பரீட்சைக்கு தோன்றும் மாணவர்கள் கையடக்க
தொலைபேசிகள் எடுத்து வந்தால் பெறுபேறுகள் ரத்து!

பரீட்சை திணைக்களம் எச்சரிக்கை


கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோன்றும் மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள், ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் எடுத்து வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சை திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. எனினும், பரீட்சார்த்திகள் இலத்திரனியல் சாதனங்கள் வைத்திருந்தால் பரீட்சை பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் என அந்த திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவொரு அரசாங்கப் பரீட்சைகளும் எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பரீட்சாத்திகளிடம் இருந்து கண்டு பிடிக்கப்படும் கையடக்கத் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்கடிகாரம் உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் அரசுடமையாக்கப்படும்.
எதிர்வரும் இரண்டாம் திகதி உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் இவற்றை கண்டுபிடிப்பதற்கென நான்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வலய மட்டத்திலும் விசேட குழுக்கள், கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலத்திரனியல் சாதனங்களை மாணவர்கள் எடுத்து வருகிறார்களா என்பதனை தீவிரமாக அவதானிக்குமாறு பரீட்சை மண்டப உத்தியோகத்தர்களுக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top