முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை "தலாக்' முறைக்கு

இந்திய முஸ்லிம் பெண் தலைவர்கள் எதிர்ப்பு!

முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை தலாக் கூறி திருமண பந்தத்திலிருந்து ஆண்கள் விடுபடும் முறைக்கு இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சில முஸ்லிம் பெண் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருமண உறவிலிருந்து எளிதாக விடுபடுவதற்கு இஸ்லாமியர்களால் பயன்படுத்தப்படும் தலாக் முறை குறித்து உணர்ச்சி பொங்கும் விவாதங்கள் அவ்வப்போது அந்நாட்டில் அரங்கேறி வருகின்றன.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் வழக்குத் தொடுத்துள்ளபோதிலும், தங்களது தனிப்பட்ட சட்டத்திட்டத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் கூறி வருகின்றன.
எனினும், தலாக் முறையானது, பெண்ணுரிமைக்கும், பாலினப் பாகுபாடற்ற தன்மைக்கும் எதிராக உள்ளதால் அந்த நடைமுறைக்கு இந்திய மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, அனைத்து சமூகத்தினருக்கும் சமமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மக்களின் கருத்தறியவும் முற்பட்டுள்ளது.
இந்நிலையில், தலாக் முறைக்கு இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளின் முஸ்லிம் பெண் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

நஜ்மா ஹெப்துல்லா

இந்த விவகாரம் தொடர்பாக மணிப்பூர் மாநில ஆளுநரும், முன்னாள் மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சருமான நஜ்மா ஹெப்துல்லா நேரிடையாக கருத்து தெரிவிக்காதபோதிலும், மூன்று முறை தலாக் கூறும் முறைக்கு இஸ்லாத்துக்குப் பொருந்தாத விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.




சுபாஷினி அலி

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சுபாஷினி அலி கூறுகையில், ஆண்களால் பெண்கள் விவாகரத்து செய்யப்படும் ஒருதலைப்பட்சமான முறை தவறானது; முஸ்லிம் மதகுருமார்கள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.




ஷப்னம் ஹாஷ்மி

சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி கருத்து தெரிவிக்கையில், பாலியல் பாகுபாடற்ற தன்மைக்கு எதிராக உள்ள தலாக் முறையை நீக்க வேண்டும். நாகரிகமான சமுதாயத்தில் இதுபோன்ற நடைமுறையைப் பின்பற்றக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.





முலாயம் சிங் யாதவ்

இதனிடையே, சமாஜவாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறுகையில், பொது சிவில் சட்ட விவகாரம் தொடர்பாக முடிவு எடுப்பதை மதத் தலைவர்களிடம் விட்டுவிட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top