அமைச்சர் ஹக்கீம் யாழ்ப்பாணத்தில் கூறிய அறிவுரை!

தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிப்பு!!

போர்க்குற்றம் தொடர்பில் இராணுவத்திற்கு எதிரான விசாரணை அவசியமில்லை. போரில் நடந்த இழப்புக்களுக்கும் குற்றங்களுக்கும் தீர்வு வேண்டும் என்று தமிழ் மக்கள் அடம்பிடித்தால், நல்லிணக்கம் ஏற்பட மாட்டாது என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சருமா ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த அறிவுரை தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளாதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் காலம்சென்ற எம். சிவசிதம்பரத்தின் 93 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு தின நிகழ்வு கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணம் கரவட்டி, தச்சை அறநெறி பாடசாலையில் நடைபெற்றபோது சிவசிதம்பரத்தின் நினைவுப் பேருரையும் நல்லிணக்கத்தை ஏற்படுவதில் சவால்கள் என்ற தலைப்பிலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம்  உரையாற்றினார். அதன்போதே இக்கருத்தை அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டதில் ஆச்சரியங்கள் இல்லை. ஏனெனில் ஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது, போர்க்குற்ற விசாரணையைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு ஜெனிவாவுக்குச் சென்ற ரவூப் ஹக்கீம் அங்கு தமிழ் மக்களுக்கு எதிராக கடும் பிரசாரம் செய்தார் என தமிழ் மக்கள் அமைச்சரின் இப்பேச்சுக்கு ஆத்திரப்பட்டு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அமைச்சர் தமிழ் மக்களுக்கு கூறிய அறிவுரை குறித்து தமிழ் மக்கள் வெளியிட்டிருக்கும் கருத்துக்களில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
வன்னிப் போரில் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட போது, எதுவும் பேசாமல் பார்த்திருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் இப்போது, அடம்பிடித்தால் நல்லிணக்கம் ஏற்படாது என்று தமிழ் மக்களுக்கு அறிவுரை கூறுவதுதான் ஆச்சரியத்துக்குரியது.
பேரினவாத ஆட்சி அதிகாரத்தின் கொடூரத்தனங்கள் அரங்கேறிய வன்னிப் பெருநிலப்பரப்பில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்றொழித்த போது அதனைப் பார்த்திருந்த ரவூப் ஹக்கீம் தமிழ் மக்களுக்கு அறிவுரை கூற எந்த வகையிலும் தகுதியற்றவர்.
அதேநேரம் அமரர் மு.சிவசிதம்பரத்தின் பிறந்த தின நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்து கொள்வது என்பது எந்த வகையிலும் பொருத்துடையதன்று.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சிவசிதம்பரத்தின் பிறந்த தின நிகழ்வில் நல்லதொரு அரசியல் உரை இடம்பெற வேண்டும் என நினைத்திருந்தால், தமிழ் மக்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என குரல் கொடுக்கக் கூடிய சிங்கள அரசியல்வாதிகளை அழைத்து அவர்கள் உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
இதைவிடுத்து போர்க்குற்ற விசாரணையைத் தடுக்க பாடுபட்ட ஒருவரை-தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கக்கூடாது என சதா சிந்திக்கின்றவரை அழைத்து அவரை உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்தமை மடமைத்தனம்.
சரி! நல்ல நோக்கத்துடன் அமைச்சர் ரவூப் ஹக்கீமை அழைத்து பேச வைத்தோம் என்றால், அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்ன பேசினார். நடந்து முடிந்த சம்பவங்களுக்கு தீர்வு வேண்டும் என்று தமிழினம் அடம் பிடித்தால் நல்லிணக்கம் ஏற்படாது என்று பேசினார். இவ்வாறு கூறுவதற்கு இவர் யார்?
போரில் தம் உறவுகளை இழந்தவர்களைப் பற்றி பேசாமல் விட்டு விடுங்கள் என்று கூறுகின்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், வடபுலத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நினைவை பெரும் எடுப்பில் ஏற்பாடு செய்தது ஏன்? அந்த நிகழ்வையும் மறந்து-மன்னித்து விட்டிருக்கலாம் அன்றோ!

அதைச் செய்யாதவர் தமிழர்களின் இழப்புகளுக்கு தீர்வு தேடக்கூடாது என்று கூறுவது அவர் கடைப்பிடிக்கும் இஸ்லாமிய மார்க்கத்துக்கு ஏற்புடையதா? நியாயமானதா?

அமரர் மு.சிவசிதம்பரத்தின் பிறந்த தின நிகழ்வு நினைவில்; தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் முன்னிலையில், போர்க்குற்ற விசாரணை அவசியமில்லை என்று ரவூப் ஹக்கீம் எப்படிச் சொல்ல முடியும். இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top