கல்முனை ஸாஹிறாவிலிருந்து மருத்துவ பீடத்திற்கு

இம்முறையும் எவரும் தெரிவாகவில்லை!

தேசிய ரீதியாக மதிப்புப் பெற்று வரலாறு படைத்துக்கொண்டிருந்த  இத்தேசிய பாடசாலைக்கு என்ன நடந்துவிட்டது!!


சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் 11 மாணவர்கள் வைத்தியத்துறைக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ள நிலையில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையிலிருந்து இம்முறையும் வைத்தியத்துறைக்கு எவரும் தெரிவாகாத நிலை ஏற்பட்டிருப்பது  குறித்து கல்முனைப் பிரதேச கல்வி சமூகம் இக்கல்லூரியில்  விஞ்ஞான கல்வி புகட்டப்படுவதில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு குறித்து அவசியம் ஆராய வேண்டியுள்ளது.
குறிப்பாக  கல்முனைப் பிரதேச அரசியல்வாதிகள், கல்முனை கல்வி அலுவலக அதிகாரிகள், கல்முனை (சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மாளிகைக்காடு) கல்வி சமூகம், இக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், இக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை என்பன கலந்துரையாடி சரியான முடிவுகளை உடனடியாக எடுத்தாக வேண்டும்.
கடந்த காலங்களில் இக்கல்லூரியிலிருந்து வருடா வருடம் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் மருத்துவத் துறைக்கும் பொறியியல் துறைக்கும் தெரிவாகி கல்லூரிக்கும் இப்பிரதேசத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்தார்கள். ((1987-2006)விபரங்களை அட்டவணையில் பார்க்கமுடியும்)
1949.11.16ல் ஆரம்பிக்கப்பட்டு தேசிய ரீதியாக மதிப்புப் பெற்று வரலாறு படைத்துக்கொண்டிருந்த இத்தேசிய பாடசாலைக்கு என்ன நடந்துவிட்டது?
கல்முனை கல்வி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பல உயர்தர பாடசாலைகளில் பல மாணவர்கள் வைத்தியத்துறைக்கும் பொறியியல்துறைக்கும் தெரிவாகியுள்ள நிலையில் ஏன் இக்கல்லூரியிலிருந்து கடந்த சில வருடங்களாக வைத்தியத்துறைக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படாமல் பின் தள்ளப்பட்டிருக்கிறார்கள்?
விஞ்ஞானக் கல்வி புகட்டலுக்கு அடிப்படை வசதிகள் போதாத துறைநீலாவணை மஹாவித்தியாலயத்திலிருந்து கூட இம்முறை ஒரு மாணவி வைத்தியத்துறைக்கு தெரிவாகியுள்ள நிலையில் விஞ்ஞான ஆய்வு கூடம், விஞ்ஞான ஆசிரியர்கள் வளம் என்பன அடங்களான சகல  வசதிகளும் உள்ளடங்கிய கல்முனை ஸாஹிறாவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி புகட்டலுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஏன் இந்தக் கல்லூரியில் கற்கும் மாணவர்களை வைத்தியத்துறைக்கு பல்கலைக்கழகம் அனுப்ப முடியாமல் உள்ளது?
கல்முனை ஸாஹிறாவில் தேவைக்கு மேலதிகமாக உயிரியியல் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அப்படியானால் இங்கு உயர்தரம் கற்கும் விஞ்ஞான மாணவர்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது?
இது குறித்து கல்முனைக் கல்விக் காரியாலயம், கல்முனை கல்வி சமூகம், பெற்றோர்கள், கல்முனைப் பிரதேசத்திலுள்ள பழைய மாணவர்கள்,கொழும்பிலுள்ள பழைய மாணவர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் சீக்கிரமாகச் சிந்தித்து கல்முனைப் பிரதேச மாணவர்களின் விஞ்ஞானக் கல்விக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து ஆராய்ந்து தீர்க்கமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்.
    
கல்முனை ஸாஹிறாக் கல்லூரியிலிருந்து
பல்கலைக்கழகம் சென்றவர்கள் விபரம் (1968-2006)
   
மருத்துவம்
104 மாணவர்கள்
பொறியியல்
124 மாணவர்கள்
பல் மருத்துவம்
04  மாணவர்கள்
மிருக வைத்தியம்
04 மாணவர்கள்
சட்டம்
03 மாணவர்கள்
ஏனைய துறைகள்
662 மாணவர்கள்




(1987-2006)விபரங்கள் அட்டவணை



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top