முப்படையினரைப் பலப்படுத்தும் செயற்பாடுகள்

உரியவாறு நிறைவேற்றப்படும்

-ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோதிலும் அரசாங்கம் முப்படையை வலுவூட்டும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றிவருகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 நாட்டின் அபிவிருத்தி, சுதந்திரம், ஜனநாயகம் தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு படை வலுவூட்டப்பட வேண்டும். இதற்காக புதிய தொழில்நுட்பம், உள்ளிட்டவற்றை மேம்படுத்தி உயர்தரத்திலான சேவையை வழங்கக்கூடிய நிலைக்கு அரசாங்கம் பாதுகாப்பு படையை தரம் உயர்த்தும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 பத்தரமுல்ல படைவீரர் தூபிக்கு அருகாமையில் இன்று மாலை நடைபெற்ற தேசிய படைவீரர்கள் தொடர்பான வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றினார்.
விமர்சிப்பவர்கள் எதனைக் கூறினாலும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்புக்களில் முப்படையிரைப் பலப்படுத்தும் செயற்பாடுகளை குறைவின்றி நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
30 ஆண்டுகளாக நடைபெற்ற போரில் மரணமடைந்த, மற்றும் அங்கவீனமுற்ற படையினருக்கான பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை குறைவின்றி நிறைவேற்றுவதுடன், நாட்டின் எதிர்காலத்துக்காக இப்போது பணியாற்றும் முப்படையினருக்கு புதிய தொழில்நுட்பத்துடன், உயர்தர சேவைக்காக தரமுயர்த்தும் பொறுப்பை நிறைவேற்றுவதாக இதன்போது ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் படையினரின் நலன்களுக்காக அரசாங்கம் பல புதிய திட்டங்களை அமுல்படுத்தியதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி அவர்கள், படையினருக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தை முறையாகவும் வினைத்திறனாகவும் மேற்கொண்டு அனைத்து படையினருக்கும் வீடுகளை வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் மட்டுமன்றி போதைப் பொருள் ஒழிப்பு உள்ளிட்ட தேசிய திட்டங்களிலும், அபிவிருத்தி திட்டங்களிலும், சமூக நலன்புரி செயற்பாடுகளிலும் படையினர் வழங்கும் பங்களிப்பினை ஜனாதிபதி பாராட்டினார்.
தாய்நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த படையினருக்கு மரியாதை செலுத்திய ஜனாதிபதி அவர்கள் படையினரின் நினைவு தூபிக்கு மலரஞ்சலி செய்தார்.

மதகுருமார்கள், மாகாண ஆளுனர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அலுவலர்களும் முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு துறை அதிகாரிகளும் படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top