தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும்
முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரும் வாய்ப்பை
தவறவிட்ட முஸ்லிம் தலைமைகள்
மாவை சேனாதிராஜா தெரிவிப்பு
முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம் தலைமைகள் அன்று தவறிவிட்டனர் என தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இம்முறை அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில், பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா , அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எதிராக குரல் கொடுக்கும் கட்சியாகவும், தமிழர்களின் உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் கட்சியாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகிறது.
60 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த தமிழரசுக்கட்சி பல வழிகளிலும் உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றது.
கிழக்கு மக்களின் பலம் குறைவாக இருந்தால் அவர்களுக்கு உதவியாக வடக்கு மக்களின் பலம் காணப்பட வேண்டும் என 1949 ஆண்டு தலைவர் தந்தைசெல்வா சொன்னார்.
அம்பாறை மாவட்டத்தில் பலவழிகளிலும் பாரிய பிரச்சினைகள் இருக்கின்றது. தமிழர்களுக்கான அரசியல் தீர்வொன்றை பெற வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அயராது பாடுபடுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் பல இழப்புக்கள் மற்றும் நில ஆக்கிரமிப்புக்கள் என்பன இடம் பெற்று இருக்கின்றன. இந்த பிரச்சினைகளை எமது தலைவர் மூலமும் ஆட்சியாளர்களுடனும், முஸ்லிம் சகோதரர்களுடனும் பேசித் தீர்க்கவேண்டியுள்ளது.
1961 ஆண்டு நான் மாணவனாக இருந்தகாலத்தில் தமிழரசுக் கட்சி பல இடங்களில் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை நடாத்தியது.
இதில் நாம் இந்தப் பகுதிக்கு வந்தபோது எமது தமிழ்த் தாய்மார்களுடன் முஸ்லிம் பெண்களும் அச்சத்தியாக்கிரகத்தில் பங்குபற்றி இருந்தனர்.
வடகிழக்கு இணைக்கப்படவேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் அஸ்வின் மேடையில் பேசியிருந்தார். இந்த இலக்கை அடையவேண்டும் என்பதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முனைப்பாக இருக்கின்றது.
அன்மையில் அம்பாறை இறக்காமம் மாயக்கல் பகுதியில் சிங்களவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது முஸ்லிம் காங்ரஷின் தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் ஆகியோர் சென்று ஜனாதிபதியுடன் பேசி நல்ல தீர்வீனைப் பெற்றுக் கொடுத்துள்ளனர் என்பதை அஸ்வீன் இவ்விடத்தில் கூறினார்.
உண்மைதான் தந்தை செல்வா காலத்தில் பெரும்பான்மையினரால் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டபோது அதற்கு குரல் கொடுத்தவர் தந்தை செல்வா. இதனை மறந்துவிடமுடியாது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த அரசாங்கத்தை மாற்றி புதிய அரசாங்கத்தினைக் கொண்டுவருவதில் அவதானமாக செயற்பட்டவர்கள் எமது தமிழர்கள். அதனால்தான் இன்று மைத்திரிபால தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்றது.
புதிய ஜனாதிபதி ஆட்சி அமைத்ததும் வடகிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்ற நிலங்கள், உரியவர்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அது இன்று படிப்படியாக நடைபெற்று வருகின்றது.
அன்று தந்தை செல்வா எமக்கான உரிமையினைப் பெற்றுக் கொள்வதற்காக அகிம்சை வழியில் போராடினார். பின்னர் ஆயுதப்போராட்டம் இடம்பெற்று, இன்று ஜனநாயக வழியில் தீர்வினைப் பெறுவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கச்சிதமாகச் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
இதற்கான பலமாக இருப்பது தமிழ் மக்களாகிய உங்களது வாக்குப்பலமே. இந்த வாக்குப்பலத்தின் மூலமும் சர்வதேசத்தின் உதவியுடனும் எமக்கான தீர்வைப் பெறுவதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
கடந்த போர்க்காலத்தில் வீழ்ச்சியடையாத கல்வி இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது. எமது தமிழ்ப் பிரதேச மாணவர்கள் அனேகமானோர் கலைத்துறையினைத் தெரிவுசெய்வதனால் பாரிய வேலையில்லாப் பிரச்சினை உருவாகியுள்ளது.
எமது அழிந்துபோன பொருளாதாரத்தினைக் கட்யெழுப்ப வேண்டுமானால் கல்வியிலே முன்னேற வேண்டும். குறிப்பாக 65 வீதமானவர்கள் விஞ்ஞானம் ,பொறியியல்,தொழில்நுட்பத் துறைகளைத் தெரிவுசெய்ய வேண்டும்.
இவ்வாறு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அனைவரும் வழிகாட்டவேண்டும். போரின்போது இலட்சக்கணக்கான உயிர்களைப் பறிகொடுத்து உரிமையினை வென்றெடுக்கவேண்டும் என வாழ்ந்து கொண்டு இருக்கும் நம் மத்தியில் மது பாவனை அதிகரித்துள்ளது.
அதற்கு இளைஞர்கள் அடிமையாகியுள்ள நிலை அதிரிகரித்து வருகின்றது. இதில் இருந்து விடுபட வேண்டும். இளைஞர்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தவேண்டும். அப்போதுதான் சமூகம் முன்னேற்றம் அடையும் என தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment