கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியமைப்பு,
மக்கள் ஆணைக்கு முற்றிலும் முரணானது

-   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்


2012ஆம் ஆண்டு நடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு முரணாகவே கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆட்சியை அமைத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் புதிய ஆட்சியமைப்பானது நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கப்பட்ட மக்களின் ஆணைக்கும் முரணானது என்றும் சம்பந்தன் கூறியுள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது, அரசாங்கக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட்டிருந்த முஸ்லிம் காங்கிரஸானது அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரம் செய்திருந்ததையும் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறே, இம்முறை ஜனாதிபதித் தேர்தலிலும் அரசாங்கக் கூட்டணியிலிருந்து வெளியேறியிருந்த முஸ்லிம் காங்கிரஸ், எதிரணியின் வேட்பாளரையே ஆதரித்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், மீண்டும் அரசாங்கக் கூட்டணியுடன் சேர்ந்து கிழக்கில் ஆட்சியமைத்துள்ளதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது மக்கள் ஆணைக்கு முரணாக செயற்படுகின்றது என்று தெரிவித்துள்ளார்.

அரசாங்கக் கூட்டணியிலும் பார்க்க 6 ஆயிரத்து 100 வாக்குகளையே குறைவாகப் பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 11 ஆசனங்களை வென்றிருந்ததாகக் கூறியுள்ள இரா. சம்பந்தன், தங்களை விட 61 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்த முஸ்லிம் காங்கிரஸ், 7 ஆசனங்களையே வென்றிருந்தது என்றும் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 2 மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முதலிடத்தைக் கைப்பற்றியிருந்ததாகவும் எந்தவொரு மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் முதலிடத்தைக் கைப்பற்றியிருக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(பிபிசி தமிழோசை

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top