மட்டக்களப்பு - பொத்துவில் ரயில் விஸ்தரிப்பு;

அரசியல் தலைமைகள்
இன்னும் மௌனிகளாக இருப்பது ஏன்?


மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை புகையிரதப்பாதை விஸ்தரிக்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் .ஆர். மன்சூர் முன்னெடுத்த வேலைத்திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டதைப்பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பலமட்டத்திலானவர்கள் குரல் கொடுத்து வருகின்ற போதும், அம்பாரை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் அரசிற்கு அழுத்தம் கொடுக்காது கைகட்டி வாய்பொத்தி பார்த்துக் கொண்டிருப்பதைப் பற்றி மக்கள் கவலையடைந்துள்ளார்கள்.
இவ்வாறு முன்னாள் கல்முனை பிரதேசசபை உறுப்பினரும் முன்னாள் கரவாகு மேற்கு உப அலுவலக அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தருமான .ஏ. கபூர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்.
இது விடயமாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்  கபூர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;; 1992ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவும், அரசியல் ஞானியாகவுமிருந்த .ஆர். மன்சூர் கல்முனைத் தொகுதியின் அபிவிருத்தி மட்டுமன்றி தேசிய ரீதியிலான அபிவிருத்தி வேலைகளையும் முன்னுரிமைப்படுத்தி செய்தார்.
அந்தக் காலத்தில் அவரால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்களில் ஒன்றுதான் வர்த்தக, பொருளாதார, போக்குவரத்து கருதி மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் பாதை விஸ்தரிப்பு வேலைத் திட்டமாகும். இவ்வேலைத் திட்டத்தை மேற்கொள்வதற்காக அமைச்சராகவிருந்த மன்சூர் அக்கால ஈரான் நாட்டு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அந்த நாட்டிலிருந்து பொறியியலாளர் குழு கிழக்கு வருகை தந்து மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் பாதை விஸ்தரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக் கொண்டு அதற்கான சாத்திய வள அறிக்கையைத் தயாரித்து ஈரான் நாட்டு ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
ஈரான் நாட்டு ஜனாதிபதி இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு இதற்குத்தேவையான நிதியை ஒதுக்கீடு செய்திருந்த சந்தர்ப்பத்தில் 1994 ஆம் ஆண்டில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இவ்வேலைத் திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டது.
இதன் பின்னர் மர்ஹ_ம் எம்.எச்.எம்.அஸ்ரப் அமைச்சராக இருந்தார். அவரது திடீர் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி பேரியல் அஸ்ரப் அமைச்சராக இருந்தார். ரவூப் ஹக்கீம் அமைச்சராக இருந்தார். இன்று வரையும் இருந்து கொண்டிருக்கின்றார். இவர்களில் யாரும் இவ்வேலைத் திட்டம் பற்றி அக்கறை காட்டவில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் மஹிந்தவின் செல்லப்பிள்ளையாக இருந்த கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த .எல்.எம்.அதாஉல்லா 10வருடங்கள் தொடர்ச்சியாக அமைச்சராக இருந்தபோதிலும், மட்டக்களப்பிலிருந்து அக்கரைப்பற்று வரையாவது ரயில்பாதையை விஸ்தரிக்க முயற்சி எடுக்கவுமில்லை அக்கறை காட்டவுமில்லை.
அமைச்சர் அதாஉல்லா தான் பிறந்த மாவட்ட மக்களின் பொருளாதார முன்னேற்றம் கருதி அவர் மனம் வைத்திருந்தால் 2013ல் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி கருதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்திற்குள் உள்வாங்கி செய்திருக்கலாம். கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்திலாவது இதனை ஆரம்பித்திருக்கலாம்.
முன்னாள் அமைச்சர் மன்சூர் சிந்தனையில் உருவான வேலைத்திட்டம். இவ்வேலத்திட்டத்தினை முன்னெடுப்பதால் மன்சூரின் மரியாதை மேலோங்கிவிடும் என்பதாக நினைத்து இப்ப்pரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான எம்.எச்.எம்.அஸ்ரப், பேரியல் அஸ்ரப், .எல்.எம்.அதாஉல்லா போன்றவர்கள் இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுக்காது மௌனியாக இருந்தார்களோ என்னவோ புரியவில்லை.
