மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்:

கட்டிடங்கள் தரைமட்டமாகின ( படங்கள்)

- 149 பேர் வரை பலி

மெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 149 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் இலங்கை நேரப்படி நேற்று நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகின.
இந்த கோர பேரழிவால் தற்போது வரை 149 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மொர்லோஸ் மாநிலத்தில் மட்டும் 54 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மின்சாரம், தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் 30 லட்சம் பேர் அவதிப்பட்டு வருவதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் கடந்த 1985-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பலியான 10 ஆயிரம் பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தான் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது நிலநடுக்க பாதுகாப்பு ஒத்திகைகளும் நடத்தப்பட்டன. நிகழ்ச்சி முடிந்த சில மணிநேரங்களிலேயே இந்த கோர பேரழிவு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இம்மாத தொடக்கத்தில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 90 பேர் பலியாகினர் என்பது நினைவு கூறத்தக்கது.


























0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top