தேர்தல் வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படும்
C.E.B. ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி

2015 ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாய்மொழிமூல மற்றும் எழுத்துமூல வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகள் காற்றில் போய்விட்டன எனக் குறிப்பிட்டு அரசியல் மேடைகள், பாராளுமன்றம் மற்றும் ஊடகங்களில் பல்வேறு அறிக்கைகளை விட்டு அரசாங்கம் விழுகின்ற வரை நாட்களை எண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு தான் அரசியல் ரீதியாக அனுதாபப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மின்சார சபை ஊழியர்கள் 2344 பேர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று 17 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் பத்தரமுல்லையில் உள்ள பி.எச்.புத்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இக்கருத்தைத் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி மின்சார சபை ஊழியர்களினால் தங்களது தொழில்களை நிரந்தரமாக்குமாறு கேட்டு ஒரு பாரிய ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அன்றைய தினம் பொது அபேட்சகர் என்ற வகையில் அந்த இடத்திற்கு சென்று அவர்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.
அரசாங்கங்கள் ஆட்சிக்கு வருவதும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்குமிடையே பல பிரச்சினைகள் அன்றிலிருந்து இருந்து வந்தபோதும், தமது அரசாங்கம் தேர்தல் பிரகடனத்தினூடாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாட்டின் எதிர்காலத்திற்காக மிகத் தெளிவாக நிறைவேற்றுவதற்கு அர்ப்பணத்தோடு உள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
மக்களின் தனிப்பட்ட திருப்தியை ஏற்படுத்துவதற்கும் வாழ்க்கைச் செலவு பிரச்சினையை தீர்ப்பதற்கும் தொழில் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் ஆரம்ப சில மாதங்களிலேயே எந்தவொரு அரசாங்கத்திற்கும் முடியாத காரியம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்வரும் வருடங்களில் அந்த பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதாகவும் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாத நிலையில், அரசியல் யாப்பின் 19வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு முடிந்தமை உலகின் ஜனநாயக அரசாங்கம் ஒன்றின் வரலாற்று சாதனையாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நூறு நாள் வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கும் 19வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கும் தேசிய அரசாங்க எண்ணக்கருவின் ஊடாக புதிய அரசாங்கத்திற்கு முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
நீண்டகாலமாக தாங்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுத் தந்தமைக்காக மின்சார சபை ஊழியர்கள் இதன்போது ஜனாதிபதிக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர்.
மின்சாரம்,மீள்பிறப்பாக்க சக்தி வள அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பிரதி அமைச்சர் அஜித்.பீ.பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, அமைச்சின் செயலாளர் பீ.எம்.என்.பட்டகொட ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top