தாருஸ்ஸலாம் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர்

கலந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டு குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில், அதனது தலைமையகம் தாருஸ்ஸலாமில் இரு வாரங்களுக்கு ஒரு முறை வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் இடம்பெற்று வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்.
இவ் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலமாக்களினால் நடத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இஸ்லாமிய விழுமியங்களை அடிப்படையாகக்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட கட்சி என்ற வகையிலும், மார்க்க விடயங்களை கற்றுக் கொள்வது எம் அனைவரதும் கடமை என்ற வகையிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இத்தகையதொரு நிகழ்வை முதற் கட்டமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தாருஸ்ஸலாமில் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது.
இவ்வாறான நிகழ்ச்சிகளின் ஊடாக முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகள், போராளிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே பரஸ்பர சகோதரத்துவ உறவை கட்டி எழுப்புவதோடு, புதியதொரு அரசியல் கலாசாரத்தையும் தோற்றுவிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ் இஸ்லாமிய சொற்பொழிவுத் தொடர் அஹ்லாக், தப்ஸீர், ஸீரா, தாரீஹ் ஆகிய நான்கு பிரதான தலைப்புகளில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எமது தனிப்பட்ட, குடும்ப, சமூக வாழ்வை பண்பாடுகள் கொண்டதாக அமைத்துக் கொள்வது எம் அனைவரதும் கடமையாகும். அந்தவகையில் பண்பாடுகள் பற்றிய தெளிவை பெற்றுக் கொள்ளும் வகையில் அஹ்லாக் என்ற கருப்பொருளில் பல்வேறுபட்ட விடயங்கள் இச்சொற்பொழிவுத் தொடரில் விரிவுரையாற்றப்படுகின்றன.
அல்குர்ஆன் எமது முதன்மையான வழிகாட்டி என்றவகையில் அல்குர்ஆன் சொல்லுகின்ற விடயங்களை அறிந்து, எமது வாழ்வில் அதனை அமுல்படுத்துவது கடமையாகும். இந்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தப்ஸீர் என்ற தலைப்பில் அல்குர்ஆன் விளக்கவுரையாக தெரிவு செய்யப்பட்ட பல சூராக்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகின்றன.
இவ்வுலகிற்கு அருட்கொடையாக அருளப்பட்ட ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் வாழ்க்கையை பூரணமாக கற்பதன் மூலமே நபியவர்கள் காட்டித் தந்த வாழ்கையை எம்மால் பூரணமாக பின்பற்ற முடியும். இந்த வகையில் நபியவர்களின் நபித்துவத்துவத்திற்கு பிந்திய காலப்பருவம், அவரது இஸ்லாமிய அழைப்புப் பணி போன்ற விடயங்கள் ஸீரா என்ற தலைப்பில் மிக ஆழமாக கற்பிக்கப்படுகின்றன.
இஸ்லாமிய வரலாறுகள் குறிப்பாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் காலத்திற்கு முந்திய, பிந்திய வரலாறுகள் மீட்டப்படுவதன் மூலம் வரலாற்றில் இருந்து படிப்பினைகள் பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் அல்குர்ஆன் மற்றும் நம்பிக்கையான ஏனைய மூலாதாரங்களில் இருந்து நபிமார்கள் மற்றும் கலீபாக்களின் வரலாறுகள் நினைவூட்டப்படுகின்றன.
இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கின்றமை குறிபிடத்தக்கதொரு அம்சமாகும்.

அந்தவகையில் எதிர்வரும் 17 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஜாமியா நளீமியா விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பழீல் அவர்களினால் உளநோய்களும் உளப் பரிசுத்தமும் என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்த்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு ஏற்பாட்டு குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top