விருட்சம்

ஏ.ஆர்.மன்சூர் அவர்களின்

சமூகப் பணிகளுக்கான ஓர் பதிவு

2013.10.19ம் நாள் மருதமுனை நகரில், “மருதமுனை மக்கள் மன்சூர்அவர்களுக்குச் சொரியும் நன்றிப் பூக்கள் என்ற கருப்பொருளில், முன்னாள்அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் வைபவம்நடைபெற்று, அதன் அங்கமாக ‘விருட்சம் என்ற விழாமலர் ஒன்றும்வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
வைபவத்தின்போது ‘விருட்சம் பிரதிகள் ஒரு சிலவே பகிர்வுசெய்யப்பட்டிருந்தன. ஏதோ காரணங்களினால் தடைப்பட்டிருந்த விநியோகம் நீண்ட இடைவெளியின் பின் மீண்டும் இடம்பெறுவதைக் காணக்கூடியதாய் உள்ளது.
இவ்வாறான வைபவங்களின்போது மலர் வெளியீடுகள் இடம்பெறுவதும், அதனைப் பெற்றுப் புரட்டிப் பார்ப்பதும், படித்தறிவதும், ஆவணப்படுத்துவதும் வழமையாகிவிட்டது. விருட்சம் ஆவணப்படுத்தத் தகுந்தது எனலாம்.
அதன் முகவடிவு, விருட்ச நாயகன் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் விருட்ச வசீகரத் தோற்றத்தினையும், மருதமுனையின் இரு பெரும் மகாவித்தியாலயங்களினது அழகுறு வடிவங்களையும் காட்டி 175 பக்கங்களுடன் 10" X 7" என்ற அளவில் கனதியானதொரு கவர்ச்சி வடிவாய் அமைந்துள்ளது.
அதனுள் மன்சூர் அவர்களின் நினைவுக் குறிப்புகள், அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின் முப்பதுக்கும் மேற்பட்ட நிழல் படங்கள், அன்னார்பற்றி 94 ஆளுமைகளின் ஆக்கங்கள், நான்கு வர்த்தக நிறுவனங்களின் ஆசிச் செய்திகள் அடங்கலாக இன்னும் பல காத்திரமான அம்சங்கள்பொதிந்துள்ளன.
விருட்சம் ஒரு விழாமலர் என்ற இடத்தில் நின்று நூலொன்றுக்கானதன்மை அற்றிருந்தாலும், நூலுக்குப் போல் ஒரு நோக்கு அவசியப்படுகிறது. சாதாரண அரசியல்வாதியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கான வெளியீடு என்ற வகையில் அமைந்திருந்தாலும், அவரிடத்தில் அற்புத மனிதம் ஒன்றினை இனம் கண்டு அதனைச் சுவைத்த நெஞ்சங்களின் உணர்ச்சி வெளிப்பாடுகள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதால் விருட்சம் பற்றியதொரு பார்வை அவசியப்படுகிறது
மருதமுனை மக்களின் மன்சூர் அவர்களுக்கான நன்றிப் பூக்கள்சொரியும் விழா ஏன் எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது என்ற விபரங்களை ஏற்பாட்டாளர்கள் என்ற வகையில்; தலைவர், செயலாளர், மலர்வெளியீட்டாளர் என்போர் மன்சூர் அவர்கள்; மருதமுனை மக்களின் தேவையறிந்து குறைகள் போக்க எவ்வாறெல்லாம் செயற்பட்டார் என்பதை அருகிலிருந்து அனுபவித்துணர்ந்த உண்மைகளை உலகறியச் செய்யும்முயற்சியாக விருட்சம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
விருட்ச நாயகன் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் பொது வாழ்க்கையில் விருட்ச தன்னை ஒரு அரசியல்வாதியாக இணைத்துக் கொண்டு பொதுசன விருப்பு வெறுப்புகளுக்குள் உள்வாங்கப்படுவதால் விருட்சம் படிக்கப்படும் போது, ஏ.ஆர்.மன்சூர் அவர்களது செயற்பாட்டுமுறை, சேவைகளின் தன்மை, அவரது சுபாவம், அவரிடத்தில் காணப்படும் மனித நேயம், பண்பாட்டு முறை,எழிமை, நேர்மை போன்ற குணாம்சங்கள் அறியப்பட்டு அன்னாரது பெருமையை மேலும் உணரவும், அவரைப் புரியத் தவறியோர் புரிந்துகொள்ளவும் விருட்சம் துணைநிற்கின்றது.
விருட்சம் சுமந்துள்ள விருட்சம் கருத்துக்கள், எவரது ஆணைக்கும் ஏவலுக்கும் கட்டுப்பட்டோ, எந்த நன்மைகளையும் எதிர்பார்த்தோ வெளிக்காட்டிய கற்பனை வடிவங்களல்லாது அன்னாரை நெருங்கி அனுபவித்து சுவைத்து உதிர்த்த உணர்வு வடிவங்களாகக் காணப்படுவதை இம்மலரின்சிறப்பம்சமாகக் கொள்ளலாம்.
