சொத்துக்கள் தொடர்பில் சிரேஷ்ட அங்கத்தவர்கள் கேள்வி!

நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்!!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் மற்றும் அவற்றின் நிர்வாகம் குறித்து கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் பகிரங்கமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நெருக்கடிக்குள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது
கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள், தான் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தொடர்ந்தும் செயற்பட வேண்டுமென்பதற்காக கட்சியின் பெயரில் சில சொத்துக்களை விட்டுச் சென்றிருந்தார்.
அவருக்குப் பின் கட்சியின் தலைமைத்துவத்துக்கு வந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறித்த சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பில் தனக்கு நெருக்கமானவர்களை ஈடுபடுத்தியுள்ளதாக குற்றச்சாட்டொன்று அவர் மீது சுமத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் விபரம், அவற்றினை நிர்வகிப்போர் குறித்த விபரங்களை வெளியிடுமாறு கோரி அக்கட்சியின் மூத்த போராளிகளினால் கட்சித் தலைமைக்கு கடிதம் ஒன்றும். அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்த பட்சம் கட்சித் தலைமையகமான தாருஸ் ஸலாம் கட்டிடத்தில் இயங்கும் அலுவலகங்கள் அளிக்கும் வாடகை, கட்சிக்கு உரித்தான காணித்துண்டுகளின் விற்பனை மூலம் கிடைத்த வருமானம் போன்றவற்றுக்கு என்ன நடந்தது என்பது குறித்தாவது நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனராம்.

இது தொடர்பில் ஓரிரு வாரங்களுக்குள் கட்சித் தலைவர் அமைச்சர் ஹக்கீம் பதிலளிக்காது போனால் அவருக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கப் போவதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top