திருமண
வைபவத்தில் தற்கொலைப்படை தாக்குதல்
30
பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழப்பு!
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் நடைபெற்ற
ஒரு திருமண வைபவத்தில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 30 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவில் கடந்த மூன்றாண்டுகளாக உள்நாட்டுப் போர்
உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சில முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.
தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து, அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை ஒழிக்க அந்நாட்டின்
ராணுவத்துடன் சில குர்த் இன மக்கள் படைகளும் அங்கு ஆயுதப்போரில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில்,
அரசுக்கு ஆதரவான ஜனநாயக
குர்த் படைப்பிரிவை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் குடும்பத்தை சேர்ந்தவரின் திருமண
வைபவம் ஹசாக்கே மாகாணத்தில் உள்ள டால் டாவில் என்ற கிராமத்தில் உள்ள ஒரு
மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
திருமண வைபவத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சி
கொண்டாட்டத்தில் இருந்தபோது கூட்டத்தில் இருந்த ஒரு தீவிரவாதி தனது உடலில்
கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்தான். இதில் அந்த தீவிரவாதியின் உடல்
சின்னாபின்னமாக கிழிந்து சிதறியது.
இந்த தாக்குதலில் திருமண மண்டபத்தில் இருந்த மேலும் 30 பேர்
உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இருபதுக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன்
ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக
இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
குர்த் இன மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இதுபோன்ற
தற்கொலைப்படை தாக்குதல்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் அடிக்கடி அரங்கேற்றி வருவதால் இந்த
தாக்குதலுக்கும் அவர்கள்தான் காரணம் என்று உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டிருக்கின்றன.
0 comments:
Post a Comment