வெள்ளவத்தையில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

மீட்பு  பணிகள்  தொடர்கின்றன

கொழும்பு வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகில் நேற்று கட்டடம் சரிந்து விழுந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீட்பு நடவடிக்கைகளின் போது நேற்று மாலை இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்து இருவர் மீட்கப்பட்டனர். தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர்களுள் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மீட்பு பணியில் பொலிசார் , பாதுகாப்பு பிரிவினர் தீவிர மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மீட்பு பணிகள் தொடர்ந்தும் இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இப்பகுதிக்கு இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா மற்றும் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட பலர் விஜயம் செய்தனர்.
இது தொடர்பாக அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கருத்து தெரிவிக்கையில்,
கட்டடத்தை அமைப்பதற்கு முன்னர் அது தொடர்பானவர்களிடம் அனுமதி பெறவேண்டும். உள்ளுராட்சிமன்ற பிரிவே அது தெடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். ஆய்வு திணைக்களத்தினை எமது அமைச்சு கொண்டுள்ளது.
கட்டட நிர்மாணம் தொடர்பில் எமது உதவியை நாடினால் நாம் உதவவுள்ளோம். கொழும்பு நகரில் இவ்வாறான நிலமை இருக்ககூடும் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,
எந்த ஒரு திட்டமிடலும் இன்றி குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது., இதற்கு பயன்படுத்தப்பட்ட கம்பிகள் அளவில் மிகவும் சிறியவையாக உள்ளன.
 இவ்வாறு கட்டுவதற்கு யார் அனுமதி கொடுத்தது, இவர்கள் அனுமதி பெற்றா குறித்த கட்டடத்தை நிர்மாணித்துள்ளார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதா என ஆராய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பாதுகாப்பற்ற கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு அனுமதி கொடுத்த அனைவரையும் கைது செய்ய வேண்டும். கட்டுபவர், கட்ட அனுமதி கொடுத்தவர் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என இதன்போது பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் களுபோவில போதனா வைத்தியசாலையிலும் ஏனைய 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து வைத்தியசாலை உயர் அதிகாரி கருத்து தெரிவிக்கையில் ,
பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை குறிப்பிடத்தக்க மோசமான பாதிப்பு இல்லை என்று குறிப்பிட்டார். இருப்பினும் உடல் உட்புறப்பகுதி தாக்கத்திற்குள்ளாவது வழமை . இதுதொடர்பான பரிசோதனகள் தற்போது இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளவத்தை பிரதேச செயலாளர் நளினி பாலசுப்பிரமணியம் கருத்து தெரிவிக்கையில் ,
இந்த கட்டிடம் மிகவும் பழமையானது இதனை புனரமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது மிகவும் பழமைவாய்ந்த கட்டடம். இதனை புனரமைப்பதற்கும் மாநகரசபை திட்டப்பிரிவிடம் அனுமதியைப்பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பிட்ட தரத்திற்கு அமைவாக இந்த கட்டடம் இருந்தால் தான் இதற்கான அனுமதி வழங்கப்படும். இவை முறையாக நடைபெற்றுள்ளதா? இது குறித்து விசாரணை செய்யப்படவேண்டும். முறைகேடுகள் இடம்பெற்றிருக்குமாயின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top