ஆனால் கிழக்கு வாழ் மூவின மக்களும் அபிவிருத்தி என்ற மகுடத்தில் நீண்டகாலமாக எதிர்பார்த்திருப்பது மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில்பாதை விஸ்தரிக்கப்பட வேண்டும் என்பதுதான்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணைந்த இணக்கப்பாட்டு தேசிய அரசாங்கத்தில் கிழக்கு வாழ் சிங்கள, தமிழ், முஸ்லிம் மூவின மக்களும் நீண்ட காலமாகக் கண்ட கனவு நிறைவேற்றப்படாதிருந்து வந்த மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் பாதை விஸ்தரிப்பு வேலை த்திட்டத்தை மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர் தயாகமகே, இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் போக்குவரத்து, வர்த்தகம், பொருளாதார முன்னேற்றம் கருதி ஒற்றுமைப்பட்டு முன்னெடுப்பார்கள் என்று வாக்களித்த மக்கள் எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயாகமகே தேர்தல் மேடைகளில் பேசும்போது மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையில் ரயில் பாதை விஸ்தரிப்பு செய்வதுடன், பொத்துவிலிலிருந்து அம்பாந்தோட்டை வரைக்கும் விஸ்தரிப்பதாகக் கூறினார்.
கிராமிய சிறுகைத்தொழில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி அண்மையில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் ஒலுவில் துறைமுகம் மீன்பிடித்துறைமுகமாக மாறியிருப்பதால் அதன் உற்பத்தி ஏற்றுமதி கருதி மட்டக்களப்பிலிருந்து அக்கரைப்பற்று வரையிலாவது ரயில் பாதை விஸ்தரிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுள்ளார்.
கல்முனை மாநகரசபை கலைக்கப்படுவதற்கு இறுதி சந்தர்ப்பம் இருக்கும் வேளையில் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலான ரயில் பாதையை விஸ்தரிக்க வேண்டுமன்ற பிரேரணையை ஏகமானதாக நிறைவேற்றியதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்காக கல்முனை வந்திருந்த போது தான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையான ரயில்பாதை விஸ்தரிப்பிற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று கூடியிருந்த மக்கள் சமுத்திரத்தின் முன்னிலையில் வாக்குறுதியளித்ததாக கல்முனை மாநகர சபை பிரதி மேயர் .எல்..மஜீட் பிரேரணையை சமர்ப்பித்து பேசியதையும் ஊடகங்கள் மூலம் அறிய முடிகின்றது.
100 நாள் வேலைத்திட்டத்தின் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எஸ்.தௌபீக் போக்குவரத்து பிரதி அமைச்சராக இருந்தார். அவரும் இதுவிடயத்தில் அக்கறை காட்டவில்லை.
முன்னாள் அமைச்சர் .ஆர்..மன்சூர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இது விடயமாக பல கடிதங்கள் எழுதி அழுத்தம் கொடுத்தார். அதேபோன்று அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் எம்..உதுமாலெவ்வை அக்கரைபற்றில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் அம்பாரை மாவட்ட நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் இந்த ரயில் பாதை விஸ்தரிக்கப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு அனுப்பியிருந்தார்.
முன்னாள் அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான எம்.எச்.எம்.அஸ்ரப்பின் அகால மரணத்திற்குப் பிறகு முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ச்சியாக அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகின்றார்.
கிழக்கு மாகாண மக்களின் பொருளாதார முன்னேற்றம் கருதி கடந்த 20 வருடங்களுக்கு மேலாக புத்திஜீவிகளாலும், அரசியல்வாதிகளாலும் பேசப்பட்டு வரும் ரயில்பாதை விஸ்தரிப்பு பற்றி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்ததாகவோ, பாராளுமன்றம், அமைச்சரவைகளில் பேசியதாகவோ தெரியவில்லை.
அம்பாரை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளாக இருந்தவர்கள், தற்போது இருக்கின்றவர்கள் கூட இது விடயத்தில் அக்கறை காட்டியதாக இல்லை. ஒலுவில் துறைமுகத்தை மீன்பிடி துறைமுகமாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதனால் மீன்பிடி சமூகத்தின் ஏற்றுமதி, இறக்குமதிக்கும், போக்குவரத்திற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும், பங்களிப்பு செய்யக்கூடிய ரயில்பாதை விஸ்தரிப்பு வேலைத்திட்டம் சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும், பிரதி அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் வாய்மூடி மௌனியாக இருப்பது முன்னாள் அமைச்சர், அரசியல்ஞானி .ஆர்..மன்சூர் முன்னெடுத்த வேலைத்திட்டம் என்பதற்காகவா, இதுதான் அவர்கள் செய்யும் நன்றிக்கடனா?
கிழக்கு மாகாண சபையும் இது விடயத்தில் கண் இருந்தும் குருடர் போல் இருந்து வருகிறார்கள்.

ஆகவே கிழக்கு வாழ் மூவின மக்களும் ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்தே ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வெற்றியடையச் செய்தார்கள். ஜனாதிபதி கிழக்கு வாழ் மக்களுக்கு வழங்கும் பரிசாக மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரைக்குமான ரயில் பாதை விஸ்தரிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று ஏ.ஏ.கபூர் கூறினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top