குழந்தைகளை சிக்கவைக்கும் செல்போன்

அது ஒரு தகவல் தொடர்பு சாதனம்.

குழந்தைகள் கையில் வைத்து விளையாடும் பொம்மை அல்ல




என் குழந்தை எப்போதும் செல்போனில்தான் விளையாடும்
அவனுக்கு செல்போன் என்றால் உயிர். இரவில்கூட பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் தூங்குவான்
என் குழந்தை எல்லா அப்ளிகேஷனையும்ஆன்செய்து பார்த்து விடும்
செல்போனை கையில் கொடுத்தால்தான் என் குழந்தை சாப்பிடும்
இப்போதெல்லாம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பற்றி மற்றவர்களிடம் பெருமிதம் பொங்க பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகள் இவை.
இப்படி பேசும் தாய்மார்களில் பெரும்பாலானவர்களுக்கு, அந்த செல்போன்களால் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு ஆபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது தெரிவதில்லை.
செல்போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு குழந்தைகளின் உடல் உறுப்புகளை தாக்கும் அபாயம் நிறைந்தவை. முக்கியமாக மூளை வளர்ச்சியடையும் சிறு பருவத்தில் கதிர்வீச்சு குழந்தைகளை வெகுவாக பாதிக்கும். அதனால் குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றல் குறையும். உடலில் ஹார்மோன்கள் சுரப்பது இயல்புக்கு மாறாகிவிடும். அதனால் குழந்தைகள் பொறுமையை இழந்து, அடிக்கடி பதற்றமாகிவிடுவார்கள். நிதானமாக சிந்திக்கவும், செயல்படவும் முடியாமல் தடுமாறுவார்கள். கோபம், ஆத்திரம் எல்லாம் அதிகரிக்கும். தொடர்ந்து செல்போன் பயன்படுத்தினால் குழந்தைகளின் கேள்வித்திறனும் பாதிக்கும். இப்போதெல்லாம் சிறுவர், சிறுமியர்கள்கூட மனஅழுத்தத்திற்கு உள்ளாகுகிறார்கள். அதற்கும், செல்போன் கதிர்வீச்சுகளுக்கும் தொடர்பு இருக்கிறது.
செல்போன் ஒரு தகவல் தொடர்பு சாதனம். குழந்தைகள் கையில் வைத்து விளையாடும் பொம்மை அல்ல அது. குழந்தைகள் அதை ஒரு விளையாட்டு பொருள்போல் நினைத்து பயன்படுத்துவது தவறான பழக்கம்.
செல்போன் குழந்தைகளின் அறிவை பெருக்கும் கருவி அல்ல. அதை வைத்துக்கொண்டு குழந்தைகள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள முடியாது. செல்போனை நன்றாக பயன்படுத்த தெரிந்த குழந்தைகள் எதிர்காலத்தில் புத்திசாலிகளாகிவிடுவார்கள் என்பதற்கும் எந்த உத்திரவாதமும் இல்லை.
எப்போதும் தலைகவிழ்ந்து செல்போனையே பயன்படுத்திக்கொண்டிருக்கும் குழந்தைகள் வீடு, உறவு, உலகத்தை மறந்துவிடுகிறார்கள். வேறு எதுவும் முக்கியம் இல்லை செல்போனே தங்கள் உலகம் என்று முடிவு செய்து விடுகிறார்கள். அம்மா, அப்பாவை நிமிர்ந்து பார்த்து பேசுவதற்குகூட நேரமில்லாமல் செல்போனுக்குள் ஐக்கியமாகிவிடுறார்கள். இந்த சமூகத்திற்கும், தங்களுக்கும் சம்பந்தமே இல்லாததுபோல விலகி வாழ்பவர்களாக மாறிவிடுகிறார்கள்.
குழந்தைகள் சக மனிதர் களோடு பழகி, உறவாடி தங்கள் அனுபவங்களை வளர்த்துக்கொள்ளவேண்டும். அதுதான் அவர்களுக்கு மனோவளர்ச்சியை கொடுக்கும். செல்போனே உலகம் என்ற நிலையை அவர்கள் அடைந்துவிடும்போது, அவர்களுக்கு உலக அனுபவம் கிடைக்காது. அவர்களது மனோவளர்ச்சியும் பாதிக்கப்படும்.
