வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
அரச உதவிகள் சரியாகக் கிடைப்பதில்லை

ஏ.எச்.எம். அஸ்வர் குற்றச் சாட்டு

(எம்.எஸ்.எம்.சாஹிர்)


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்க உதவி சரியாக சென்றடைவதில்லை என முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று குற்றஞ்சாட்டினார்.
பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
 வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்க உதவி சரியாகச் சென்று அடைவதில்லை. அத்துடன் 18ஆம் திகதி வெளியான நவமணிப் பத்திரிகையை தூக்கிப் பிடித்து யாழ். முஸ்லிம் பகுதிகள் வெள்ளதால் மூழ்கின என்ற செய்தியையும் வாசித்துக் காட்டினார். யாழ்., மன்னார் போன்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டவர்கள். இனச் சுத்திகரிப்பு இவ்வளவு பூதாகரமாக ஒருக் காலும் நடை பெற்றதில்லை. யாழ். முஸ்லிம்கள் பகுதிகளுக்கு யாரும் வட மாகாணத்தில் இருந்து பார்க்கச் செல்லவில்லை. தமிழர் தேசிய முன்னணிக்கு அது குறித்து அக்கறை இல்லை. எனவே அந்த யாழ். முஸ்லிம்களுடைய துயர் துடைப்புக்கு அரசாங்கம் முன்வந்து செயற்பட வேண்டும்.
அது போன்று மள்வானை போன்ற பகுதிகளில் ராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பாக இருந்தும் இன்னும் உயர் அதிகாரிகள் வரவில்லை என்ற குற்றச் சாட்டையும் மள்வானை மக்கள் சுமத்துகின்றனர்.
அதேபோன்று ஏராளமான முஸ்லிம் வீடுகள் உட்பட வெல்லம்பிட்டிய, கொத்தட்டுவ, கொலன்னாவ போன்ற இடங்களிலும் மக்கள் அவதிப்படுகின்றார்கள். இது குறித்து விமானப் படை செய்துள்ள சேவையைப் பாராட்டுகிறேன்.
இன்று எமது நாடு சயோனிஷ ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளது என்பதை மிகவும் இரகசியமாக நடைபெற்று வரும் பின்னணிச் செய்தி மூலம் நாம் அறியக் கூடியதாக இருக்கின்றது.
கொழும்பு ஹோட்டன் பிளேஸில்  இஸ்ரேல் துதுவராலயத்துக்கு ஒரு கட்டடம் அமைப்பதற்கு எவ்வளவு ஏக்கர் நிலம், நிதி அந்த அரசால் வழங்கப்பட்டு இருக்கிறது. அதே போன்று வட மத்திய மாகாணம் அநுராதபுரத்திலும் விவசாய அபிவிருத்தி என்ற போர்வையின் கீழ் சுமார் 600 ஏக்கர் காணி இஸ்ரேவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதன் உண்மைகளை இந்த நாட்டுகக்கு தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
சயோனிஷ வாதிகள் எப்போதும் இலங்கைக்கு ஊறுவிளைவிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பின்னால் இருப்பது ஏகாதிபத்திய அமெரிக்கா என்பது யாரும் அறிவர். இதனால்த்தான்  அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ இஸ்ரேல் நலன் பரப்புப் பிரிவை இந்த நாட்டிலிருந்து உடனடியாக  விலகிச் செல்லுமாறு கட்டளை பிறப்பித்தார். அதன் பிறகு ஸ்ரீமாவோ காலத்திலும் அப்படியே செய்தார்.
பிறகு  மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானவுடனே இஸ்ரேவலர்களுடைய அந்த விஷயத்திலும் தலையிட்டு முஸ்லிம்களுடைய, பலஸ்தீனர்களுடைய உரிமையைக் காப்பதற்காக வேண்டி பல முயற்சிகளில் ஈடுபட்டார். அவர் கூட சயோனிஷ வாதிகளையும் முஷாத்தையும் விரும்பவில்லை. ஏனென்றால் இவர்கள் ஏகாதிபத்தியவாதிகளோடு சேர்ந்து இலங்கையின் சுதந்திரத்துக்கு ஊறுவிளைவித்து இந்த நாட்டை, இந்த நாட்டு மக்களை கொத்தடிமையாக்க விரும்புகின்றார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
வட கிழக்கை இணைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டணி மும்முரமாக டயஸ் போராவோடு சேர்ந்து பணியாற்றிக் கொண்டு போகின்றது. இது கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் ஒரு பெரிய ஆபத்தை உண்டாக்கக் கூடிய வழியை ஏற்படுத்தும். ஏனென்றால் கிழக்கு மாகாணத்தையே தமிழர்களுடைய வசம் ஒப்படைக்குமாறு கேட்கின்ற வட மாகாணத் தமிழர்கள், கிழக்கு மாகாண முஸ்லிம்களைக் கவனிப்பார்களா? என்ற கேள்வியை நான் கூட்டு எதிர்க்கட்சி முன்னணி சார்பாக விடுக்கின்றேன்.
வடக்கையும் கிழக்கையும் இணைப்பதன் மூலம் அவர்கள் அதனைப் பிரித்தெடுத்து இன்னொரு பலஸ்தீனத்தை உருவாக்க முயற்சி செய்கின்றார்கள். 68 ஆண்டு காலமாக பலஸ்தீன் மக்கள் படுகின்ற அவஸ்தை உலகம் அறிந்த விடயம். அப்படியான ஒரு நிலை கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு ஏற்படுத்துவதற்கு ஒரு காலமும் அப்பகுதியிலுள்ள முஸ்லிம்கள் இடமளிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் தினேஷ் குணவர்தன, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பேராசிரியர் திஸ்ஸ விதாரன, மஹிந்த யாப்பா அபேவர்தன, விமல் வீரவன்ச போன்றோரும் செய்தியாளர்களிடம் கருத்துக்களை வெளியிட்டனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top