விருட்சம் சுமந்துள்ள ஆக்கங்களைத் தந்துள்ளவர்கள் பல்வேறுதுறைகளிலும் ஒளிவீசி நிற்கும் ஆளுமைகள் அவர்களுள்; ஆசிரியர்கள், அதிபர்கள், மார்க்க அறிஞர்கள், பள்ளிவாயில் நம்பிக்கை யாளர்கள், அரசியல் அவதானிகள், முன்னாள் இன்னாள் அரசியல் தலைமைகள், இளைய, முதிய ஊடகவியலாளர்கள், கல்வியியற் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக நூலகவியலாளர்கள், பதிவாளர்கள், பீடாதிபதிகள், உபவேந்தர்கள் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் இன்னும் வைத்தியம், பொறியியல், விஞ்ஞானம், சட்டம், கணக்கியல்போன்ற துறைசார் நிபுணர்கள் மேலும்; சர்வதேச அமைப்புகளின் நிர்வாகிகள்,வெளிநாட்டுத் தூதுவர்கள் எனப் பல துறையினரும் நிறைந்துள்ளனர்.
இத்தகையோரது உள்ளங்களை நிறைத்து நிற்கும் உன்னத மனிதம் ஒன்றை சுமந்து நிற்பவர் ஏ.ஆர்.மன்சூர் அவர்கள் என்பதை அறியச் செய்யும் வழிகாட்டியாக மட்டுமன்றி கல்வியால் உயர்வு பெற்று உச்சத்தை தொட்டோரெல்லாம் ஒருமித்த குரலில் ஒருவரைச் சான்றோன் எனச்சொல்வது சாதாரணமானதுமல்ல. அந்த இடத்தைப் பெற்றுக் கொண்டவர் சாமான்யருமல்லர் என்பதையும் விருட்சம் சொல்லி நிற்கிறது.
இத்தகு ஆளுமைகளின் கருத்துக்களைத் தொட்டுச் சென்றாலே விரிவான நூல் உருப்பெற்று விடும். இருந்தாலும் ஒரு சோறு பதம் போல் தென்கிழக்குப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளரும், மெய்யியல் உளவியல் பிரிவைச் சேர்ந்தவருமான ஏ.ஜே.எல்.வஸீல் MED, MPhL அவர்களின் கருத்தினை மட்டும் குறிப்பிடுவதன் மூலம் விருட்சத்தின் வெளியீட்டு நோக்கத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.
இவ்விதழுக்குக் குறிப்புகள் தேடி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்து நூலகம் நுழைந்து ஆய்வு செய்தபோது, அவர் பற்றி கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் எழுதி வெளியிட்ட சஞ்சிகை ஒன்றைத் தவிர வேறெதுவும் கண்டெடுக்க முடியாமல் கவலை அடைந்தேன். எனினும் அல்ஹாஜ் ஏ.ஆர்.மன்சூர் ஏனையோர்களை நிறுவனங்களை வாழ்த்தி எழுதிய வாழ்த்துச் செய்திகள் பலவற்றை என்னால் காணமுடிந்தது. எனினும்,அல்ஹாஜ் ஏ.ஆர்.மன்சூருக்கென்ற தனியான கனதியான நூல் ஒன்று இதுவரை எழுதி வெளியிடாமல் இருந்தபோதிலும் காலம் தாழ்த்தியாவது மருதமுனை மக்கள் செய்யும் இப்பதிவு, முழு இலங்கை முஸ்லிம்களின் கடமையைச் செய்வதாக உணர்கிறேன். அத்தோடு இலங்கை முஸ்லிம் வரலாற்றில் முக்கிய முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் இப்பதிவினூடாக முழு முஸ்லிம் சமூகத்தின் இருப்பும் உறுதிப்படுத்தப்படுவது இப்பதிவின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையின் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் செய்த சமூகப் பணி ஏன் இதுவரை பதியப்படவில்லை என்பது என்னுள் எழுந்த முக்கியமான வினாவாகும். இன்றைய அரசியல்வாதிகள் அரசியலுக்குள் வந்தவுடன் சேவை செய்ய முதலே அவர்களது வரலாறுகளை, குடும்ப வரலாறுகளை நூலுருவாக்கும் இக்காலத்தில் அல்ஹாஜ் ஏ.ஆர்.மன்சூர் சேவை ஏன் நூலுருவாக்கப்படவில்லை என்பதற்கு நான் ஆராய்ந்து கண்ட விடை அவர் புகழையோ, பாராட்டையோ மனிதர்களிடம் இருந்து நேரடியாக எதிர்பார்க்காதவர் என்று தெளிவாகிறது. அந்த வகையில் அவர் வெள்ளைமனம் கொண்டவர் என்பதற்கு இது சான்று பகர்கிறது எனத் தனது கருத்து வெளிப்பாட்டைத் தொடர்வதைக் குறிப்பிடலாம்.

எனவே விருட்சம் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் சமூகப்பணிக்கான கனதியான தனியான பதிவென்பது தெளிவு. 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top