ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான

தேசிய அரசில் தற்போது 71 அமைச்சர்கள்

45 அமைச்சர்களை மட்டுமே கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையிலான அரசில் தற்போது 26 புதிய அமைச்சர்கள் அடங்கலாக தற்போது மொத்தமாக 71 அமைச்சர்களைக் கொண்டதாகப் புதிய தேசிய அரசாக மாற்றமடைந்துள்ளது.
இதற்கமைய 27 ஆக இருந்த அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆல் அதிகரித்து 38 ஆகவும், 10 ஆக இருந்த இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 5 ஆல் அதிகரித்து 15 ஆகவும், 8 ஆக இருந்த பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை 10 ஆல் அதிகரித்து 18 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
இலங்கை வரலாற்றில் 2ஆவது தேசிய அரசாக இது ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 1965ஆம் ஆண்டு தொடக்கம் 1968ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்க தலைமையில் இலங்கையின் முதலாவது தேசிய அரசு அமைக்கப்பட்டது.
 ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற குழு ஆகியவை  இணைந்து இந்தத் தேசிய அரசு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
 இருப்பினும், தற்போதைய தேசிய அரசில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய தொழிலாளர் முன்னணி, மலையக மக்கள் முன்னணி முதலான 7 கட்சிகள்  அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 தேசிய அரசு ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையானது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைப் பிரதமர் வேட்பாளராகக் களமிறக்க முயற்சிக்கும் தரப்பினருக்கும், ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்த்த தரப்பினருக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top