அம்பாறை மாவட்ட பிரதான போக்கு வரத்துப் பாதைகளில்

கட்டாக்காலி மாடுகளின் தொல்லை

உரிய அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா?







அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதான போக்குவரத்துப் பாதைகளிலும் இங்குள்ள சந்தைப் பிரதேசங்களிலும் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதுடன் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்படுகின்றன என வாகனச் சொந்தக்காரர்களும் இப் பிரதேச பொது மக்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது கல்முனை மாநகரப்பிரதேச  பிரதான பாதைகளிலும் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் இவ்வாறு அதிகரித்திருப்பதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்
 இம்மாவட்டத்தின் காரைதீவு - அம்பாரை கல்முனை - பொத்துவில் கல்முனைகிட்டங்கி கல்முனைமட்டக்களப்பு ஆகிய பிரதானப் போக்கு வரத்துப் பாதைகளில் இக்கட்டாக்காலி மாடுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 சன நெருக்கடிமிக்க காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி, மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பொலிஸ் நிலைய பிரதான பாதை என்பனவற்றில் இக்கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதுடன் போக்கு வரத்திற்குத் தடையை ஏற்படுத்துவதாகவும் குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் ஆபத்துக்களை திடிரென எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
  இதுமாத்திரமல்லாமல் இக்கட்டாக்காலி மாடுகள் இங்குள்ள சந்தைப் பிரதேசங்களை அசுத்தமாக்குவதுடன் விற்பனைக்காக வைக்கப்படும் மரக்கறிகளையும் திடிரென இழுத்து தின்று விடுகின்றன எனவும் வியாபாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
  இக்கட்டாக்காலி மாடுகள் இரவு நேரங்களில் பிரதான பாதைகளில் படுத்துறங்கி கழிவுகளைப் போடுவதுடன் பாதைகளையும் அசுத்தமாக்கிவிடுகின்றன எனவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

  பிரதான போக்கு வரத்துப் பாதைகளில் மாடுகள் கட்டாக்காலியாக நடமாடுவதை சட்டத்தின் மூலமாவது அவசியம் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கென மாட்டுச் சொந்தக்காரர்களுக்கு கண்டிப்பான அறிவுறுத்தல்கள் உரிய அதிகாரிகளால் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும் எனவும் பல தரப்பிலிருந்தும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top