சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயத்திற்கு
தகுதியான அதிபர் ஒருவரை நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை

சம்மாந்துறை வலயத்தின் சம்மாந்துறை கோட்டக் கல்வி பிரிவுக்குள் அமைந்திருக்கும் அல்-அர்ஷத் மகா வித்தியாலயம் தகுதிவாய்ந்த அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகம் இல்லாது தள்ளாடி தளர்ந்து வருவதாகவும், அங்கு அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதாகவும் பிரதேசவாசிகளும், பாடசாலை நலனில் அக்கறை கொண்டவர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
சம்மாந்துறை அல்-அர்ஷத் மகா வித்தியாலயம் ஆரம்ப பிரிவில் 616 மாணவர்களையும், இடைநிலை-உயர்தரப் பிரிவுகளில் 1023 மாணவர்களையும் கொண்டு மொத்தமாக 1639 மாணவர்களோடும், 77 ஆசிரிய-ஆசிரியைகளோடும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஒரு IC தர பாடசாலையாகும். இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் 07.11.2014 அன்று பதவியுயர்வு பெற்றுச் சென்றுள்ளதனால் இப்பாடசாலையின் தரத்திற்கு ஏற்ற அதிபர் இல்லாது தற்காலிகமாக ஒரு அதிபரை நியமித்திருப்பதாகவும் அவர் இப் பாடசாலை வளர்ச்சியில் கவனம் செலுத்தாது  தான்தோன்றித்தனமாக செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் என சிலர் வீட்டில் இருந்து கொண்டு கூடிக் கதைப்பது போல் பாடசாலையில் கதைத்துக் கொண்டிருப்பதாகவும், பாடசாலையில் உள்ள ஒரு சில ஆசிரியர்களின் பொடுபோக்குத்தனத்தை அதிபர் கண்டிக்காதும், தகுந்த நடவடிக்கை எடுக்காதும் ஒரு ஸ்த்திரத்தன்மை அற்றிருப்பதாகவும் பல முறைப்பாடுகள் பாடசாலை நலனில் அக்கறை கொண்டவர்களால் முன்வைக்கப்படுகின்றது.

இப் பாடசாலை கஷ்ட பிரதேச பாடசாலை என்ற பிரிவில் இருப்பதனால்  அரசாங்கத்தால் மேலதிகமாக கொடுக்கப்படும் கஷ்ட பிரதேச கொடுப்பனவுக்காக மாத்திரம் முன்டியடித்துக் கொண்டு இங்கு இடமாற்றம் பெற்று அதிகமான ஆசிரியர்கள் வருவதாகவும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் எவ்வித கரிசனையற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இப்பாடசாலையில் உள்ள ஒரு சில ஆசிரிய-ஆசிரியைகள் மேற்படிப்புக்களையும், மேலதிக கற்கை நெறிகளையும் கற்றுக் கொண்டிருப்பதனால் இவர்கள் பாடசாலை நேரங்களில் மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாது எந்நேரமும் நுாலகத்தில் அமர்ந்து கொண்டு  படித்துக் கொண்டிருப்பதாகவும், மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்கு அவர்களை அழைக்கின்ற போது நீங்கஎல்லாம் படிச்சி என்னடா செய்ய போறிங்க என்று கூறுவதாகவும், குறிப்பாக ஆங்கில பாடத்திற்கு மாணவர்கள் அங்குள்ள ஆங்கில பாட ஆசிரியரை அழைத்தால்நீங்க எல்லாம் ஆங்கிலம் படிச்சி என்னத்த கிழிக்கப் போறிங்க என்று தெரிவிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இப்பாடசாலையில் அதிகமாக வெளியூர் ஆசிரியர்கள் கடமையாற்றுவதனால் குறித்த வெளியூர் ஆசிரியர்கள்  மற்றும் உள்ளூர் ஆசிரியர்கள் காலம் தாழ்த்தி பாடசாலைக்கு வருவதாகவும் இது குறித்து பாடசாலை அதிபரோ-நிர்வாகமோ எந்தவித நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பாடசாலையில் நுாலகம் இருக்கின்ற போதும் மாணவர்களின் பொதுஅறிவு விருத்திக்குத் தேவையான நாளாந்த பத்திரிகை செய்திகள் எதுவும் பெறப்படாதிருப்பதாகவும், அதற்குத் தேவையான நடவடிக்கைளை பாடசாலை நிர்வாகம் மேற்கொள்ளாதிருப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.

இவ்வாறு தள்ளாடிக் கொண்டிருக்கும் இப்பாடசாலையின் நிர்வாகம் இருக்கும் நிலையில் இப்பாடசாலை மாணவர்கள் எவ்வாறு புலமைப் பரீட்சையிலும், .பொத. சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளில் சிறப்பான முறையில் சித்தியடைவார்கள்...??? மாணவ-மாணவிகளது கல்வி வளர்ச்சிக்கு பாடுபடாமல் அரசாங்கத்திடம் இருந்து மாதம் மாதம் கை நீட்டி சம்பளம் வாங்கும் இவர்களின் கொழுப்புக்களை கரைத்து இப்பாடசாலை கல்வி வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது சம்மாந்துறை மக்களின் கடமையல்லவா...???
ஒவ்வொரு வருடமும் சாதாரண தரத்திலும் சரி, உயர்தரத்திலும் சரி, ஐந்தாம் தர புலமைப் பரீ்ட்சையிலும் சரி மாணவர்கள் சித்தியடையும் வீதம் வீழ்ச்சி அடைந்து கொண்டே வருகின்றது என்பது இங்கு பகிரங்கமாக சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
எனவே படிக்கக் கூடிய திறமை வாய்ந்த  அப்பாவி மாணவ-மாணவிகளின் கல்வி நடவடிக்கைகளில் விளையாட்டாகவும், பொடுபோக்காகவும் இருக்கும் இப்பாடசாலை அதிபரையும் உப அதிபர் போன்றோரையும் மற்றும் பாடசாலை நிர்வாகத்தையும் மாற்றி இப்பாடசாலைக்கு சிறந்த தகுதி வாய்ந்த அதிபரையும், பாடசாலை நலன்களில் கூடுதல் அக்கறை செலுத்தி பாடசாலையின் கல்விவளரச்சியில் கூடுதல் கவனம் செலுத்தக் கூடிய புதிய பாடசாலை நிர்வாகத்தையும் அமைக்க வேண்டும் இது காலத்தின் மிக கட்டாயத் தேவையாக இருக்கின்றது.
இப் பாடசாலையின் அபிவிருத்தியில் அக்கறை கொண்ட இப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பாடசாலை அதிபரை மாற்றக் கோரி எழுதிய கடிதமும் இத்துடன்  இணைக்கப்பட்டுள்ளது)

எனவே, இப்பாடசாலை மாணவர்களின் நலன்களில் அக்கறை கொண்டு சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம், கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் மாகாண கல்வி அமைச்சு போன்றோர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் மக்கள் விருப்பம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டிநிற்கின்றது.

இது மக்கள் விருப்பமாகும்



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top