21 பெண்களை விடுதலை செய்தது போகோ ஹராம்
நைஜீரிய அரசு தகவல்
கடத்தி செல்லப்பட்ட
200-க்கும் மேற்பட்ட பெண்களில் 21 பேரை போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு விடுதலை செய்துள்ளதாக
நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது
நைஜீரியாவின் சிபோக் பகுதியில் பாடசாலையில் பரீட்சை எழுதி கொண்டிருந்த மாணவிகளை போகோ ஹராம் தீவிரவாதிகள் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்தி சென்றனர். 200க்கும் மேற்பட்ட மாணவிகள் இவ்வாறு கடத்தி செல்லப்பட்டனர்.
அவர்களை மீட்க கோரி சாலைகளில் இறங்கி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாணவிகளை மீட்கும் பணியில் நைஜீரிய ராணுவம் தீவிரப்படுத்தப்பட்டது. அமெரிக்காவும் உதவி குழுவை அனுப்பியது.
ஆனால் மாணவிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது. இதற்கிடையே மாணவிகளை தீவிரவாதிகள் மதமாற்றம் செய்துவிட்டனர் என்று வீடியோ காட்சிகள் வெளிவந்தது.
இந்நிலையில், கடத்தி செல்லப்பட்ட 200 பேரில் 21 பெண்களை போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு விடுதலை செய்துள்ளதாக நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே நைஜீரிய ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் கர்பா ஷெகு இது குறித்து கூறுகையில், "மீதமுள்ளவர்களை விடுதலை செய்வது குறித்து தொடர்ச்சியாக போகோ ஹராம் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் சுவிஸ் அரசு மூலம் போகோ ஹராம் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment