மூத்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களை உருவாக்கிய

ஊடகத்துறை ஜாம்பவான் கே.கே.இரத்தினசிங்கம் காலமானார்!

சுடர்ஒளி' பத்திரிகையின் முன்னாள் பிரதம, ஸ்தாபக ஆசிரியர் குமாரவேலு கந்தர் இரத்தினசிங்கம் (கே.கே.ஆர்.) யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் உள்ள அவரது வீட்டில், இன்று  10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை காலாமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 87ஆகும். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவராவார். தமிழ்ப் பத்திரிகை உலகில் சுமார் 60 ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். இவர், பல மூத்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களை உருவாக்கியுள்ளார்.
கண்டிப்புக்கும் கடமைக்கும் முக்கியத்துவம் கொடுத்த கே.கே.ஆர். இலங்கைத் தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர். செய்தி எழுதுவதற்கான புதிய தமிழ் உரை நடை வடிவத்தை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர். காலஞ் சென்ற எஸ்.டி.சிவநாயகத்தின் வலதுகரமாக நான்கு தசாப்தங்களுக்கு மேல் பணியாற்றிய இவர், 'சுதந்திரன்', 'வீரகேசரி' பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகவும், 'தினபதி', 'சிந்தாமணி', 'சூடாமணி' பத்திரிகைகளின் பிரதி ஆசிரியராகவும் 'சுடர்ஒளி' பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் நீண்டகாலம் பணியாற்றியிருந்தார்.

தமது முகத்தை அம்பலப்படுத்தாத கே.கே.ஆர். ஊடகத்துறைக்கு காத்திரமான பங்களிப்பை ஆற்றியுள்ளார். இவரின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் நாளை  11 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top