குறைந்த வயதில் திருமணம் முடிப்பதால் நிறைய பாதிப்புக்களை
இளவயதுப் பெண்கள் எதிர்கொள்கின்றனர்.
- சட்டத்தரணி ஹஸனா ஷேகு இஸ்ஸதீன்
யாழ் பல்கலைக்கழக முன்னாள் பகுதிநேர விரிவுரையாளர், பெண்ணியல் சமூக செயற்பாட்டாளர். தெரிவித்த கருத்துக்களை இங்கு தொகுத்து தருகின்றோம்.
பல்வேறு மாவட்டங்களிலும் முஸ்லிம் பெண்களுடன் வேலை செய்யக் கிடைத்ததில் பெற்றுக் கொண்ட அனுபவத்தின்படி குறைந்த வயதில் திருமணம் முடிப்பதால் நிறைய பாதிப்புக்களை இளவயதுப் பெண்கள் எதிர்கொள்கின்றனர்.
14 வயதில் திருமணம் செய்து மூன்று மாதங்களில் தலாக் செய்யப்பட்ட ஒரு இளம்பெண் தொடர்பான விபரங்களை ஆராய்ந்தபோது, தாம்பத்திய உறவுக்கு அவள் தயார் நிலையில் இல்லாமைதான் தலாக்குக்குக் காரணம் என்பதை அறிய முடிந்தது.
16 வயதில் திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்ட ஒரு பெண், வீட்டு வேலைகள் செய்யத் தெரியாது என கணவன் வீட்டாரினால் அடித்துத் துன்புறுத்தப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன. இதுபோன்ற பல பிரச்சினைகள் இருக்கின்றன.
இலங்கையில் நடைமுறையில் இருக்கின்ற சட்டங்கள் எல்லாமே 18 வயதினைத்தான் திருமணத்துக்கான வயதாக நிர்ணயித்திருக்கின்றன. முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருமண வயது குறிப்பிடப்படவில்லை. 12 வயதை திருமண வயதாக நிர்ணயிப்பதற்கான வரையறையும் ஒரேயொரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 12 வயதுக்குக் குறைந்த பெண்ணின் திருமணத்தை பதிவுசெய்வதாக இருந்தால் அதற்கு காதியின் அனுமதி பெறப்பட வேண்டும் என சட்டம் குறித்துரைக்கிறது. இதுவும் பதிவு செய்வதாக இருந்தால் மட்டும்தான். பதிவு செய்வதில்லை என்றால் அதுவும் அவசியமில்லை.
பொதுச் சட்டத்தைப் போலவே முஸ்லிம் தனியார் சட்டமும் திருமணத்தைப் பதிவுசெய்ய வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் திருமணப் பதிவு செய்யா விட்டாலும் அந்தத் திருமணம் செல்லுபடியாகும் என்றும் அது சொல்கிறது. இதனால் 12 வயதுக்குக் குறைந்தவர்களையும் திருமணம் செய்து கொடுக்கலாம் என்றாகின்றது. 12 வயதுக்கு மேல் திருமணம் முடிப்பதாக இருந்தால் காதியின் அனுமதியும் தேவையில்லை.
குற்றவியல் சட்டத்தின் படி 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுமி விரும்பியோ விரும்பாமலோ உடலுறவில் ஈடுபட்டால் அது நிர்ப்பந்திக்கப்பட்ட பாலியல் வல்லுறவாகக் கருதப்படுகிறது. இது குறித்த வயதுக்குக் கீழே அவர்கள் உடலுறவு கொள்வதற்கான தகுதியில் இல்லை என்பதனை நியாயப்படுத்துகிறது. இந்தப் பொதுச் சட்டத்தின்படி சிறுமிகளுக்குப் பாதுகாப்புக் கிடைக்கிறது. ஆனால் இந்தச் சட்டம் முஸ்லிம்களுக்குச் செல்லுபடியாகாது என குற்றவியல் சட்டம் கூறுகிறது. இந்த வகையில் நாட்டின் ஏனைய சிறுமிகள் தொடர்பில் சட்டரீதியாக அரசாங்கம் ஏற்றுள்ள பொறுப்பை முஸ்லிம் பெண்கள் என்று வரும்போது அரசாங்கம் கைவிட்டு விடுகிறது.
இஸ்லாம் சொல்லும் விடயங்கள் ஒருபோதும் பகுத்தறிவுக்கு முரணாக அமைவதில்லை. குர்ஆனிலோ சுன்னாவிலோ நடைமுறைக்குச் சாத்தியமில்லாத விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. நடைமுறையில் உள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் தீர்வு இருக்கிறது. அல்குர்ஆன் எல்லாக் காலத்துக்கும் பொருத்தமானது என்ற வகையில் அதனுடைய வசனங்கள் காலத்துக்கேற்றாற் போல பொருள்கோடல் கொள்ளப்பட வேண்டும்.
