“ஜன சட்டன பாத யாத்திரைப் போராட்டம்”
மஹிந்தவின் தலைமையில் இன்று காலை 9.00மணிக்கு ஆரம்பம்
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் கூட்டு எதிர்க்கட்சியினரின் கொழும்பு நோக்கிய “ஜன சட்டன பாத யாத்திரைப் போராட்டம்” இன்று 28 ஆம் திகதி காலை ஒன்பது மணியளவில் கண்டி புறநகர் கெடம்பேயில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.
கண்டி மாநகருக்குள் இருந்து பாதயாத்திரையைத் தொடங்குவது குறித்து நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவு காரணமாக இந்த மாற்று ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் அங்கத்துவ கட்சிகள் அனைத்தும் இந்தப் பாதயாத்திரையில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதயாத்திரைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கவுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி இப்பாத யாத்திரை கொழும்பை வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாத யாத்திரைப் போராட்டம் பேராதனையில் ஆரம்பமாக உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அடக்குமுறைகள், அரசியல் அமைப்பு திருத்தம், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமை, வரி அதிகரித்தல், போர்க்குற்றவியல் நீதிமன்றம் அமைத்தல், எட்கா உடன்படிக்கை, அரசியல் பழிவாங்கல்கள் உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பாத யாத்திரை மாலை 4.30 அளவில் மாவனல்ல நகரை சென்றடையவுள்ளது.
நாளை காலை 9.00 மணிக்கு மீளவும் ஆரம்பமாகும் பாத யாத்திரை மாலை 4.30 அளவில் நெலும்தெனிய நகரை சென்றடையவுள்ளது.
30ம் திகதி காலை 9.00 மணிக்கு மீளவும் ஆரம்பமாகும் பாத யாத்திரை மாலை 4.30 மணி அளவில் நிட்டம்புவ நகரை சென்றடையும் எனவும், 31ம் திகதி நிட்டம்புவவிலிருந்து ஆரம்பமாகி மாலை 4.30 அளவில் கிரிபத்கொட நகரை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி கிரிபத்கொடவிலிருந்து கொழும்பை சென்றடையும் என தெரிவிக்கப்படுகிறது.
பிற்பகல் 3.00 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கொழும்பில் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
இந்தக் கூட்டம் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment