சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம்

மக்கள் ஏமாறுதலும், ஏமாற்றப்படுவதும் தொடர் கதையா?

மருதூர் வாழ் பொதுமக்களே அஸ்ஸலாமு அலைக்கும்!



 01) கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் 09. 08. 2015 இல் இடம்பெற்ற கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்னரான பொதுக்கூட்டத்தில் வைத்து மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் முடிந்த கையோடு சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையைப் பிரகடனம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்று நம்பிக்கையான வாக்குறுதியளித்திருந்தார். சுமார் ஒரு வருடமாகின்ற நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இது சம்பந்தமாக எதுவுமே தெரியாதது போலிருப்பதைப் பார்க்கின்ற போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் வாக்குகளைக் கவருவதற்காக நடத்தப்பட்ட நாடகமா? என்ற ஐயத்தை உறுதி செய்கிறது.
 02) சாய்ந்தமருதைப் பொறுத்த வரையில், அதன் உள்ளூராட்சி சபையைப் பெற்றுக்கொடுப்பதில் 99 சதவீதமான பொறுப்பு அந்தக் கட்சிக்கே இருக்கின்றது என்ற நியாயமான காரணத்தினால், அதன் தலைவர் றவுப் ஹக்கீமினூடாக அதனை முன்னெடுக்க ஆரம்பித்ததிலிருந்து பல தடவைகள் பல சந்தர்ப்பங்களில் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்திருந்தார். சாய்ந்தமருது கடற்கரை வீதியில் இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கு முந்திய பொதுக்கூட்டத்தில் வைத்து மக்கள் வெள்ளத்தின் முன்பாகவும் அந்த வாக்குறுதியை உறுதி செய்திருந்தார்.
03) முஸ்லிம் காங்கிரசை விட்டு வெளியேறுவதற்கு முன்பதாக அப்போது கிழக்கு மாகாண சபையில் உறுப்பினராக இருந்த . எம். ஜெமீலினால் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டு, அது கிழக்கு மாகாண சபையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தது.
04) கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்பதாக நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  சாய்ந்தமருது சீ பிறீஸ் இல் நடைபெற்ற கூட்டத்தில் வைத்து அதன் தலைவர் கௌரவ அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அவர்கள் ஆற்றிய உரையில், “சகோதரர் ஜெமீல் என்னோடும் எங்கள் கட்சியோடும் சேர்ந்திருப்பது எதனைக் கேட்டுமல்ல. அவர் கேட்பதெல்லாம் உங்களின் ஊருக்கான உள்ளூராட்சி சபையைப் பெற்றுத் தருமாறு என்றே. எனவே, பொதுத்தேர்தலுக்குப் பின்னர் அதனைப் பெற்றுத் தருவேன்என்று தெரிவித்திருந்தார்.
 05) கல்முனைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் பல சந்தர்ப்பங்களில், பல கூட்டங்களில்சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை வழங்குவதில் தனக்கு எதுவிதமான ஆட்சேபனை இல்லையென்றும், தனது தலைவருடன் சேர்ந்து தமது கட்சியினூடாக அதனைப் பெற்றுத் தருவேன்என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டும் கூறியிருந்தார்.
06) அண்மையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வைத்து சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை வழங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரையும், அதிகாரிகளையும் கேட்டுக்கொள்வதென்ற பிரேரணை கௌரவ பிரதியமைச்சர் எச.எம்.எம். ஹரீஸினால் பிரேரிக்கப்பட்டு, கல்முனையின் முன்னாள் பிரதி மேயரினால் ஆமோதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
 07) ஏறாவூர் மற்றும் கண்டியில் இடம்பெற்ற மு. கா. இன் பேராளர் மாநாடுகளில் குறித்த விடயம் பற்றிப் பேசப்பட்டும், பிரகடனமாக நிறைவேற்றப்பட்டும், அதன் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டீருந்தது.
08) சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நிருவாகத்தினர், சாய்ந்தமருது நலன்புரி மன்றம் மற்றும் மறுமலர்ச்சி இயக்கம் போன்றன சம்பந்தப்பட்ட பல தரப்பினருக்கும் எழுத்து மூலமாக வேண்டுகோள்களை விடுத்திருக்கின்றனர். பல விதமான வாக்குறுதிகளும், நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய வார்த்தைகளும் பொறுப்பானவர்களினால் இதுவரை வழங்கப்பட்டு வந்த போதிலும், அதற்கான எந்தவிதமான காத்திரமான நகர்வுகளையும் எம்மால் அவதானிக்க முடியவில்லை. ஏதோ கடமைக்கு சொல்வது போல வார்த்தைகளும், செய்வது போல செயற்பாடுகளும் இருப்பதாகவே தோன்றுகின்றது. உள்ளூராட்சி சபைகளுக்குப் பொறுப்பான தற்போதைய கௌரவ அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களை மு. கா. தரப்பினரும், . . . கா. தரப்பினரும் இது விடயமாகத் தனித்தனியாக சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இந்த நிலையில், எல்லை மீள்நிர்ணய அறிக்கை எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 15 ஆம் திகதி வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவிருப்பதாகவும், அதன் பிறகே சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபைக்கான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்றும் சொல்லப்படுவது காலத்தை இழுத்தடிப்பதற்கான ஒரு முயற்சியா? என்ற சந்தேகமும் எழுகின்றது. எது எப்படியோ, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்குரிய திகதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபை வர்த்தமானி மூலமாக ஒரு வேளை பிரகடனப்படுத்தப்படாமல், மாநகர சபைக்கான தேர்தலொன்றுக்காக குறித்த அரசியல் கட்சிகளும், அவை சார்ந்த உள்ளூர் வேட்பாளர்களும் மக்கள் முன் வந்தால் அந்த நிலைமையை மக்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் உரிய நேரத்தில் வித்தியாசமான கோணத்தில் மக்கள் முன் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டியிருக்கும். அனைத்துத் தரப்பினராலும் பல விதமான முயற்சிகளும் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலைமையில், அரசியல்வாதிகளின் ஒத்துழைப்போடும் திரை மறைவில் அரங்கேற்றப்படுகின்ற சதி நடவடிக்கைகள் காரணமாக சில பின்னடைவுகளும் ஏற்படுகிறது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சதிகாரர்களுக்கெல்லாம் சதிகாரன் ஒருவன் இருக்கின்றான் என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டு முடிந்த வரை அதிகமதிகமாக துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு மக்களை அன்பாய்க் கேட்டுக்கொள்கின்றோம். “அவர்களும் சசூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்”. (அல்-குர்ஆன் 8:30) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அநீதி இழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு, உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை”. (புகாரி: 2448ää 4347)

விரைவாக சிந்தியுங்கள்! விரைந்து செயற்படுங்கள்!! ஒற்றுமைப்படுங்கள்!!! 

சாய்ந்தமருது நலன்புரி மன்றம் 

 29. 07. 2016 (Sainthamaruthu   Welfare   Forum)


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top