திருமணத்தைப் பொறுத்தவரையில் பருவ வயதை அடைந்தால் என்ற அல்குர்ஆன் வசனத்துக்கு எவ்வாறு பொருள்கோடல் செய்யலாம் என்பது கவனிக்கப்பட வேண்டும். அல்குர்ஆனின் வசனங்களில் பல கருத்துக்களைப் பெறமுடியுமான நிலைகள் இருக்கின்றன. பிறந்த குழந்தைக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்றும் அல்குர்ஆனின் வசனங்களை வைத்து பொருள்கோட முடியும். பருவமடைதல் என்பதனை உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி அடைதல் என்றும் பொருள் கோடமுடியும். இந்த எல்லாப் பொருள் கோடல்களிலும் தற்பொழுது எதனைப் பொருத்தமானதாகக் கொள்ளலாம் எனக் கண்டு அதனடிப்படையில் தீர்வுகளை நோக்கிச் செல்ல வேண்டும்.
இந்தோனேஷியா, எகிப்து, துருக்கி போன்ற முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளிலும், இந்தியா போன்ற முஸ்லிம் சிறுபான்மை நாடுகளிலும் 21, 18, 16 என திருமண வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. எங்களது நாட்டில் வயதெல்லை குறிப்பிடப்படவில்லை. இஸ்லாத்தில் பருவமடைதல் என்று தான் சொல்லப்பட்டிருப்பதால் வயதெல்லை ஒன்றைக் குறிப்பிட முடியாது என்று சொல்கிறார்கள்.
எங்களது நாட்டில் முஸ்லிம்களுக்கென விஷேட சட்டம் உள்ளது. விஷேடம் என்பது இருப்பதனை விட சிறந்த நிலையைக் குறிக்கிறது. இப்படிப் பார்த்தால் ஏனைய பெண்களை விட எமது பெண்களுக்கு இந்த விஷேட சட்டத்தின் மூலம் கூடுதல் பாதுகாப்புக் கிடைக்க வேண்டும். ஆனால் இந்தச் சட்டம் எங்களுக்கே பாதிப்பாக அமைகிறது. இந்தச் சட்டத்தினால் எங்களுக்குப் பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் இதனை நாங்கள் எப்படி விஷேட சட்டம் என்று சொல்ல முடியும்?
குறைந்த வயதுத் திருமணம் ஓரிரண்டுதான் நடக்கிறது என்ற வாதம் பொய்யானது. 2014 இல் நடந்த முன்னூற்றுக் கணக்கான திருமணங்களில் 45 திருமணங்கள் 18 வயதுக்குக் குறைந்த வயதுத் திருமணங்களாக இருந்துள்ளன. 2015 இல் நடந்த இதே அளவான திருமணங்களில் இந்தத் தொகை 75 ஆக அதிகரித்திருக்கிறது. இது 44 வீதமளவில் வருகிறது. புத்தளத்தில் 1000 பெண் தலைமைக் குடும்பங்களுக்கு மத்தியில் நடத்திய ஆய்வொன்றின்படி 45 வீதமான பெண்கள் குறைந்த வயதில் திருமணம் முடித்திருக்கிறார்கள். இதனால் தலாக் வீதமும் இங்கு அதிகரித்திருக்கிறது. முஸ்லிம் தனியார் சட்டத்தின்படி ஆண் தலாக் கேட்டால் கொடுக்கப்பட வேண்டும் என்று தான் இருக்கிறது. அதற்குரிய வரையறைகள் அங்கு இல்லை.
சிறுவயதுத் திருமணத்தால் கல்வி பாதிக்கிறது. உளவியல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. தலாக் செய்தால் அதனூடு பல சமூகப் பாதிப்புக்களுக்கு அந்தப் பெண்கள் உள்ளாகின்றனர். இப்படிப் பல பிரச்சினைகள் குறைந்த வயதுத் திருமணத்தினால் ஏற்படுகின்றன. இதனால் நாட்டில் எல்லோருக்கும் உள்ளது போல முஸ்லிம் பெண்களுக்கும் 18 வயதுத் திருமண வயதெல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும். இஸ்லாத்தில் பொருத்தமான வயதெல்லையை நிர்ணயிக்க முடியுமான வகையில் பொருள் கோட முடியுமாக இருக்கும் பொழுது, இந்த நாட்டில் குறைந்த வயதில் திருமணம் செய்து அந்நியர்களுக்கு முன்னால் நாங்கள் கேவலப்படத் தேவையில்லை.
