சிரியா ரசாயானத் தாக்குதல் கொடூரம்...
9 மாத இரட்டைக் குழந்தைகள் பலி!
அடக்கம் செய்த போது, மயானமே கண்ணீர் காடானது.
சிரியாவில் நடந்த ரசாயனத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் பலியாகியுள்ளனர். குடும்பத்தைப் பறிகொடுத்த, அல்யூசப் என்ற 27 வயது இளைஞர், பிறந்து 9 மாதமே ஆன, தன் இரட்டைக் குழந்தைகளை அடக்கம் செய்த போது, மயானமே கண்ணீர் காடானது. இச்சம்பவம்
அங்குள்ள மக்களை கடும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.
சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கான் ஷேக்கான் நகர் மீது கடந்த செவ்வாய்க்கிழமை ரசாயன வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. சிரிய அரசுப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ராசாயன வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
ரசாயனத் தாக்குதலுக்கு சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆஷாத் காரணம் என உலக நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்தத் தாக்குதலில் 80 பேர் பலியாகினர். இதில் 20 பெண்களும் 30 குழந்தைகளும் அடங்குகின்றனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும். விஷவாயுத் தாக்குதலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட மக்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளனர்.
குளோரின் விஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக ஐ.நா. சபை விசாரணையில் தெரிவித்துள்ளது. தாக்குதலின்போது 'சரைன் ' எனப்படும் மிக கொடூரமான ரசாயனத்தை வைத்து தயாரிக்கப்பட்ட விஷ வாயு குண்டுகள், வீசப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது. ''சிரியாவில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த ரசாயன தாக்குதல் மிக கொடூரமான செயல். இந்தக் கொடூரத்தை நாகரிகம் அடைந்த உலக நாடுகள் கண்டும் காணாமல் இருந்துவிட முடியாது'' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் விஷ வாயு வெடிகுண்டுகளை வீசுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் பலியாகியிருப்பதும் கான் ஷேக்கான் நகர மக்களை கடும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.
இந்த நகரைச் சேர்ந்தவர் அப்தல் ஹமீத் அல்யூசப். கடை நடத்தி வருகிறார். ரசாயனத் தாக்குதலில் அல்யூசப் குடும்பத்தைச் சேர்ந்த 22 பேரும் இறந்து விட்டனர். அல்யூசப் தன் தந்தை, மனைவி, சகோதரர், சகோதரிகள், 9 மாத இரட்டைக் குழந்தைகள் என அத்தனை பேரையும் பலி கொடுத்து விட்டு நிர்கதியாகி நிற்கிறார்.
அல்யூசப்பின் வீட்டருகே செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் ரசாயான குண்டு வீசப்பட்டுள்ளது. சத்தம் கேட்டு, அவரது தந்தை வெளியே வந்து பார்த்திருக்கிறார். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மயங்கி விழுவதைப் பார்த்து , வீட்டுக்குள் சென்று கத்தியிருக்கிறார். உடனடியாக வீட்டில் உள்ள கதவுகள், ஜன்னல்களை அடைத்திருக்கின்றனர். முகத்தில் வினிகரை தடவியிருக்கின்றனர்.
அல்யூசப்பின் 9 மாத இரட்டைக்குழந்தைகள் மூச்சு விட சிரமப்பட்டுள்ளன. அதனால், மனைவி , இரட்டைக் குழந்தைகள் ஆயா, அக்மது ஆகியோரை வீட்டை விட்டு வெளியே கொண்டு சென்றிருக்கிறார். அவர்களுக்கு மருத்துவ உதவி அளித்து விட்டு 10 நிமிடம் கழித்து மற்றவர்கள் நிலை என்ன ஆயிற்று என்று பார்க்க வீட்டுக்குள் ஓடியிருக்கிறார். வீட்டினுள் அவரது தந்தை, இரு சகோதரர்கள், மைத்துனர்கள், உறவினர்கள் என 19 உயிரற்ற உடல்கள் கிடந்துள்ளன.10 நிமிடத்தில் குடும்பம் முழுவதையும் இழந்தர் அல்யூசப்.
மனைவி, பிள்ளைகள் நிலையைக் காண வீட்டை விட்டு வெளியே கதறியவாறு வந்திருக்கிறார். அங்கே கண்ட நிலை அவரை திக்கற்றவராக்கி விட்டது. அல்யூசப்பின் 9 மாத இரட்டைக் குழந்தைகள் ஆயா, அகமது ஆகியோரது உயிரற்ற உடல்களைத்தான் அவரால் பார்க்க முடிந்தது. மனைவியும் அருகிலேயே உயிர் இல்லாமல் கிடந்திருக்கிறார். யாரை எப்படி காப்பாற்ற என்று தெரியாமல் போராடிய அல்யூசப், இப்போது அழ கூட திராணியற்று நிற்கிறார்.
மரித்த இரட்டைக் குழந்தைகளின் சடலத்தை அல்யூசுப் கையில் ஏந்தியவாறு அடக்கம் செய்ய, வேனில் புறப்பட்ட காட்சி வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ இணையங்களில் வெளியாகி அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
0 comments:
Post a Comment