சீனாவுடனான  சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார
வர்த்தக உறவுகள், மேலும் மேம்படும்

அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவிப்பு

சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையே விரைவில் கைச்சாத்தாகவிருக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் பின்னர், இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார வர்த்தக உறவுகள், மேம்படுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்..
சீனாவின் கனியவள நிறுவனத்தின் பிரதிநிதிகள், அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை சந்தித்து, இலங்கையின் கனியவளத் துறையில் சீன நிறுவனங்களின் முதலீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட சீனப் பிரதிநிதிகள், இந்தத் துறையில் தாங்கள் கொண்டுள்ள ஆர்வத்தையும், இலங்கையின் பூகோள நிலைமை கனிய வளத்தை விருத்தி செய்வதற்கு உகந்ததாக இருப்பதாகவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக தங்களால் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையையும் அமைச்சர் றிசாத்திடம் கையளித்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவிக்கையில்,
இலங்கையின் கரையோரப் பகுதிகளில் கனிய வளங்கள் நிறைந்து கிடப்பதாகவும்,புல்மோட்டையில் காணப்படும் இல்மனைட் கனியப் பொருள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருக்கும் 'கிரபைட்' போன்ற கனியப் பொருட்கள், மூலப் பொருளாகவே ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், இன்னும் இதனை சுத்திகரித்து, நன்முறையில் அனுப்பினால் அந்நியச் செலாவணியை மேலும் பெருக்க முடியுமெனவும் குறிப்பிட்டார்.
அதற்கான தொழில் நுட்ப வசதிகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்துகின்றோம் எனவும், 'கிரபைட்' போன்ற கனிமங்கள், கணினி மென்பொருள் செய்வதற்குப் பயன்படுவதாகவும், சீனத் தூதுக்குழுவினரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கனிய வளத்துறையில் முதலீடு செய்யும் ஆர்வம் இருப்போர், தாராளமாக இந்தத் துறையில் இணைந்துகொள்ள முடியும் எனவும் அமைச்சர்  இங்கு குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் பங்கேற்ற தூதுக்குழுவின் தலைவர், கைத்தொழில்,வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணிகளைப் பாராட்டியதுடன், கைத்தொழில் துறையில் அவர் கொண்டுள்ள ஈடுபாட்டையும் மெச்சினார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top