புத்தளத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் நாங்கள் செய்த ஆய்வின்போது அவர்களில் பெரும்பாலானவர்கள் ஐந்தாம் வகுப்பு வரையே படித்து விட்டு திருமணம் முடித்திருந்தார்கள். இந்த நிலைமை தங்களது பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்பதில் அவர்கள் வைராக்கியமாக இருந்தார்கள். பெண்களின் திருமண வயதை சட்டத்தினால் நிர்ணயிக்காமல் அப்படியே விட்டு விட்டால் பெண்களின் திருமண வயதை தீர்மானிப்பதை அவர்களின் பெற்றோரிடமே விட்டு விட வேண்டி வருகிறது. அவர்கள் அறியாதவர்களாக இருக்கும் பட்சத்தில் பெண் பிள்ளையிடம் கேட்காமலேயே திருமணம் நடந்து விடுகிறது. இந்தப் பாதிப்பு தங்களது பிள்ளைகளுக்கு நடந்து விடக் கூடாதே என்பதில் இந்தப் பெண் முதல் குடும்பத் தலைவிகள் குறியாக இருக்கிறார்கள்.
பருவமடைதல் என்பதனை திருமண வயதுக்கான எல்லையாக வைத்தால், தற்பொழுது 9 வயதில் எல்லாம் பெண் பிள்ளைகள் பருவமடைகிறார்கள். இவர்களை எல்லாம் திருமணம் முடிக்க வைத்தால் இவர்களது வாழ்க்கை என்னவாகப் போகிறது? சமூகம் என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்த கலவை. ஆண் நன்றாக இருப்பது போலவே பெண்ணும் இருக்க வேண்டும். குறிப்பாக கல்வியில் 9 வயதில் திருமணம் முடித்துக் கொடுத்தால் 4 ஆம் தரத்தில் இருந்தே அந்தப் பிள்ளையின் கல்வி இடைநிறுத்தப்படுகிறது. உடலியல் ரீதியாகவும் இந்தச் சிறுமி பலவீனப்படுகிறாள். பருவமடைவது என்பது ஒரு அனுமதி. இதனை வைத்து ஒரு சிறுமியை தாயாக்கிப் பார்ப்பது மனதுக்குக் கஷ்டமானது. சமூக அந்தஸ்தில் இது ஒரு பின்தங்கிய நிலை.
வறுமைக்காகவும் துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாக்கவும் என சிறுமிகளை திருமணம் முடித்துக் கொடுக்கும் போது சிறுமிகளின் பக்க பாதிப்புக்களும் நியாயங்களும் பார்க்கப்படுவதில்லை. 14 வயதுச் சிறுமி ஒருத்தி திருமணம் முடித்து மூன்று மாதங்களில் அவளது கணவனின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் விவாகரத்துக் கோரியிருக்கிறாள். காதியிடம் போனபோது அவர் பல மணித்தியாலங்களாக பாலியல் தொல்லை தொடர்பான விபரங்களை குடைந்து குடைந்து கேட்க, வெறுப்படைந்த அந்தச் சிறுமி இதுவரை மூன்று தடவைகள் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறாள்.
ஆணைப் பொறுத்தவரை அவன் விரும்பியவாறு தலாக் சொல்லி விட்டுப் போகலாம். ஆனால் பாதிக்கப்படுகின்ற பெண்களின் நிலையிலிருந்தும் நாங்கள் சிந்திக்க வேண் டும்.
மலேஷியாவில் பெண்ணின் திருமண வயது 16 ஆகவிருக்கிறது. விஷேட சந்தர்ப்பங்களில் நீதிபதியின் அனுமதியுடன் பெற்றோரின் விருப்பத்தின் பேரில் திருமணம் முடித்து வைக்கலாம் என்று அந்நாட்டுச் சட்டம் சொல்லுகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் பொதுச் சட்டத்தில் உள்ளது போல பெண்ணின் திருமண வயது 18 ஆகவே இருப்பதுதான் சிறந்தது.
சிறுவர்களை வேலைக்கமர்த்துவதிலும் ஒரு வயதெல்லை இருக்கிறது. காரணம் அந்த வயதெல்லைக்குக் கீழே அவர்களைப் பணிக்கமர்த்துவதால் பாதிப்பு இருக்கிறது என்பது தான். இந்த வகையில் திருமண வயதை நிர்ணயிப்பது மார்க்கத்துக்கு முரணானது அல்ல.
எனவே இந்த விடயத்தில் அடுத்தவர்கள் எங்களுக்கு விரல் நீட்டி அழுத்தம் கொடுக்கும் வரை பார்த்துக் கொண்டிராமல் நாங்கள் முற்போக்காகச் செயற்படுவது நல்லது.
தொகுப்பு: ஹெட்டி றம்ஸி
சந்திப்பு: பியாஸ் முஹம்மத், ஹெட்டி
றம்ஸி,
அனஸ்
அப்பாஸ்
0 comments:
Post a Comment