சாய்ந்தமருது தோணாவில்
பாரிய இயந்திரங்கள் கொண்டு
பல நாட்களாக அள்ளப்பட்ட
சல்வீனியா புல் பூண்டுகள்
அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பதாகத்
தெரிவிக்கப்பட்ட பகுதியில்
மீண்டும் வேகமாகப் பரவல்
கோடிக்கணக்கான ரூபாய்களைக் கணக்குக் காட்டி முகநூலிலும்
படங்களைப் பதிவிடப்பட்ட சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட பகுதியில் தற்போது சல்வீனியா வேகமாக வளர்ந்து சகல இடங்களிலும் பரவி வருகின்றது.
இந்த தோணா பிரதேசத்தில் ஏற்கனவே காணப்பட்ட சல்வீனியா புல் பூண்டுகளை அகற்றுவதற்கு சாதாரணமாக
அள்ளக்கூடிய இந்த புல் பூண்டுகளை கற்களை கிளறி அள்ளும் பாரிய இயந்திரங்கள் கொண்டு பல
நாட்களாக அள்ளி நாட்களையும் பணத்தையும் அநியாயமாகச் செலவிட்டதை அனுபவம் உள்ள மக்கள்
பார்த்து கவலையை வெளியிட்டிருந்த நிலையிலேயே
அபிவிருத்தி செய்து விட்டதாகக்
கூறப்பட்ட இடங்களில் மீண்டும் சல்வீனியா வேகமாக வளர்ந்து பரவி வருகின்றது.
திட்டமிடப்படாத இந்த தோணா வேலைத் திட்டத்தால் மீண்டும் வேகமாக
வளர்ந்து பரவி வரும் சல்வீனியா புல் பூண்டுகளை கற்களை கிளறி அள்ளும் பாரிய இயந்திரங்கள் கொண்டு அள்ளி பணத்தை
செலவிடப் போகின்றார்களா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இவ்வாறு சாய்ந்தமருதிலுள்ள தோணாவில் சல்வீனியா வளர
விடுவதும் அதனை பாரிய இயந்திரங்கள் கொண்டு காலத்திற்கு காலம் அள்ளுவதும் என சிலர்
இதன்மூலம் பணம் சம்பாதிக்கின்றனரா என்ற சந்தேகங்களும் மக்கள் மத்தியில் எழத்
தொடங்கியிருக்கிறது.
ஏற்கனவே, 3 கோடி ரூபா செலவில் தோணா அபிவிருத்தி என்று கூறி அங்குள்ள புல் பூண்டுகளை அகற்றினார்கள். அத்தோடு அங்கு அபிவிருத்தி வேலைகள் நின்றுவிட்டன. அந்தபெருந்தொகையான நிதி தோணாவுக்குள் அமிழ்ந்து போனதா? அல்லது அதற்கு என்ன நடந்தது? என்று இன்று வரையும் யாராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.
இதுபோன்று இதற்கு முன்னரும் கல்முனை மாநகர சபையும் சுமார் 12 இலட்சத்திற்கும் அதிகமான தொகையை தோணா அபிவிருத்தி என்று கூறி புல் பூண்டுகளை அகற்றி செலவிடப்பட்டது.
சாய்ந்தமருது தோணாவை கடந்த 100 நாள் திட்டத்தில் எனது அமைச்சின் 50 மில்லியன் ரூபா செலவில் சுத்தம் செய்திருந்தோம். அதன் அடுத்த கட்ட அபிவிருத்திக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது”
இவ்வாறு கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சாய்ந்தமருதில் இடம்பெற்ற “வீட்டுக்கு வீடு மரம்’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அங்குரார்ப்பண விழாவில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்தான் தோணாவின் இயற்கை தன்மையினை பாதுகாக்கும் வகையில் தோணாவை அபிவிருத்தி செய்தல் மற்றும் தோணாவை சூழவசிக்கும் 2700 குடும்பங்களிலுள்ள 10,000க்கும் அதிகமான பொதுமக்களினை வெள்ளப்பெருக்கு மற்றும் கலப்பு அரிப்பினால் பாதுகாக்கும் நோக்கில் 162 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் தோணாவை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்த தோணா அபிவிருத்திக்கு இன்றுவரை எவ்வளவு தொகை பணம் பாவிக்கப்பட்டுள்ளது?
மீதி எவ்வளவு தொகை உள்ளது? தோணாவில் செய்யப்படவேண்டிய வேலைத் திட்டங்கள் என்ன? என்பதை
மக்கள் அறிய விரும்புகின்றனர்.




0 comments:
Post a Comment