ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள
முட்டுக்கட்டை
சவூதி மீது ஈரான் கடும் தாக்கு
ஈரானின் குற்றச் சாட்டுக்கு சவூதி மறுப்பு
ஈரானியர்கள் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளாதபடி, சவூதி முட்டுக்கட்டை போட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
சவூதி அரேபிய அரசுடன் உடன்படிக்கை எட்டப்படாததால், இந்த ஆண்டு ஈரானிலிருந்து எவரும் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என ஈரான் கலாசாரத் துறை அமைச்சர் அலி ஜன்னதி தெரிவித்துள்ளார்.
ஈரானிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் விவகாரங்களை அந்நாட்டு கலாசாரம் அமைச்சகம் கையாண்டு வருகிறது.
இது தொடர்பாக ஈரான் அரசு செய்தி நிறுவனத்திடம் அலி ஜன்னதி தெரிவித்துள்ளதாவது:
ஹஜ் புனிதப் பயணம் இவ்வாண்டு செப்டம்பரில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஈரானிலிருந்து செல்லும் புனிதப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவது தொடர்பாக, சவூதி அரசுடன் கடந்த மாதம் 4 நாட்கள் தீவிரப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் ஈரான் யாத்ரிகர்கள் விவகாரத்தில் சவூதி அதிகாரிகள் தகுந்த மதிப்பளித்துப் பேசவில்லை.
புனிதப் பயணிகளுக்கு விசா வழங்குதல், அவர்களுக்கான பயணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஈரானின் ஆலோசனைகளை சவூதி நிராகரித்தது. டெஹ்ரானில் உள்ள ஸ்விஸ் நாட்டு தூதரகம் மூலமாக ஹஜ் பயணிகளுக்கான விசா விண்ணப்பங்களை அளிக்கலாம் என்ற ஈரானின் ஆலோசனையை சவூதி ஏற்கவில்லை.
ஈரானியர் தங்கள் நாட்டிலிருந்து வெளியே சென்று, மற்றொரு நாட்டிலிருந்து விசா விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்று சவூதி வலியுறுத்தியிருக்கிறது.
புனிதப் பயணம் மேற்கொள்வோரைத் தெரிவு செய்தல், பயணத்துக்கான ஏற்பாடுகள், சவூதியில் அவர்களுக்கான பயணம் மற்றும் இருப்பிட வசதிகளைச் செய்து தருதல் உள்ளிட்ட ஏராளமான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை.
சவூதியின் ஒத்துழைப்பு கிடைக்காததால் ஈரானியர் ஹஜ் பயணம் மேற்கொள்வது கேள்விக்குறியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, பல நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். இதில் 464 பேர் ஈரானியர்கள் என்று ஈரான் கூறி வருகிறது. ஆயினும், மொத்த பலி எண்ணிக்கையையும், நாடுகள் வாரியான பயணிகள் பலி எண்ணிக்கையையும் சவூதி குறைத்துத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஈரான் நாட்டினர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள சவூதி எந்தத் தடையையும் முட்டுக்கட்டையையும் ஏற்படுத்தவில்லை என்று சவூதி ஹஜ் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவூதி அரசு செய்தி நிறுவனம் வழியாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
புனிதப் பயணம் மேற்கொள்ளாமல் யாரையும் நாங்கள் தடுக்கவில்லை. அனைத்து நாடுகளிலிருந்தும், அனைத்து இஸ்லாம் பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் நாங்கள் வரவேற்கிறோம்.
வெளிநாடுகளிலிருந்து ஆன்லைன் முறையில் ஹஜ் பயணத்துக்குப் பதிவு செய்யும் முறையைப் பயன்படுத்தி ஈரானியர்கள் புனிதப் பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம்.
புனிதப் பயணம் தொடர்பான சடங்குகளைத் தவிர, அரசியல் ரீதியான நிகழ்ச்சிகள் எதுவும் அனுமதிக்கப்படாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment