கிழக்கு முதலமைச்சர் விவகாரத்தில்

முஸ்லிம் காங்கிரஸுக்குள் முரண்பாடுகள்

-    சஹாப்தீன்

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விவகாரத்தால் முஸ்லிம் காங்கிரஸிற்குள் பலத்த முரண்பாடுகள் வலுத்துள்ளன. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முதலமைச்சர் பதவியை கட்சியின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரைச் சேர்ந்தவருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனை கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.இதனால், கடந்த 05.02.2015 வியாழக்கிழமை ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகாண சபையில் உள்ள தமது உறுப்பினர்களை சந்திக்க வருமாறு விடுத்த அழைப்பினை .எம்.ஜெமீல் புறக்கணித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி அம்பாரை மாவட்டத்திற்கே வழங்க வேண்டுமென்று கட்சியின் ஆதரவாளர்கள், அம்பாரை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்திக் கொண்ட போதிலும், ரவூப் ஹக்கீம் நசீர் அஹமட்டுக்கு அதனை வழங்குவதற்கு துணிந்துள்ளார் என்ற தகவல் அம்பாரை மாவட்டத்தில் பெரும் எதிர்ப்பலையினை ஏற்படுத்தியுள்ளது. அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு இனியும் நிலைத்திருக்குமா என்று முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி அம்பாரைக்கு வழங்க வேண்டுமென்று கேட்பது, பிரதேச வாதமாகும். ஆனால், ஹாபிஸ் நசீருக்கு வழங்கக் கூடாதென்று சொல்லுவது பிரதேசவாதமல்ல. கட்சியின் மீதும், சமூகத்தின் மீதுமுள்ள பற்றுதலாகுமென்று அக்கட்சியின் அம்பாரை மாவட்ட ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
நசீர் அஹமட் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி, புதிய கட்சியை தொடங்கியவர். கட்சியையும், தலைமையையும் அழிக்க வேண்டுமென்று திட்டமிட்டவர். கட்சியின் சின்னம் களவு போவதற்கும் காரணமாக இருந்தவர். இவை பழைய கதை. புதுக்கதையாக ஜனாதிபதி தேர்தலில் கட்சி இறுதிக் கட்டத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க முன் வந்த போதிலும், அவர் கட்சியின் முடிவுக்கு கட்டுப்படாது, தமது இஸ்டம் போல் நடந்து கொண்டார் என்பதாகும். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு வாக்களிக்கவில்லை. முஸ்லிம்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்திக் கொண்ட அரசாங்கத்திற்கும், பௌத்த இனவாத அமைப்புக்களுக்கும் பாடம் புகட்டுவதற்கு சுமார் 97 வீதமான முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு இருந்த போதிலும், நசீர் அஹமட் அதற்கு மாற்றமாக இருந்துவிட்டார். ஆதலால், நசீர் அஹமட் மீண்டும் மஹிந்தவின் ஆட்சி மலர்வதற்கு விருப்பங் கொண்டவர். இதன் மூலம் அவர் முஸ்லிம் சமூகத்தின் விடிவின் மீது அக்கரை கொள்ளாதவர் என்று தெரிகின்றது. இத்தகையவருக்கு முதலமைச்சர் பதவி வழங்ககப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் முதலமைச்சர் பதவியை அடமானம் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மைத்தியின் யுகத்தில் மஹிந்தவின் செல்லப்பிள்ளைக்கு முதலமைச்சர் பதவி வழங்க முடியாது என்பதே அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களின் வெளிப்பாடாக இருக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு அம்பாரை மாவட்டத்தில் சிறப்பாக இருக்கின்றது. ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆதலால், மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியை வளர்க்க வேண்டுமாயின் முதலமைச்சர் பதவியை நசீர் அஹமட்டுக்கு வழங்க வேண்டுமென்பதே ரவூப் ஹக்கீமின் நிலைப்பாடாம் என்று உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
கட்சியின் செல்வாக்கை வளர்ப்பதற்கு முதலமைச்சர் பதவி அவசியம் என்றால், முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் வீழ்ச்சியடைந்து விட்டதாதென்ன? முஸ்லிம் காங்கிரஸின் அதிதித வளர்ச்சி எதிர்க்கட்சியில் இருந்த போதுதான் ஏற்பட்டுள்ளது. மர்ஹும் அஸ்ரப்பின் காலத்தில் மாத்திரமன்றி, ரவூப் ஹக்கீமின் காலத்திலும் இதனை அவதானிக்கலாம். மேலும், ஒரு கட்சியின் வளர்ச்சி என்பது அமைச்சர் பதவிகளில் தங்கியிருப்பதில்லை. அமைச்சர் பதவி மூலம்தான் கட்சியை வளர்க்க இயலும் என்று எண்ணுகின்றவர்கள் சுயநலவாதிகளாகவே இருப்பர். கட்சி ஒன்றினை மக்கள் மத்தியில் வளர்க்க வேண்டுமாயின், சிறந்த திட்;டமிடல், ஆதரவாளர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், தலைமைகளுக்கும் இடையிலான நல்ல தொடர்புகள், கொள்கைப்பற்று, சமூகப்பற்று போன்றவைகள் அவசியமாகும்.
