ஜனாதிபதி ஆகவேண்டும் என எதிர்பார்த்து,

பதவிகளுக்காக ஆசைப்பட்டவன் நான் இல்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன


ஜனாதிபதி ஆகவேண்டும் என எதிர்பார்த்து, பதவிகளுக்காக ஆசைப்பட்டவன் நான் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று 2 ஆம் திகதி  இடம்பெற்ற சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தேசிய பேரவைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
நான் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை எதிர்பார்த்தவன் அல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எனக்கு இருக்கவில்லை.
கட்சியை என்னிடம் ஒப்படைத்தீர்கள் என்றால் அதனை வளர்ப்பதற்கு ஏன் தடையாக இருக்கின்றீர்கள்? என்னைத் தொடர்ந்து தாக்குவதற்கு காரணம் நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்து முன்னேறியதன் காரணமாகவா?
எனது மகனும் உங்களுடனேயே அமர்ந்துள்ளார். அவருக்கு நான் பதவிகள் கொடுக்கவில்லை. விஷேட படை கொடுக்கவும் இல்லை.
இந்தக் கட்சியை நான் ஏற்றுக் கொண்டது குடும்ப உறுப்பினர்களுக்கு பதவிகள் கொடுக்காமல் இளைஞர்களுடன் இணைந்து நாட்டை வளர்த்து எடுப்பதற்காகவே.

எதிர்வரும் தேர்தலில் இளைஞர்கள் வாக்காளர்களாக மட்டும் இல்லாமல் வேட்பாளராகவும் களம் இறங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர இளைஞர் முன்னணியின் மறுசீரமைக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
'தீர்வு' என்ற நூலும் 'சுதந்திரம்' என்ற பத்திரிகையின் முதற் பிரதியும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் முன்னணியின் தேசிய மாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு மலரும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன் உத்தியோகபூர்வ இணையத்தளமும் இதன்போது ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சங்கைக்குரிய மகாசங்கத்தினர் உள்ளிட்ட சமயத்தலைவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்ன உள்ளிட்ட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார, செயலாளர் எரிக் வீரவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.














0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top