நியூயார்க் நகரில் அடுக்குமாடி கட்டிடம் தீப்பிடித்தது
4 பேர் உயிருக்கு ஆபத்து, 20 பேர் படுகாயம்

( படங்கள் )

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று மாலை அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் காஸ் கசிந்து தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த தீ விபத்தில் 2 அடுக்குமாடி கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தது. 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நியூயார்க் நகரின் மத்தியில் இருக்கும் ஈஸ்ட் வில்லேஜ் பகுதியில் உள்ள இரண்டாவது அவென்யூவில் 121ம் இலக்கத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை 3 மணியளவில் குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணி நடைபெற்றது. அப்போது அருகே இருந்த சமையல் எரிவாயு குழாயில் ஓட்டை விழுந்ததால், அதில் இருந்து காஸ் கசிந்து தீப்பிடித்தது. இந்த தீ பின்னர் மளமளவென்று அடுக்குமாடி கட்டிடம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியதாகவும் கண்ணாடி ஜன்னல்களும் கதவுகளும் வெடித்து சிதறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு குழாயில் இருந்து கசிந்த காஸ் அருகில் இருந்த கட்டிடங்களுக்கும் பரவியதால், அந்த கட்டிடங்களும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. அங்கு வசித்த ஏராளமான மக்கள் சாலையோரத்துக்கு ஓடிவந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நியூயார்க் தீயணைப்பு படையினர் 250 தீயணைப்பு வாகனங்களுடன் வந்து நேற்றிரவு வரை தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் என அறிவிக்கப்படுகின்றது.
121ம் இலக்கத்தில் இருக்கும் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ, அருகே 123ம் இலக்கத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திலும் பரவியதால், அந்த 2 அடுக்குமாடி கட்டிடங்களும் மற்ற கட்டிடங்களும் பலத்த சேதம் அடைந்துள்ளது.

நியூயார்க் நகரில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் அனைவரும் நலமாக திரும்ப வேண்டும் என்று நியூயார்க் நகர மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்று நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாஸ்சியோ நேற்றிரவு தகவல் வெளியிட்டார்.














0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top