இதே வேளை, அம்பாரை மாவட்டம் முஸ்லிம் காங்கிரஸின் இதயமென்று ரவூப் ஹக்கீம் முதல் அக்கட்சியின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினாலும், உயர்பீட உறுப்பினர்களினாலும் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அம்பாரை மாவட்டத்தின் ஆதரவாளர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் கட்சியும், தலைமையும் சரியாக கௌரவப்படுத்துவதற்கு பதிலாக புறக்கணித்துக் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
அம்பாரை மாவட்டத்திலும் கல்முனை தொகுதி தொடர்ச்சியாக முஸ்லிம் காங்கிரஸின் தலைமையினால் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. ரவூப் ஹக்கீம் தலைமைத்துவ பொறுப்பினை ஏற்றுக் கொண்ட நாள் முதல் இதுவரைக்கும் கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினருக்கோ, மாகாண சபை உறுப்பினருக்கோ அமைச்சர் பதவிகளை வழங்கவில்லை என கல்முனை தொகுதி முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முதற் தடவையாக இணைந்து கொண்ட போது, பைசால் காசிமுக்கும், ஹஸன்அலிக்கும் பிரதி அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. அதே வேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் பசீர் சேகுதாவூத்திற்கும் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. சில மாதங்களின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கட்சிக்கு சென்றது.
மஹிந்தவின் இரண்;டாவது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டது. இதற்காக ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சரானார். பசீர் சேகுதாவூத் பிரதி அமைச்சரானார். சில மாதங்களின் பின்னர் கெபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால், அம்பாரை மாவட்டத்தில் கட்சியின் பொதுத் செயலாளர், பிரதி அமைப்பாளர், உயர்பீட உறுப்பினர் என முறையே ஹஸன்அலி, பைசால் காசிம், ஹரீஸ் ஆகியோர்கள் இருந்த போதிலும், எவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
இதே வேளை, அதாவுல்லா அமைச்சா பதவியை பெற்று பல அபிவிருத்திகளை செய்து, அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகளுக்கு சிம்ம சொற்பனமாக விளங்கினார்.
மேலும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவியை தட்டில் வைத்து வழங்குவதற்கு முன் வந்த போதிலும், முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு மஹிந்தவின் ஆட்சி கிழக்கில் இருக்க வேண்டுமென்று முதலமைச்சர் பதவியையும் ரவூப் ஹக்கீம் கைகழுவிக் கொண்டார். அன்று முதலமைச்சர் பதவியை பெற்றிருந்தால் அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஒருவருக்குத்தான் வழங்கியிருக்க வேண்டும். இதனை தடுப்பதற்காகவே ரவூப் ஹக்கீம் அன்று முதலமைச்சர் பதவியை புறக்கணித்தாரோ எனவும் எண்ண வேண்டியுள்ளது.
தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான அரசாங்கத்தில் கூட அம்பாரை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஹஸன்அலிக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த அமைச்சர் பதவி 100 நாட்களுக்கு மாத்திரம்தான். அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஹஸன்அலிக்கு எப்போதோ அமைச்சர் பதவி வழங்கி இருக்க வேண்டும். 100 நாட்களுக்குரிய அமைச்சர் பதவியை அம்பாரைக்கும், திருகோணமலைக்கும் வழங்கிவிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எந்த அமைச்சர் பதவியும் வழங்கவில்லை என்று தெரிவித்து, சுமார் இரண்டரை வருடங்களுக்குரிய முதலமைச்சர் பதவியை மட்டக்களப்பு வழங்க ரவூப் ஹக்கீம் எண்ணங் கொண்டிருப்பது திட்டமிடப்பட்ட சதியாகும் என்பதே முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை ஆதரவாளர்களின் கருத்துக்களாக உள்ளன.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி ஜெமீலுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதில் கல்முனை மாநகர சபையின் மேயர் நிஸாம் காரியப்பர் உறுதியாக இருந்தார். ஜெமீலும் நிஸாம காரியப்பரை மலை போல் நம்பினார். ஆனால், ரவூப் ஹக்கீம் தமது இராஜதந்திரத்தை பயன்படுத்தி, நிஸாம் காரியப்பருக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையில் ஒரு பணிப்பாளர் பதவி வழங்கியுள்ளார். பதவிக்கு மயங்காதவர்களும் முஸ்லிம் காங்கிரஸில் உண்டோ என்ன? பதவி கிடைத்த மகிழ்ச்சியில் நிஸாம் காரியப்பர் பாவம் ஜெமீலை கைவிட்டுவிட்டார்.