அமெரிக்கன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ்என்ற ஆராய்ச்சி அமைப்பு சமீபத்தில் ஆய்வு முடிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், “பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செல்போன் ஆர்வத்தை பெருமையோடு பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் மிக முக்கியமான விஷயத்தை கவனத்தில்கொள்ள மறந்து விடுகிறார்கள். அதாவது செல்போனில் இருந்து பெறப்படும் அறிவு ஒரு குறுகிய எல்லையைகொண்டது. அதையும் தாண்டிய அறிவை அவர்கள் வளர்த்துக்கொண்டால்தான், இந்த சமூகத்தோடு ஒன்றிணைந்து வாழ முடியும்.
செல்போனில் முடங்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஓடி, ஆடி விளையாட விருப்பம் இல்லை. அதனால் அவர்களது உடல்வளர்ச்சியோடு சேர்ந்து மனவளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது..’’ இவ்வாறு, தகவல்களை தருகிறது அந்த ஆய்வு அறிக்கை. இதை எல்லாம் பெற்றோர்கள் கவனத்தில்கொள்ளவேண்டும். நம் நாட்டில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலுமே குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
இங்கிலாந்தில் நடந்த ஒரு ஆய்வில், ‘12 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 80 சதவீதம் பேர் செல்போனுக்கு அடிமையாகி இருப்பதும், 14 வயதுக்குட்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் செல்போனை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதும்தெரியவந்துள்ளது.
டீன்ஏஜ் பருவத்தினரின் நிலையும் மோசமாகத்தான் இருக் கிறது. அவர்கள் செல்போனை தகவல் தொடர்பு சாதனமாக மட்டும் கருதாமல் தங்கள் வாழ்க்கைத் துணை என்ற நிலைக்கு கொண்டுபோய்விடுகிறார்கள். ஆய்வு முடிவுகளோ அவைகள்ஆபத்தான நண்பர்கள்என்று குறிப்பிடுகிறது.
நவீன தொழில்நுட்ப செல்போனை கையில் வைத்திருக்காத இளைஞர்கள்கவலைக்குரியோர்பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடுகிறார்கள். அதுவே அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுகிறது. அதனால் பெற்றோர்களை கஷ்டப்படுத்தி நவீன செல்போனுக்கு தங்களை சொந்தக்காரர்களாக்கிவிடுகிறார்கள். இது குடும்பத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடியை உருவாக்கிவிடுகிறது.
அதேவேளையில்ஸ்மார்ட் போன்கள்பிள்ளைகளின் தகவல் தொடர்பு திறனை மேம்படுத்த உதவுகிறது என்று, சில பெற்றோர்கள் கருதுகிறார்கள். அது சரியல்ல. ஏன்என்றால் தகவல் தொடர்பு  திறன் (கம்யூனிகேஷன் ஸ்கில்) என்பது மனிதர்களை நேருக்கு நேர் சந்தித்து பேசுவது. சூழலுக்கு தக்கபடி பேசுவது. மற்றவர்களை கவர்ந்து தான் விரும்பிய கருத்தை அவர் களிடம் பதியவைப்பது போன்ற விஷயங்களை கொண்டது. களத்தில் இறங்கி, திறமையை வெளிப்படுத்தவேண்டிய விஷயம் அது. அறைக்குள் இருந்து தகவல்களை பரிமாறிக்கொள்வது அல்ல!
செல்போனுக்குள் மூழ்கி பொழுதை கழிப்பவர்களால் மனிதர்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்ள முடியாது. மற்றவர்களின் அனுபவங்களை கேட்கும் பொறுமையும் இருக்காது.
சமூகம் என்பது இயந்திரங்கள் நிறைந்த ரோபோ உலகம் அல்ல. உணர்வுள்ள மனிதர்களின் சங்கமம். அவர்களோடு இணைந்து வாழ்வதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களே மனிதர்களை செம்மைப்படுத்தும்.
Makkal Viruppam   

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top