீஸ்,
நாம் தடையாகவிருக்கவில்லை.உங்கள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் எமது மொழிவாரியான கரையோர மாவட்டக்கோரிக்கையை முற்றாக எதிர்க்கின்றார். இந்நிலையில் எமது சமுகப்பிரச்சினையையும் நாம் இலாவகமாகக் கையாளவேண்டும்தானே.
பொத்துவில் தொடக்கம் கல்முனை வரை தமிழ்,முஸ்லிம் மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். எமது 7ஆயிரம் ஏக்கர் வயற்காணிகள் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை விடுவிக்க வேண்டும். தேசிய ரீதியில் முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்தையிலீடுபட்டு வருகின்றன. அது தொடரும் நம்பிக்கையுடனிருப்போம். நல்லது நடக்கும் என்றார்.
சந்திப்பில் அமைச்சருடன் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், சிப்லி கல்முனை மாநகர ஆணையாளர் லியாக்கத் அலி ஆகியோர் சமுகமளித்திருந்தனர்.
0 comments:
Post a Comment