இதே வேளை, கட்சிக்கு சவாலாக உள்ள மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதலமைச்சர் வழங்கப்பட உள்ளதனைப் போன்று, அம்பாரையில் கட்சிக்கு சவாலாக உள்ள பொத்துவில் தொகுதிக்கும், சம்மாந்துறைத் தொகுதிக்கும் மாகாண சபை அமைச்சர் பதவி வழங்க ரவூப் ஹக்கீம் எண்ணங் கொண்டுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் தவத்திற்கு மாகாண சபையில் அமைச்சர் பதவி வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலமாக அதாவுல்லாவின் மீதுள்ள அரசியல் பயம் ரவூப் ஹக்கீமுக்கு இன்னும் குறையவில்லை என்பது புலனாகின்றது.
கட்சியின் கட்டமைப்பை புனரமைத்து, கட்டி எழுப்புவதற்கு திட்டங்களை வகுத்து கொள்ளாது. மத்திய குழுக்களை சீரமைத்துக் கொள்ளாது. உயர்பீட உறுப்பினர்களுக்குரிய அந்தஸ்தை கொடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்காது அமைச்சர் பதவிகளின் மூலமாக கட்சியை வளர்ப்பதற்கு ரவூப் ஹக்கீம் திட்டமிட்டுக் கொண்டிருப்பது முஸ்லிம் சமூகத்தில் குரல்வளையை நசுக்குவதற்கு சமமாகும். அமைச்சர் பதவிகள் வாயை மூடுவதற்கு பேரினவாதிகள் வழங்கும் எச்சில் துண்டுகளாகும்.
அம்பாரை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களித்ததன் மூலமாக ஹஸன்அலி, பைசால் காசிம், ஹரிஸ் ஆகிய 03 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜெமீல், மன்சூர், தவம், நசீர் ஆகிய 04 மாகாண சபை உறுப்பினர்களும், கல்முனை மாநகர சபையின் அதிகாரமும், நிந்தவூர், அட்டாளைச்சேனை, இறக்காமம், பொத்துவில் ஆகிய பிரதேச சபையின் அதிகாரங்களும் முஸ்லிம் காங்கிரஸின் வசமுள்ளன. இந்த மாவட்ட முஸ்லிம்களின் ஆதரவுதான் முஸ்லிம் காங்கிரஸிற்கு அரசியல் பலத்தையும், பேரம் பேசும் சக்தியையும், தலைமை தொடர்ச்சியாக கெபினட் அமைச்சர் பதவியை பெறவும் முக்கிய காரணமாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டத்தினை முறையாக பேணிக் கொள்ளாது போனால், அம்பாரை மாவட்டத்தினையும் முஸ்லிம் காங்கிரஸ் இழக்க வேண்டியேற்படும்.
இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும், ஏனையோர்களும் அமைச்சர் பதவிகளின் பின்னால் அலைந்து கொண்டு செல்வது ஒரு சமூகத்தின் எதிர்கால அரசியலுக்கு உதவாது. இன்றைய அரசாங்கத்தில் 100 நாட்களுக்கு அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்வதனை முஸ்லிம்கள் விரும்பவில்லை. அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்ளாது, அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி நல்லாட்சிக்கு உதவ வேண்டுமென்றே முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் விரும்பினர். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் பதவிகளை மஹிந்தராஜபக்ஷவிடம் இறுதிக்கட்டத்தில் காலை வாரிவிட்டு, முஸ்லிம் சமூகத்தின் அழுத்தங்களினால் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கி, மீண்டும் அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொண்டார்கள். உறவினர்களுக்கு பதவிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார்கள். முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சிலரும், அவர்களின் உறவினர்களும் வாழ்வதற்கானதொரு பாசறையாகவே இருக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அரசாங்கத்தில் பங்காளியாக அமைச்சர் பதவிகளை பெற்றுள்ள போதிலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதற்கு சிந்திக்காது. பதவிகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. பதவிகளின் பின்னால் செல்லுகின்ற கட்சியும், மக்கள் பிரதிநிதிகளும் ஒரு நாள் முஸ்லிம் சமூகத்தினை தெருவில் விட்டுவிடுவார்கள். ஆதலால், முஸ்லிம் சமூகம் புதிய தலைமைகளைப் பற்றி சிந்திக்கவும், தேர்ந்தெடுக்கவும் திட்டங்களை வகுக்க வேண்டும்.
நன்றி:- வீரகேசரி (08.02.2015)

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top