வங்காள தேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின்
மூத்த மகனுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை
வங்காள தேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மூத்த மகனுக்கு
அதிரடியாக 7 ஆண்டு சிறைத்தண்டனையும், 20 கோடி டாக்கா அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது..
வங்காள தேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மூத்த மகன் தாரிக் ரகுமான் (வயது 48). இவர் வங்காளதேச தேசியவாத கட்சியின் மூத்த துணைத்தலைவராக உள்ளார்.
அங்கு வங்காளதேச தேசியவாத கட்சி தலைமையிலான 4 கட்சி கூட்டணி அரசு பதவியில் இருந்த காலகட்டத்தில் (2003-2007), இவர் 2½ மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.16¾ கோடி) சட்ட விரோதமாக சிங்கப்பூருக்கு பரிவர்த்தனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரது தொழில் பங்குதாரரும், நண்பருமான கியாசுதீன் அல் மாமூன் என்பவரும் சிக்கினார்.
இது தொடர்பான வழக்கை டாக்காவில் உள்ள விசாரணை நீதிமன்றம் விசாரித்து தாரிக் ரகுமானை விடுதலை செய்து 2013-ம் ஆண்டு, நவம்பர் 17 ஆம் திகதி தீர்ப்பு அளித்தது. அதே நேரத்தில் கியாசுதீன் அல் மாமூனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், 40 கோடி டாக்கா (இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.34 கோடி) அபராதமும் விதித்தது.
தாரிக் ரகுமான் விடுதலை செய்யப்பட்டதால், வங்காளதேச தேசியவாத கட்சியினர் நிம்மதி அடைந்தனர். ஆனால் அந்த தீர்ப்பை வழங்கிய சில தினங்களில் நீதிபதி ஓய்வு பெற்றதும், நாட்டை விட்டு வெளியேறியது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது.
தாரிக் ரகுமான் விடுதலைக்கு எதிராக வங்காளதேச அரசு தரப்பிலும், கியாசுதீன் அல் மாமூன் தண்டனையை எதிர்த்து அவரது தரப்பிலும் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
தாரிக் ரகுமான், 2007-ம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்பேரில் அவர் லண்டன் சென்றார். சென்றவர், அங்கேயே குடியேறி விட்டார். நாடு திரும்பவில்லை. பல முறை அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் இந்த வழக்கில் ஆஜராகவில்லை.
அவர் இல்லாமலேயே இந்த வழக்கை நீதிபதிகள் இனயத்தூர் ரகீம், அமீர் உசேன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் 21 ஆம் திகதி (நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். அதன்படி அவர்கள் தங்களது தீர்ப்பை நேற்று வழங்கினர்.
தாரிக் ரகுமானை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்ததை ஐகோர்ட்டு நீதிபதிகள் ரத்து செய்தனர். அவருக்கு அதிரடியாக 7 ஆண்டு சிறைத்தண்டனையும், 20 கோடி டாக்கா அபராதமும் விதித்தனர்.
அதே நேரத்தில் அவரது நண்பர் கியாசுதீன் அல் மாமூனுக்கும் 7 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள், அபராதத்தை மட்டும் 40 கோடி டாக்காவில் இருந்து 20 கோடி டாக்காவாக குறைத்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து தாரிக் ரகுமானின் வக்கீல் ஜெய்னுல் அபிதீன் கருத்து தெரிவிக்கையில், “எனது கட்சிக்காரர் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபடவில்லை. இந்த வழக்கில் மேல்-முறையீடு செய்ய உள்ள வாய்ப்புகள் குறித்து ஆராய்வோம்” என கூறியுள்ளார்.
இருப்பினும் தாரிக் ரகுமான், இந்த வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில், விசாரணை நடந்ததால் அவர் மேல்-முறையீடு செய்ய முடியாது என தகவல்கள் கூறுகின்றன.
தாரிக் ரகுமானுக்கு தண்டனை வாரண்டு பிறப்பிக்குமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அல்லது சரண் அடைந்த பின்னர் தண்டனை நிறைவேற்றப்படும்.
0 comments:
Post a Comment