நிறைவேறாமல் போன அப்துல் கலாமின் ஆசை
அன்னாரது உதவியாளரின் நூலில்
பதிவு
இந்தியக் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மூத்த சகோதரரான முஹம்மது முத்து மீரா லெப்பை மரைக்காயர்(99) ராமேஸ்வரத்தில் உள்ள தங்களது பூர்விக இல்லத்தில் வாழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் தனது தம்பி அப்துல் கலாமை சந்திக்க அவர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார்.
இரவு உணவின்போது சகோதரனைச் சந்தித்து மனம்விட்டு பேசிய அப்துல் கலாம், அவரை அன்புடன் சொந்த ஊருக்கு வழியனுப்பி வைத்தார். அப்போது, தனது உதவியாளரை அருகில் அழைத்த கலாம், வரும் நவம்பர் மாதம் 5-ம் திகதி என் சகோதரனுக்கு 99-வது பிறந்தநாள் வருகிறது. இந்த ஆண்டுக்குள் அவர் எத்தனைமுறை சூரியனை சுற்றி வந்துள்ளார் என்று சரியாக சொல்லுங்களேன் பார்ப்போம்? என்று கேட்டுள்ளார்.
ஒவ்வொரு முக்கியமான நபரின் பிறந்தநாட்களின் போதும் இப்படி ஒரு கேள்வியை அவர் கேட்பது வாடிக்கையாக இருந்துள்ளது, ராக்கெட் விஞ்ஞானியான அவர், சூரியனை பூமி சுற்றிவரும் நாட்களையும், சந்திரன் பூமியை சுற்றிவரும் நாட்களையும் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என கருதினார்.
அடுத்த ஆண்டு எனது சகோதரனின் 100-வது பிறந்தநாள் வருகிறது. அப்போது, ராமேஸ்வரத்தில் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து, பேனர்கள் வைத்து, ஸ்பீக்கர்களில் நல்ல தமிழ் பாட்டு எல்லாம் போட்டு அவரது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடி அவருக்கு ஒரு ’சர்ப்ரைஸ் பார்ட்டி’ கொடுக்க வேண்டும் என தனது உதவியாளரான ஸ்ரீஜன் பால் சிங்கிடம் அப்துல் கலாம் அன்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த ஆசையை அவர் வெளியிட்ட இரண்டே மாதங்களில் அப்துல் கலாம் மர்ணித்துவிட்டார்.
மேற்கண்ட தகவல்களை எல்லாம் அப்துல் கலாமிடம் நீண்டகாலம் உதவியாளராக பணியாற்றிய ஸ்ரீஜன் பால் சிங், "அப்துல் கலாமின் வாழ்க்கை பாடத்தை தர வேறு எதை நான் தர முடியும்” (What Can
I Give?: Life Lessons from My Teacher, A.P.J.Abdul Kalam) என தலைப்பிடப்பட்டுள்ள தனது புதிய நூலில் பதிவிட்டுள்ளார்.
சகோதனின் 100-வது பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் எல்லாம் மிகவும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என கலாம் விரும்பியுள்ளார்.
100-வது பிறந்தநாள் பரிசாக சகோதரனுக்கு என்ன தரலாம்? என்று கலாமும் அவரது உதவியாளரான ஸ்ரீஜன் பாலும் நீண்ட நேரம் யோசித்துள்ளனர். இறுதியாக, முஹம்மது முத்து மீரா லெப்பை மரைக்காயரின் நூறாவது பிறந்தநாள் பரிசாக நாடு முழுவதும் நூறு இடங்களில் நூலகங்களை திறக்கலாம் என்றும் 2015-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்தே நூலகங்களை திறக்கும் திட்டத்தை தொடங்கி விடலாம் என்றும் அப்துல் கலாம் தீர்மானித்து வைத்திருந்தார்.
இதன்விளைவாக, அவரது மறைவுக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘கலாம் நூலகம்’ திட்டம் தொடங்கப்பட்டதாகவும் இந்த புதிய நூலில் ஸ்ரீஜன் பால் சிங் மேலும் பதிவு செய்துள்ளார்.
0 comments:
Post a Comment