முதலமைச்சர் இஸட். ஏ. நஸீர் அஹமத் அவர்களுக்கு.
முஸ்லிம் மக்களின் பகிரங்க
கடிதம்...!
கிழக்கு மாகான முதலமைச்சர் இஸட். ஏ. நஸீர் அஹமத் ஆகிய நீங்கள் ( அல்ஹாபீஸ் நஸீர் அஹமத் ( பொறியியலாளர்) ) எல்லாம்
வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தின் பிரகாரம் கிழக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவு செய்யப்படிருக்கிறீர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வை முன்னிறுத்தி உண்மையை இங்கு நேரடியாகவே சொல்ல
விரும்புகின்றோம். தாங்கள் எதிர்காலத்தில் மக்கள் அபிமானியாகத் திகழ வேண்டும் என்பதே
எங்கள் நோக்கமாகும். அதன் நிமிர்த்தமே இப்பகிரங்க கடிதத்தை தங்களுக்கு எழுதுகின்றோம்.
தங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகக் கிடைத்துள்ள இந்த முதலமைச்சர்
பதவி முஸ்லிம் சமூகத்திற்கு கடந்த காலத்தில் நீங்கள் செய்த சேவைகளுக்காகவோ அல்லது ஆரம்ப
காலத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸைக் கட்டிக் காத்து வளர்த்தெடுதவர்களில் நீங்கள்
முதன்மையானவர் என்ற பல்வேறு காரணங்களினாலோ நிச்சயமாகக் கிடைக்கவில்லை. குர்ஆனை மனனம்
செய்த நீங்கள் உங்கள் மனதைத் தட்டிக் கேட்டால் நிச்சயம் அதனை ஏற்றுக் கொள்வீர்கள்.
குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் முடிவெடுத்து செயல்படும் கட்சியே முஸ்லிம்
காங்கிரஸ் என்று மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள் அடிக்கடி மக்களுக்கு கூட்ட மேடைகளில்
நினைவுபடுத்துவார்கள். இப்படியான ஒரு புனித மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை முன்னிறுத்தியுள்ள
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதலமைச்சர் பதவி ஏற்றுள்ள நீங்கள் அதுவும் புனித குர்ஆனை மனனம் செய்துள்ள நீங்கள் ஏனைய அரசியல்வாதிகளைப்
போல் பதவி இருக்கும் போது மட்டும் மற்றவர்களால் வழங்க முன் வரும் மாலைகள், பொன்னாடைகள்,
பாராட்டுப் பத்திரங்கள் மற்றும் மனிதர்களின் புகழ்ச்சிகளை ஏற்பதற்காகக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கக்
கூடாது. இது உங்களைப் பொறுத்தவரையில் தவிர்த்துக் கொள்ளவேண்டியது அவசியத்திலும் அவசியமாகும்.
அல்லாஹ்வின் அமானிதமாகத் தங்களுக்கு கிடைத்துள்ள இப்பதவியைக் கொண்டு
கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பிரதேசங்களுக்கும் சகல சமூகத்தினருக்கும் முடியுமான சேவைகளைச்
செய்யுங்கள். மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான புகையிரதப்பாதை அமைக்கும் திட்டத்தை
நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் மாகாண சபை மூலம் வலூவான கோரிக்கையை முன் வையுங்கள்.
இது போன்று மக்களுக்கு அவசியம் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் துரிதமாகக்
காலத்தை செலவிடுங்கள். அதன் பிறகு மக்களிடமிருந்து
பாராட்டுக்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். நிச்சயமாக எல்லாம் வல்ல அல்லாஹ்வும் உங்களின்
சேவைகளைப் பொருந்திக்கொள்வான்.
ஒரு சிலர் அவர்களின் சுய நலத்திற்காக தங்களை அழைத்து பொன்னாடைகள்
போர்த்துவதற்கும் பாராட்டுப்பத்திரங்களை வழங்குவதற்கும், மாலைகள் அணிவிப்பதற்கும்
அழைக்கும் போது அவைகளைத் தவிர்த்து அந்த நேரத்தை மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு
செலவழிப்பதன் மூலம் முதலமைச்சர் பதவி தகுதியான ஒருவருக்குத்தான் போய்ச் சேர்ந்துள்ளது
என்ற அபிப்பிராயத்தை மக்களாகிய எங்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.
இல்லையேல் அல்ஹாபீஸ் நஸீர் அஹமத் பதவிக்கும் மாலைக்கும் பொன்னாடைகளுக்கும்
ஆசைப்பட்டவர் அதனையே அவர் விரும்பிக் கொண்டிருக்கிறார் அதற்காகவே காலத்தை வீணாக்கிக்
கொண்டிருக்கின்றார் என்ற உங்களுக்கு எதிரான
கருத்துக்கள் பரவத் தொடங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
ஒரு மனிதன் பாவச் செயலில் ஈடுபட்டால் அதனை முடியுமானால் கையால் தடுக்கவும்
முடியாவிட்டால் வாயால் பேசித் தடுக்கவும். அதற்கும் முடியாவிட்டால் மனதால் வெறுக்கவும்
என்ற கருத்தில் ஒரு ஹதீஸ் இருப்பதை தாங்கள் அறியாமல் இருக்கமாட்டீர்கள். ஆகவே குர்ஆனை
மனனம் செய்துள்ள நீங்கள் ஏனைய அரசியல்வாதிகளைபோல் மாலைகளை அணிந்து கொண்டும் பொன்னாடைகளைப்
போர்த்தும் வைபவங்களில் கலந்து கொண்டும் காலத்தைக் கடத்தாமல் அல்ஹாபீஸ் நஸீர் அஹமத்
என்ற ஒருவர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்தார்
அவர் செய்த சேவைகள் கணக்கிட முடியாதவை என எதிர்காலத்தில் சகல சமூகத்தினரும் பேசக்கூடிய
வகையில் உங்கள் சேவை மிளிர வேண்டும் என விரும்புகின்றோம்.
பதவியில் இருக்கும் போது ஒருவர் உங்களை மாலை அணிவித்து பொன்னாடை
போர்த்தி பாராட்டுவது நிச்சயமாக அவர் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இதுவே
தங்களுக்கு தற்போது பல இடங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
எதிர்காலத்தில் நீங்கள் பதவியில் இல்லாத போது உங்களை மாலை அணிவித்து
பொன்னாடை போர்த்தி பாராட்டுவது நிச்சயமாக நீங்கள் சமூகத்திற்கு செய்த சேவைகளுக்காகவே
இருக்கும். அது நீங்கள் சமூகத்திற்கு செய்யும் சேவைகளைப் பொறுத்திருக்கும் இந்தப் பாராட்டுதலகளை
எதிர்காலத்தில் நீங்கள் பெற வேண்டும் என்றே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
0 comments:
Post a Comment